- இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருதுக்கு பத்திரிகையாளர்கள் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- 1935-இல் ஜெர்மனியின் நாஜி நிர்வாகம் முதலாவது உலகப்போருக்குப் பிறகு மீண்டும் தன்னை தயார்படுத்திக் கொள்வதை வெளிக்கொணர்ந்த கார்ல் வான் ஓசீட்ஸ்கீக்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு இப்போதுதான் மீண்டும் நோபல் விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது.
- ஆதாரங்களின் அடிப்படையிலான ஊடக வெளிப்பாடுகள்தான் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பதற்கான அடிப்படை என்பதை பத்திரிகையாளர்கள் இருவருக்கு நோபல் விருது அறிவித்து அங்கீகரித்திருக்கிறது தேர்வுக் குழு.
அமைதிக்கான நோபல் விருது
- பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ரெஸாவும், ரஷிய பத்திரிகையாளர் டிமித்ரி முராடோவும் தங்கள் நாட்டு அரசுகளின் அடக்குமுறைகளையும் மீறி பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக போராடி வருவதை பாராட்டி அவர்களுக்கு நோபல் விருது வழங்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
- சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் அடைமழையாய் வந்துவிழும் செய்திகளாலும் கருத்துகளாலும் பொதுமக்கள் திக்குமுக்காடுகின்றனர்.
- ஒருவகையில் எந்தவிதக் கட்டுப்பாடோ கண்காணிப்போ இல்லாமல் செய்திகள் பொதுவெளியில் பரப்பப்படுவது கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு என்றாலும்கூட, பொய்ச் செய்திகளையும், கற்பனை பரப்புரைகளையும், துவேஷ சிந்தனைகளையும் அதன் மூலம் உலவவிட்டு குழப்பத்தை விளைவிக்கும் சூழலும் உருவாகியிருக்கிறது.
- இந்தப் பின்னணியில் நியாயமான, நேர்மையான முறையில் தகுந்த ஆதாரங்களுடனான செய்திகளை வெளியிடும் இரண்டு முக்கியமான பத்திரிகையாளர்கள் வெவ்வேறு நாடுகளில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருப்பதை எத்துணை பாராட்டினாலும் தகும்.
- மரியா ரெஸா சிறுவயதிலேயே தாயாருடன் அமெரிக்காவில் குடியேறியவர். சிஎன்என், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க ஊடகங்களில் பணியாற்றிய அனுபவசாலி.
- 2012-இல் "ரெப்லர்' என்கிற செய்தி வலைத்தளத்தை உருவாக்கிய 58 வயது மரியா ரெஸாவின் கவனம் பிலிப்பின்ஸின் சர்வாதிகாரியாக இயங்கும் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவின் அராஜக ஆட்சிக்கு எதிராக குரலெழுப்ப முற்பட்டது. அவருக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. அதிகார அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
- பிலிப்பின்ஸில் போதை மருந்து கடத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை என்கிற பெயரில் ரோட்ரிகோ டுடேர்தேவின் அரசு நிகழ்த்திய படுகொலைகளைத் துப்பு துலக்கி வெளியிட முற்பட்டது "ரெப்லர்' செய்தி நிறுவனம்.
- அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே நிகழ்த்திய படுகொலைகள் ஆதாரங்களுடன் பதிவிடப்பட்டன. அதன் எதிரொலியாக அவர் மீது கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசால் மான நஷ்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு பிணையில் இருக்கிறார் மரியா ரெஸா.
- சமூக ஊடகங்கள் மூலம் ரோட்ரிகோ டுடேர்தே அரசு தவறான தகவல்களை பரப்புவது குறித்தும், அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக எவ்வாறு வன்மம் பரப்பப்படுகிறது என்பதையும், மரியா ரெஸாவும் அவரது "ரெப்லர்' செய்தி வலைத்தளமும் வெளியிட்டபோது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது.
- ரஷியாவின் நோவயா கெஸட்டா நாளிதழும் ஊடக சுதந்திரத்தை உயர்த்திப் பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
- 1993-இல் தனது நண்பர்கள் சிலருடன் ரஷியாவின் நடுநிலை நாளிதழான நோவயா கெஸட்டா, 59 வயது டிமித்ரி முராடோவால் தொடங்கப்பட்டது. அதிபர் புதினின் ஆட்சிக்கு எதிரான ஒரே நாளிதழ் என்கிற அளவில் துணிந்து செயல்படும் நோவயா கெஸட்டா, ரஷிய அரசின் பல ஜனநாயக விரோத செயல்பாடுகளை துணிந்து வெளியிட முற்பட்டது.
- அந்த நாளிதழில் பணிபுரியும் ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டிமித்ரி முராடோவுக்கு பல அச்சுறுத்தல்கள் அரசாலும், ஆளுங்கட்சியினராலும் விடப்பட்டும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது ஊடகக் கடமையை நிறைவேற்றி வருகிறது "நோவயா கெஸட்டா'.
- விளாதிமீர் புதினின் ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும், புதின் அரசு ஏவிவிடும் வன்முறை குறித்தும் துணிந்து வெளியிடும் ஒரே பத்திரிகையாக "நோவயா கெஸட்டா', கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. "தூதுவரைக் கொல்லலாம்.
- உண்மையைக் கொல்ல முடியாது' என்பதை தனது தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் "நோவயா கெஸட்டா', சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.
- ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் உண்மைகளால் மட்டுமே ஆட்சி நிர்வாகத்தில் நேர்மையை நிலைநிறுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
- ஆட்சியாளர்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் அதைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை ஊடகங்கள் வழங்க முடியும்.
- அதைப் புரிந்துகொண்டு மாற்றுக்கருத்தை ஊக்குவிப்பதன் மூலம் தவறுகளைத் திருத்திக் கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற முடியும் என்கிற உண்மையை ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் மறந்துவிடுகிறார்கள்.
- இது புதிதொன்றுமல்ல என்றாலும், சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் உலகெங்கும் அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.
- ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும், ஆட்சியாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதைக் கண்காணிப்பதிலும் ஊடகங்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதாக அமைகிறது மரியா ரெஸாவுக்கும், டிமித்ரி முராடோவுக்கும் அறிவிக்கப் பட்டிருக்கும் அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் விருது.
நன்றி: தினமணி (13 - 10 - 2021)