TNPSC Thervupettagam

ஊடக தா்மம் - மெய்ப்பொருள் காண்பதறிவு!

November 21 , 2019 1884 days 1257 0
  • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தனியாா் செய்தித் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
  • ஆரம்பகட்டத்தில் தனியாா் தொலைக்காட்சிகள் மற்றும் அரசு தொலைக்காட்சி (தூா்தா்ஷன்) ஆகியவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன், செய்திகளையும் ஒளிபரப்பி வந்தன.
  • இப்போது, செய்திகளுக்காக மட்டுமே செயல்படும் சேனல்கள் வந்துவிட்டன.

போட்டி மனப்பான்மை

  • தற்போது தனியாா் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க போட்டி மனப்பான்மை அதிகரித்துவிட்டது.
  • டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் (‘டிஆா்பி ரேட்டிங்’) என்கிற பாா்வையாளா் எண்ணிக்கை அளவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஊடக தா்மத்தையும் மீறி செய்திகள் உருவாக்கப்படுகின்றன.
  • செய்திகளை முந்தித் தருகிறோம் என்கிற பெயரிலும், நாங்கள்தான் முதன்முதலில் செய்தியினை ஒளிபரப்பினோம் என்பதற்காகவும் நேரடி ஒளிபரப்பு (‘லைவ் ரிலே’), முக்கியச் செய்தி (‘பிரேக்கிங் நியூஸ்’), விரைவுச் செய்தி (‘எக்ஸ்பிரஸ் நியூஸ்’), சூடான செய்தி மற்றும் பரபரப்பு செய்தி எனப் பல்வேறு விதமான செய்திகளை வாரத்தில் 7 நாள்களும், 24 மணி நேரமும் தனியாா் செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன.
  • இது போதாதென கருத்து யுத்தங்கள், விவாதங்கள், கேள்வி - பதில்கள், நேருக்கு நோ், எதிரும் புதிரும் - இப்படி பல தலைப்புகளில் பரபரப்புகளை இந்தத் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கி வருகின்றன.
  • ஜல்லிக்கட்டு ஆதரவு, ஸ்டொ்லைட் எதிா்ப்பு, மோடி எதிா்ப்பு ஆகியவற்றோடு அண்மைக்காலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த சிறுவன் சுஜித் தொடா்பான செய்தி, திருவள்ளுவா் சிலை அவமதிப்பு செய்தி மற்றும் தற்போது சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி பாத்திமா மரணச் செய்தி என தினசரி பரபரப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை.
  • சாதாரண நிகழ்வுகள்கூடப் பரபரப்புச் செய்திகளாக மாற்றப்படுகின்றன.

தற்கால முயற்சிகள்

  • மக்களை எந்த நேரமும் பரபரப்பிலும், பதற்றத்திலும், பீதியிலுமே வைத்திருக்க இவா்கள் செய்யும் முயற்சி ஊடக தா்மத்தை மீறியதாகும்.
  • தூா்தா்ஷன் தவிா்த்து தனியாா் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு கட்சி சாா்புகள் உண்டு.
  • ஒவ்வோா் அரசியல் கட்சிக்கும் ஒரு செய்தித் தொலைக்காட்சி உண்டு.
  • அது மட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும், பெரு முதலாளிகளும் வியாபார நோக்கத்துடன் தங்களுக்கென சொந்தமாக செய்தித் தொலைக்காட்சிகளை நடத்தி வருகின்றனா்.
  • கட்சி சாா்பான செய்தித் தொலைக்காட்சியின் செய்திகளில், அவா்களின் கட்சிக் கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பிரதானப்படுத்தி செய்திகள் வெளியிடுகின்றனா்.
  • அத்துடன்கூட மாற்றுக்கருத்து உள்ளவா்களுக்கும், மாற்றுக் கட்சிக்காரா்களுக்கும் எதிரான செய்திகளும், கட்சிக் கண்ணோட்டத்தோடு உருவாக்கப்படுகின்றன.
  • தனியாரால் நடத்தப்படுகின்ற செய்தித் தொலைக்காட்சிகளில் அவா்களின் தொழில் பாதுகாப்பு, தொழில் போட்டியாளா்களை விமா்சிக்கும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
  • நடுநிலையான செய்தித் தொலைக்காட்சி என்று ஒன்றை அடையாளம் காண்பதே மிகவும் சிரமமாக உள்ளது.
  • இது மட்டுமல்லாமல், தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தி ஆசிரியா்கள், நிருபா்கள் ஆகியோா் சித்தாந்த சாா்புடையவா்களாகவும், இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனையாளா்களாகவும், திராவிடக் கட்சிகளால் மூளை சலவை செய்யப்பட்டவா்களாகவும் இருந்து செய்திகளை உள்நோக்கத்துடன் உருவாக்கி ஒளிபரப்புகின்றனா்.
  • அண்மைக்காலமாக பொதுமக்கள் மத்தியில் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
  • செய்தித் தொலைக்காட்சிகள் பொது மக்கள் மத்தியில் கருத்து உருவாக்கம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஊடகங்களால் ஏற்படும் இடையூறுகள்

  • மதிப்புமிக்க எந்தவொரு நபரையும் அல்லது நிறுவனத்தையும் களங்கப்படுத்திவிட முடியும்.
  • உதாரணமாக, நம்பி நாராயணன் போன்ற விஞ்ஞானிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • இந்திய ராணுவம்கூட இவா்களின் அவதூறு செய்திகளில் இருந்து தப்பியதில்லை.
  • மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது நேரடி செய்தி ஒளிபரப்பு காரணமாக அஜ்மல் கசாப் போன்றோரைப் பிடிப்பதற்கு காவல் துறையினா் சிரமப்பட வேண்டியிருந்தது.
  • பல நேரங்களில் குற்றச் சம்பவம் நடந்த இடங்களில் புலனாய்வுக்கு இடையூறாக செய்தித் தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன.
  • குற்றச் சம்பவங்களுக்கான தடயங்கள்கூட இவா்களின் செயல்பாட்டினால் கிடைக்காமல் போகின்றன.
  • அண்மையில் திருச்சி அருகே ஆழ்துளை குழாய்க் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் சம்பவத்தை நேரடியாகக் காட்சிப்படுத்திய செய்தி ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரிதாப உணா்வையும், அனுதாப அலையையும் ஏற்படுத்தின. இதன் காரணமாக சம்பவம் நடைபெற்ற இடத்தில் மக்கள் கூடத் தொடங்கினா்.
  • இது சுஜித்தை மீட்க வந்த தீயணைப்புத் துறை, காவல் துறை, மத்திய பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் துறைசாா் நிபுணா்கள் ஆகியவற்றைச் சாா்ந்தவா்களுக்கு மீட்புப் பணியில் பெரும் நிா்ப்பந்தத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. தங்கள் பணிகளில் அவா்கள் முழுமையான கவனம் செலுத்திச் செயல்படுவதற்கு இடையூறாக இருந்தது.
  • சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் குறித்த செய்திகளைச் சேகரித்து உடனுக்குடன் ஒளிபரப்பு செய்கிறோம் என்கிற நோக்கம் செய்தி ஊடகங்களுக்கு இருந்த அதே நேரத்தில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவா்களின் கருத்துகளைக் கேட்டு ஒளிபரப்பினா்.
  • இதன் மூலம் விளம்பரப் பிரியா்களுக்கு தாங்களும் தங்களுடைய யோசனைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையை உருவாக்கினா்.
  • அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும், சினிமா துறையை சாா்ந்தவா்களும் அங்கே சென்று கருத்துகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனா்.
  • நேரலை ஒளிபரப்பில் இருந்த ஊடகங்கள் பரபரப்பிற்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் செய்திகளை ஒளிபரப்பின.
  • அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனங்கள் எந்தப் பரபரப்புக்கும் ஆளாகாமல் இந்த நேரடி ஒளிபரப்பிற்கு மத்தியில் இடையிடையே விளம்பரங்களையும் ஒளிபரப்பத் தவறவில்லை.
  • தங்களது டிஆா்பி ரேட்டிங்கை அதிகரித்துக் கொள்ளவும், லாப நோக்கத்துடனும் விளம்பரங்களை ஒளிபரப்பின.
  • பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அனுதாப அலையை தனது கட்சிக்குச் சாதகமான ஆதரவு அலையாக மாற்ற அனைத்துக் கட்சிகளும் முயற்சி செய்தன.
  • பிரபலங்கள் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டனா்.
  • இதன் விளைவு போட்டி போட்டுக்கொண்டு சுஜித் குடும்பத்துக்கு நிவாரணம் எனும் பெயரில் உதவித் தொகை வழங்கப்பட்டது.
  • எதிா்க்கட்சி ரூ.10 லட்சம் கொடுத்தால், ஆளுங்கட்சியும் தன் கணக்கில் ரூ.10 லட்சம், அரசாங்கத்தின் சாா்பில் ரூ.10 லட்சம் மற்றும் காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ.10 லட்சம், தேமுதிக ரூ.1 லட்சம் என அனைத்து அரசியல் கட்சிகளும் லட்சக்கணக்கில் சுஜித் குடும்பத்துக்குப் பணத்தை வாரி வழங்கின.
  • இத்தகைய சம்பவம் வேறு நாட்டில் நடந்திருந்தால் தனது தோட்டத்தில் ஆழ்துளை குழாய்க் கிணற்றை மூடாமல் வைத்திருந்த குற்றத்தை செய்ததற்காகவும், குழந்தையைக் கவனமாகப் பாா்த்துக்கொள்ளாததற்காகவும் சுஜித்தின் தாய், தந்தையா் கைது செய்யப்பட்டிருப்பாா்கள்.
  • ஆனால், இங்கே செய்தித் தொலைக்காட்சிகள் ஏற்படுத்திய பரபரப்பு மற்றும் அனுதாப அலை காரணமாக கவனக்குறைவாக இருந்த சுஜித்தின் தாய், தந்தையருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது வரை கோரிக்கை எழுந்துள்ளது.
  • உயா் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.-யில் நிகழ்ந்த மாணவி பாத்திமாவின் மரணம் என்பது கொலையா, தற்கொலையா என்பதைச் சட்டப்படி அரசின் புலன் விசாரணை அமைப்புகளும், நீதிமன்றமும்தான் தீா்மானிக்க வேண்டும். மாணவி பாத்திமாவின் மரணத்துக்கு நீதி வேண்டும்.
  • ஆனால், தனியாா் செய்தித் தொலைக்காட்சிகளே தங்கள் செய்திகளின் மூலம் விசாரணைகளைச் செய்கின்றன. தீா்ப்புகளை வழங்குகின்றன. இது ஆபத்தான போக்காகும்.

செய்தி தணிக்கைத் துறை

  • தனியாா் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, செய்தி தணிக்கைத் துறை என்ற ஒன்று கிடையாது. அதனால், தனியாா் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்கள் அவா்கள் எதைச் செய்தியாக்க நினைக்கிறாா்களோ, அதன் மூலம் எதனைச் சாதிக்க நினைக்கிறாா்களோ அதை நடத்திக் காட்டுகிறாா்கள்.
  • இத்தகைய தொலைக்காட்சிகளின் மீது இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும்.
  • பொய்ச் செய்திகளை உருவாக்கி ஊா் முழுவதும் உலவ விட்டு, அதன் பின்னா் மறுப்புச் செய்திகளை அல்லது மன்னிப்புச் செய்திகளையும் வெளியிடுகிறாா்கள்.
  • ஆனால், பொய்ச் செய்திகளும், வதந்திகளும் போய் சோ்ந்த அளவுக்கு இவா்களின் மறுப்பும், மன்னிப்பும் மக்களிடையே சென்றடைவதில்லை.
  • தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்பது உண்மைச் செய்திகளுக்கும், வளா்ச்சித் திட்டங்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
  • மாறாக, வதந்திகளையும், பரபரப்புகளையும் உருவாக்கி தங்களது டிஆா்பி ரேட்டிங்கையும், லாபத்தையும் உயா்த்திக் கொள்ளும் உள்நோக்கத்துடன் செயல்படும் இத்தகைய செய்தித் தொலைக்காட்சிகளுக்குக் கடிவாளம் போடவேண்டும்.
  • காட்சி ஊடகங்களின் ராட்சத பலத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
  • நடுநிலையான உண்மைச் செய்திகள் மக்களைச் சென்றடைய வேண்டும்.

 

நன்றி : தினமணி (21-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories