TNPSC Thervupettagam

ஊசலாடும் வாழ்விட உரிமை

November 3 , 2021 998 days 482 0
  • தமிழ்நாட்டில் மொத்தம் 48.45% மக்கள் நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசித்துவருகின்றனர். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டு மக்கள்தொகையில் 27% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசித்துவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 61,432 குடும்பங்கள் (சுமார் 2.5 லட்சம் மக்கள்) சென்னையிலிருந்து புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், நாவலூர் போன்ற பகுதிகளுக்கு மறுகுடியமர்வுத் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  • கடந்த 5 ஆண்டுகளில் (2015 – 2020) 69 குடிசைப் பகுதிகளில் காலங்காலமாக வசித்துவந்த 18,725 குடும்பங்கள் (சுமார் 75,000 நபர்கள்) சட்டபூர்வமான அறிவிப்பு எதுவுமின்றி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 60 குடிசைப் பகுதிகள் பள்ளிக் கல்வி ஆண்டின் நடுவில் அகற்றப்பட்டுப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அகற்றப்பட்ட 69 குடிசைப் பகுதிகளில், 5 பகுதிகள் மட்டுமே மறுகுடியமர்வினால் ஏற்படும் சமூகத் தாக்கம் பற்றிய அறிக்கையையும், மறுகுடியமர்வு நடைமுறைத் திட்ட அறிக்கையையும் தயார்செய்துள்ளன.
  • இத்தகைய வெளியேற்றங்கள் ‘வளர்ச்சித் திட்டங்களின் விளைவாக நிகழும் கட்டாய வெளியேற்றம் மற்றும் இடப்பெயர்வு குறித்த ஐக்கிய நாடுகளின் கொள்கை விளக்கம் (2007)’ போன்ற பல சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
  • கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற மறுகுடியமர்வுத் திட்டப் பகுதிகளிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆராய்ந்து, குறை இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு சரிசெய்ய 2010-ல் தமிழ்நாடு அரசால் தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
  • இக்குழுவில், குடிசைப் பகுதிக்கான மறுகுடியமர்வு/ மறுவாழ்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 2021–2022ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை உரையில், இக்கொள்கை பரிசீலிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. 12, அக்டோபர், 2021 அன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சில தொண்டு அமைப்புகளுடனும் நிபுணர்களுடனும் இணைந்து மறுகுடியமர்வு/ மறுவாழ்வுக் கொள்கை வரைவை ஆங்கிலத்திலும், 16, அக்டோபர், 2021 அன்று தமிழிலும் வெளியிட்டது. வரைவுக் கொள்கை குறித்த பரிந்துரைகளையும் கருத்துகளையும் சமர்ப்பிக்க 15 நாட்கள் கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.
  • மாநில அளவிலான இக்கொள்கை, அனைத்துத் தரப்பினருடன் ஆலோசனை செய்யாமல் பொதுக் கலந்தாய்வின்றி வகுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான கொள்கையை வகுக்கும்போது, மக்கள் பங்கேற்புடன் அவர்களை உள்ளடக்கிய செயல்முறைத் திட்டத்தை வரையறுப்பதே ஜனநாயகத்தின் சாராம்சமாகும். அதுமட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் அடிப்படை உரிமைகளையும் தீர்மானிக்கும் வகையில் அமையும் கொள்கையை முடிவுசெய்ய ஏன் இவ்வளவு அவசரம்? மாநில அளவிலான கொள்கையை முடிவுசெய்யும் முன், மாநில அளவிலான கலந்துரையாடல் நடத்துவது மிகவும் இன்றியமையாதது.
  • மறுகுடியமர்வு/ மறுவாழ்வுக் கொள்கை வரைவை இறுதி செய்யும்வரை வலுக்கட்டாயமான வெளியேற்றங்கள் தடைசெய்யப்பட வேண்டும். இக்கொள்கை, பள்ளிக் கல்வி ஆண்டின் நடுவில் நடைபெறும் வெளியேற்றங்களைத் தடைசெய்ய வேண்டும். ஆண்டின் இடைப்பகுதி வெளியேற்றத்தால் குழந்தைகள் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்டுச் சமூகப் பின்னடைவுக்குத் தள்ளப்படுவார்கள்.
  • மறுகுடியமர்வு பற்றி முடிவெடுப்பதற்கான செயல்முறையை வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கூவம் நதி மறுசீரமைப்புத் திட்டத்தின் காரணமாக மறுகுடியேற்றம் செய்ய வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாய்ப்புகள் இருந்த பின்பும் அதனைச் செயல்படுத்த அரசு முன்வரவில்லை. அரசு அனைத்துச் சாத்தியங்களையும் ஆராய்ந்த பின்பு, மக்களை இடமாற்றம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே மறுகுடியமர்வு பற்றி முடிவெடுக்க வேண்டும். முடிவெடுக்கும் இச்செயல்முறைகள் வரைவு மறுகுடியமர்வுத் திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
  • குடிசைப் பகுதிகளில் வசித்துவரும் மக்களின் வாழ்விடமும் வாழ்வாதாரமும் சேர்ந்தே இருக்கும். ஆகவே, அவர்களின் மாற்று இடங்களை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அருகில் அமைத்துத்தருவது மிகவும் அவசியம். இவ்வரைவுக் கொள்கை மறுகுடியமர்வுக்கான இடத்தைத் தேர்வுசெய்யும்போது, அந்த இடங்கள் நகரங்களுக்கு அருகில் வேலைவாய்ப்புக்கு ஏற்ற இடத்தில் உள்ளதா என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் பேருந்து அல்லது ரயில்கள் மூலம் செல்லும் பயண நேரம் அரை மணி நேரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் எனவும் இக்கொள்கை குறிப்பிடுகிறது. இல்லையென்றால், சென்னையில் வாழும் எளிய மக்களைப் பிற மாவட்டங்களில் அமைந்துள்ள எந்த ஒரு நகரப் பகுதிக்கும் இடமாற்றம் செய்ய இக்கொள்கை வழிவகுத்துவிடும்.
  • இதற்கு எண்ணூர் அனல்மின் நிலையம் எதிரில் அமைந்துள்ள நிலத்தில் கட்டப்படும் 6,000 வீடுகளே சான்று. நடுத்தர மற்றும் உயர் வருமானப் பிரிவினரால் நிராகரிக்கப்பட்டு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ‘அபாயகரமான நிலம்’ என வகைப்படுத்தப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இந்த நிலம் ‘குடியிருப்புப் பகுதி’யாக மீண்டும் வகைப்படுத்தப்பட்டு, எளிய மக்களுக்கான மறுகுடியமர்வுத் திட்டத்தின் கீழ் இந்நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
  • அது மட்டுமல்லாமல், இவ்வரைவுக் கொள்கையில் அமைக்கப்படும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வாழ்விட மேம்பாட்டுக் குழுவில், அரசுசாரா பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒருவர் மட்டும்தான். இதில், ஏற்கெனவே சுமார் 20 உயர் அதிகாரிகள் இருப்பதால், அரசுசாரா பிரதிநிதிகளின் கருத்துகளின் ஒப்பீடு குறைவாகவே இருக்கும். மேலும், இந்தக் கொள்கை எதற்காக வரையறை செய்யப்படுகிறது என்ற விளக்கம் வழங்கப்படவில்லை. கடந்த மறுசீரமைப்புத் திட்டங்களிலுள்ள சவால்களைக் கண்டறிந்தால்தான் அதைச் சரிசெய்யும் உத்திகளையும் கண்டறிய முடியும்.
  • சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் பல புதிய கொள்கைகளையும், திட்டங்களையும் அறிவித்துச் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசு, இந்த வரைவுக் கொள்கையையும் ஜனநாயக முறையில் பலதரப்பட்ட மக்களின் கருத்துகளையும் உள்ளடக்கிய கொள்கையாக அமைக்க வேண்டும்.

நன்றி: தமிழ் இந்து (03 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories