TNPSC Thervupettagam

ஊகங்களுக்குக் கொடுக்கப்பட்ட விலை | அஞ்சலி: ஜி.என்.சாய்பாபா

October 17 , 2024 39 days 62 0

ஊகங்களுக்குக் கொடுக்கப்பட்ட விலை | அஞ்சலி: ஜி.என்.சாய்பாபா

  • “நாட்டுக்கு ஆபத்து என்கிற ஊகங்களுக்காகச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பலி கொடுக்க முடியாது” என அதிகார வர்க்கத்துக்கு அறிவுறுத்திவிட்டுத்தான், சமூகச் செயல்பாட்டாளரான பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்தது. ஏழு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாய்பாபா அப்படித்தான் விடுதலையானார். பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு ஆட்பட்டாலும் சமூகப் போராளி என்னும் நிலையிலிருந்து சிறிதும் பின்வாங்காத சாய்பாபா, அக்டோபர் 12 அன்று காலமானார்.
  • சாய்பாபா ஆந்திரத்தில் உள்ள அமலாபுரம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால், கைகளைத் தரையில் ஊன்றித்தான் இவரால் நகர முடியும்; பிற்காலத்தில் சக்கர நாற்காலியின் உதவியோடு நடமாடினார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் உயர் கல்வி பயிலும் காலத்திலிருந்தே இவர் ஈடுபட்டுவந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆனார்.
  • பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறைவாசிகள் போன்றோரின் உரிமைகள், இடஒதுக்கீட்டுக்கான ஆதரவு எனப் பல திசைகளில் சாய்பாபாவின் போராட்டங்கள் அமைந்தன. ஆந்திரத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்தார். நில ஆக்கிரமிப்பு, சட்ட விரோதக் கனிமச் சுரங்கங்கள் போன்ற முறைகேடுகளுக்கு எதிராகவும் இவரது குரல் ஒலித்தது.
  • சாய்பாபாவின் நண்பர்களும் குடும்பத்தினரும் அஞ்சியபடியே, 2014இல் அரசு நடவடிக்கைக்கு அவர் உள்ளாக்கப்பட்டார். அவர் உள்பட ஆறு பேர், மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்து தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மகாராஷ்டிர அரசால் குற்றஞ்சாட்டப்பட்டனர்; சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச்சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு, நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் சிறையும் பிணையுமாக சாய்பாபாவின் வாழ்க்கை கழிந்தது. 2017இல் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மிகக் கொடுமையான, தொடர்ச்சியான சிறை வாழ்க்கையை அவர் அனுபவிக்க நேர்ந்தது. மாற்றுத்திறனாளியான அவர், கண்ணியமான முறையில் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூட அனுமதிக்கப்படவில்லை என விமர்சிக்கப்படுகிறது.
  • தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், சாய்பாபா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, 2022இல் மும்பை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சாய்பாபாவுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 2024 மார்ச் 5இல் அவர் உள்பட அனைவரையும் விடுவித்தது.
  • பல்வேறு உடல்நலக் கோளாறுகளுடன் வெளியே வந்த சாய்பாபா பித்தப்பை கோளாறு சிகிச்சைக்காக ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சில நாள்களில் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார்.
  • சாய்பாபா - வசந்தகுமாரி தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். விடுதலைக்குப் பின், சாய்பாபா குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்பினார். அவர் சிறையில் இருந்த காலத்தில், அவரது தாய் இறந்தார். தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக்கூட சாய்பாபா அனுமதிக்கப்படவில்லை. இறப்புக்குப் பின் தனது பூதஉடலை மருத்துவக் கல்லூரிக்கு அளிக்க வேண்டும் என்கிற அவரது இன்னொரு விருப்பம் குடும்பத்தினரால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • சிறை நாள்களில் அவர் எழுதிய நூலின் தலைப்பு, ‘என் வழியைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?’. எளிய மனிதர்களின் பிரதிநிதியாக விளங்கிய சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, அவர் மீது அதிகார வர்க்கம் கொண்டுள்ள அச்சத்தின் வெளிப்பாடு என்றே கூறலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories