TNPSC Thervupettagam

ஊடகர் கருணாநிதி

October 1 , 2021 1202 days 667 0
  • நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் மு.கருணாநிதி எனும் ஆளுமை ஆற்றியிருக்கும் பணிகளின் வீச்சில் ஓர் ஊடகராக அவருடைய பங்கு சிறிதாகத் தெரிவது இயல்பு. ஏனென்றால், அரசியலில் தமிழ்நாட்டின் நீண்ட கால முதல்வர் அவர்; நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவரே; 60 ஆண்டுகள் தோல்வியையே சந்தித்திராமல், சட்டமன்றம் சென்ற மக்கள் பிரதிநிதியும்கூட. அரசியலுக்கான கருவியாகவே கருத்துக் களத்தை அவர் பயன்படுத்தினார். பொதுக்கூட்ட உரைவீச்சுகள், கவிதைகள், நாடகங்கள் இங்கெல்லாம் அவர் முத்திரை இருந்தது; இவை மூன்றின் தேர்ந்தெடுத்த கூட்டுக் கலவையாக சினிமா அவருக்கு அமைந்தது.
  • தமிழ் சினிமாவின் மிக வெற்றிகரமான வசனகர்த்தாவாக கருணாநிதி வலம் வந்தார். சொல்லப்போனால், வசனகர்த்தாக்களுக்கு ஒரு நட்சத்திர அங்கீகாரத்தை உருவாக்கினார். நடிகர்களுக்கு இணையான சம்பளம் பெற்றார். திரையரங்குகளுக்கு வெளியில், அவருடைய திரைப்பட வசனங்கள் புத்தகங்களாக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றன. தமிழ் சினிமாவில் நடிக்க வரும் புதியவர்கள் அவருடைய ‘பராசக்தி அல்லது ‘மனோகரா பட வசனங்களைப் பேசிக்காட்டி வாய்ப்பு கேட்பது ஒரு வழக்கமாக இருக்கும் அளவுக்கு அவர் செல்வாக்கு இருந்தது. அது தந்த உத்வேகத்தில் திரைப்படங்களையே உருவாக்குபவரும் ஆனார்.
  • இவற்றுக்கெல்லாம் மத்தியில் ஓர் ஊடகராக அவருடைய ‘முரசொலி வழியே அவர் சென்றடைந்த வாசகர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது பெரிது கிடையாது என்பதே உண்மை. ஆனால், தமிழ் ஊடக வரலாற்றை எடுத்துக்கொண்டால், அவரது பங்களிப்பு அங்கும் ஒரு பெரும் சாதனை. 
  • ஊடகர் கருணாநிதி என்று ஒரு தலைப்பில் பேசும்போது, ‘முரசொலி வழியாக நேரடியாகவே கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு வரலாற்றை நாம் தொட வேண்டியிருக்கிறது. கூடவே, அவருடைய ஊடகப் பணியைப் புரிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ் இதழியலின் பின்னணியையும், அரசியல் பின்னணியையும் கொஞ்சம்போலவேனும் தொட வேண்டும் என்றால், அதற்கு மேலும் பயணிக்க வேண்டியிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் நூற்றாண்டுக்கு மேலாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய வரலாறு இது. ஒரு மணி நேரத்தில் பேசி முடித்துவிடக்கூடிய விஷயம் இல்லை. ஆயினும், முயன்று பார்க்கிறேன்.

தமிழ் இதழியல் வரலாறு

  • தமிழ் இதழியல் வரலாற்றை அவ்வளவு துல்லியமாக வரையறுத்துத் தரும் நூல்களோ தரவுகளோ நம்மிடம் இல்லை. இதுவரை வெளியாகியிருக்கும் நூல்களில் சோமலெ, அ.மா.சாமி, ரா.அ.பத்மநாபன், ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரின் நூல்களை அடிப்படையாகக் கொண்டும், மேலதிகம் நூலகங்களின் வழியாகப் பத்திரிகைகளில் காணக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும் கிடைத்த தரவுகளின் வழி கிடைத்த என்னுடைய பார்வையையும் சேர்த்து இந்த உரையை அமைத்துக்கொள்கிறேன்.
  • இந்தியாவின் முதல் இதழாக இன்றைய கொல்கத்தாவில் 1780-ல் ‘பெங்கால் கெஜட் வெளியாகிறது என்றால், இங்கே சென்னையில் 1785-ல் ‘மெட்ராஸ் கொரியர் இன்றைய தமிழ்நாட்டின் முதல் இதழாக வெளியாகிறது. ஆயினும், அரசிதழ் போன்ற ஒரு வகைமையைத் தாண்டி, பொதுப் பத்திரிகை எனும் பொது அடையாளத்துக்குள் இவற்றைக் கொண்டுவர முடியாது.
  • 1820-ல் ‘பிராமணிக்கல் மேகசின் பத்திரிகையையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு சில பத்திரிகைகளையும் ராஜாராம் மோகன்ராய் கொண்டுவந்தார். இந்திய இதழியலின் முன்னோடி அவர்தான். தமிழில் கிறிஸ்தவ மிஷனரிகளும், சாதி, சமயப் பிரச்சாரத்தை மட்டுமே முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், நேரடியாக நாம் 1882-க்கு வந்துவிட வேண்டியதுதான். அதுதான் ‘தமிழ் இதழியலின் தந்தை என்று நம்மால் அழைக்கப்படும் ஜி.சுப்பிரமணிய ஐயர் ‘சுதேசமித்திரன் இதழை வெளிக்கொண்டுவந்த ஆண்டு.
  • அதற்கடுத்த கால் நூற்றாண்டுக்கும்கூட, தமிழில் வெளியான பெரும்பான்மைப் பத்திரிகைகள் சாதி - சமய அடையாளங்களை முன்னிறுத்தியே வெளியாயின. ‘ஆரிய ஜன ப்ரியன், ‘ஆரிய ஜன ரட்சணி, ‘நாடார் குல மித்திரன், ‘க்ஷத்திரிய குல மித்திரன், ‘விஷ்வகர்ம குலோபகாரி… இதழ்களுடைய இந்தப் பெயர்களே அவற்றின் அக்கறைகளை நமக்குச் சொல்லிவிடக்கூடியவை.
  • தத்தமது அடையாள அரசியலையும் பிரதிநிதித்துவத்தையும் பேசுவதற்கான தேவை மிகுந்திருந்த காலம் என்பதோடு, பத்திரிகையைப் பொதுவாக நடத்துவதற்கான ஒரு களமும் நிதிநிலை சார்ந்து அப்போது உருவாகியிருக்கவில்லை. ‘சுதேசமித்திரன் தொடங்கப்பட்டு ஆயிரம் வாசகர்களை அது பெறுவதற்கு 15 ஆண்டுகள் ஆயிற்று என்கிறார்கள். 1920 வரைகூட இரண்டாயிரம் பிரதிகள் விற்றால் போதும் என்பதே நிலையாக இருந்திருக்கிறது.
  • எல்லாச் சமூகங்களின் பத்திரிகைகளையும், எல்லாப் பத்திரிகைகளுக்கான நியாயங்களையும் ஒரே தட்டில் வைத்துவிட முடியாது என்றாலும், இப்படித்தான் நம் இதழியல் வரலாறு இருந்திருக்கிறது. இதே காலகட்டத்தில்தான் சமூகத்தின் அடித்தட்டில் அழுத்தத்தை உணர்ந்தவர்களிடமிருந்து, சமவுரிமைக்கான அறைகூவலாகப் பல பத்திரிகைகளும் வெளிப்பட்டன. அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்த ‘தமிழன் எனும் பொது அடையாளப் பெயர் தாங்கி வந்த பண்டிதர் அயோத்திதாசரின் இதழை இங்கே சொல்லலாம்.

தமிழ் இதழியலின் போக்குகள்

  • தமிழ்நாட்டின் இதழியல் போக்கைப் பெருமளவில் ஐந்தாகப் பிரிக்கலாம். ஒன்று தேசிய இயக்கப் பத்திரிகைகள், இரண்டாவது பொதுவுடைமை இயக்கப் பத்திரிகைகள், மூன்றாவது தனித்தமிழ் இயக்கப் பத்திரிகைகள், நான்காவது திராவிட இயக்கப் பத்திரிகைகள், ஐந்தாவது வணிகத்தைப் பிரதான நோக்கமாகக் கொண்ட பல்சுவைப் பத்திரிகைகள். இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ‘இந்தியா எனும் கருத்தைஅது இன்றைக்கு உள்ளபடி டெல்லியிலிருந்து அதன் மையத்தைக் காணும் பார்வையைத் தேசிய இயக்கப் பத்திரிகைகள் மட்டும் அல்லாது, தமிழ் இதழியலின் பெரும் பகுதிப் பத்திரிகைகளும் கொண்டிருந்தன.
  • திராவிட இயக்கமோ இதற்கு நேரெதிரான பார்வையைக் கொண்டிருந்தது. முற்பகுதியில் ‘இந்தியா எனும் கருத்துக்கு எதிராக ‘திராவிட நாடு எனும் கருத்தை முன்வைத்த அது, பிற்பகுதியில் ‘இந்தியா எனும் கருத்தை அதன் ஒற்றையாட்சித்தன்மையிலிருந்து விடுவித்துக் கூட்டாட்சித்தன்மைக்கு மாற்றப் பேசியது; மாநிலங்களே பிரதானம்; ‘தமிழ் மக்கள் மீதான அக்கறையே பிரதான அக்கறை என்றது. இந்தப் பார்வைக்கும்கூட அது அடிப்படையாக சமூகநீதி அரசியலையே முன்வைத்தது; பிராமணர் – பிராமணரல்லாதோர் அரசியல்தான் அதன் சமூகநீதி அரசியலுக்கு அடித்தளமாக இருந்தது.
  • தமிழ்நாட்டின் பத்திரிகைத் துறை பெருமளவில் பிராமணர்களின் பேட்டையாக இருந்தது என்கிற பின்னணியை இங்கே குறிப்பிடுவது முக்கியம். ஆக, இதுவே திராவிட இயக்கமானது சொந்தமாகப் பத்திரிகைகளை நடத்துவதை ஒரு கலாச்சாரம் ஆக்கிக்கொண்டதன் அடிப்படை. திராவிட இயக்கத்தின் புகழ் பெற்ற ஆரம்ப அரசியல் அமைப்பான ‘நீதிக் கட்சிக்கான பெயரே ‘ஜஸ்டிஸ் என்ற பெயரில் அவர்கள் நடத்திய பத்திரிகையை ஒட்டி உருவானது என்ற வரலாறானது திராவிட இயக்கத்துக்கும் இதழியலுக்கும் உள்ள நெருங்கிய உறவைச் சொல்லிவிடும்.
  • 1917-ல் ‘ஜஸ்டிஸ் ஆங்கில ஏடு வெளியாகிறது. அதே காலகட்டத்தில், ‘நீதிக் கட்சி என்று பின்னாளில் அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அங்கத்தினர்களால் தமிழில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையின் பெயர் ‘திராவிடன். இதற்கு அடுத்து ஒரு பாய்ச்சல், 1925-ல் பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் இதழியலில் காலடி எடுத்துவைத்தபோது நிகழ்கிறது. ஒரு காலனி ஆதிக்கச் சமூகத்தில் பெரியார் நடத்திய பத்திரிகைகளின் பெயர்களுக்கு நாம் சற்று கூர்ந்த கவனம் கொடுத்தால், தமிழ்ச் சமூகத்துக்கு அவர் கொடுக்க விழைந்த விசாலப் பார்வையும், அவருடைய தொலைநோக்கும் விளங்கிவிடும். ‘குடியரசு, ‘ரிவோல்ட், ‘சமதர்மம், ‘புரட்சி, ‘பகுத்தறிவு, ‘விடுதலை, ‘உண்மை.
  • பெரியாருக்கு முன்பு தமிழ் இதழியல் துறைக்கு வந்தவர்களில் முக்கியமான தாக்கத்தை உருவாக்கியவர்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் திரு.வி.க.; ‘தேசபக்தன், ‘நவசக்தி பத்திரிகைகளை நடத்தியவர்; மற்றொருவர் பா.வரதராஜுலு நாயுடு; ‘தமிழ்நாடு பத்திரிகையை நடத்தியவர். ஆங்கிலம் - சம்ஸ்கிருதச் சொற்களுக்கு இடையே தமிழ்ச் சொற்களையும் நிரப்பிக் கொடுத்த ‘சுதேசமித்திரன் பத்திரிகையின் மொழிநடையிலிருந்து தமிழ் இதழியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்கள் என்று இவர்கள் இருவரையும் சொல்லலாம்.
  • பெரியாரைப் பற்றிப் பேசும்போது கூடவே இன்னொரு பேராளுமையின் பெயரும் நம் நினைவுக்கு வர வேண்டும்; அவர் ராஜாஜி. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அரை நூற்றாண்டு காலம் எழுதித் தள்ளியவர் ராஜாஜி. திராவிட இயக்கம் தன்னுடைய எதிர்ப்பியக்கத்தில் வேறு எந்த ஆளுமையைவிடவும் அதிகமாக இடத்தை ராஜாஜிக்குக் கொடுத்தது. ராஜாஜியும் இறுதிக் காலம் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

திராவிடத் தளர்கர்த்தர்கள்

  • பெரியாரால் உத்வேகம் பெற்ற திராவிட இயக்கம், தமிழ் இதழியலை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்டது. அரசியல் துறையில் சமூகநீதியை அது விவாதத்தின் மையத்துக்குக் கொண்டுவந்தது அதன் முக்கியமான பங்களிப்பு என்றால், அதற்கு இணையான மற்றுமொரு பங்களிப்பு தமிழ்நாட்டில் வாசிப்பைப் பரவலாக்கி, தமிழ் அறிவியக்கத்தை ஜனநாயகப்படுத்தியதாகும். குறிப்பாக, அண்ணா காலகட்டத்தில் இது உச்சம் பெற்றது. கிராமங்கள், நகரங்கள்தோறும் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டன. டீக்கடைகளும் முடித்திருத்தகங்களும்கூட இதழ்கள் படிக்கும் வாசக சாலைகள் ஆகின. பூங்காக்களில் மாலை நேரத்தில் படித்த இளைஞர்களும் மாணவர்களும் பத்திரிகைகளைக் கையில் பிடித்தபடி சத்தமாக வாசிக்க, வாசிக்கத் தெரியாதவர்கள் கூடி நின்று அதைக் கேட்டு உள்வாங்கினர்.
  • தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் இந்த மூன்று அறிவியக்கங்களும் இதே காலகட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டன என்றாலும், திராவிட இயக்கத்தின் வீச்சு உயரத்தில் இருந்தது. ஒரு காலகட்டத்தில் திராவிட இயக்கம் சார்ந்தவர்களால் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நடத்தப்பட்டதாகச் சொல்கிறார் அ.மா.சாமி. அவற்றில் நானூற்றுச் சொச்ச இதழ்களை மட்டுமே பின்னாளில் கண்டறிய முடிந்ததாகச் சொல்கிறார் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு. ஊருக்கு ஊர் இதழ்கள் நடத்தப்பட்டன.

முரசொலி யுகம்

  • பெரியாருடைய ‘விடுதலை இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்திலேதான், 1942-ல் தன்னுடைய ‘திராவிட நாடு இதழைத் தொடங்கினார் அண்ணா. அவருக்கு அப்போது வயது 33. அதே 1942-ல்தான் கருணாநிதி தன்னுடைய ‘முரசொலியைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 19.
  • ஆரம்பக் காலகட்டத்தில் ஒரு துண்டறிக்கையாகத்தான் ‘முரசொலி வெளியாயிற்று. 1948-ல் அது வார இதழாகி விரைவிலேயே நின்று, பின்னர் 1954-ல் மீண்டும் தொடங்கப்பட்டு, 1960 வரை வந்தது. பிறகு, அது நாளேடானது. இதற்குப் பின், கருணாநிதியின் மறைவுக்கு ஓராண்டுக்கு முன்பு வரை, 1960 தொடங்கி 2016 வரை அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலம் தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த அரசியல் நாளேடுகளில் ஒன்றாக, கருணாநிதியின் நேரடிப் பங்களிப்பில் அது வெளிவந்திருக்கிறது.
  • இந்திய அரசியல் வரலாற்றில், பேச்சோடு சேர்த்து எழுத்தையும் ஓர் ஆயுதமாகக் கையாண்ட, பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த ஆளுமைகளின் பட்டியல் நீண்டது. ஆயினும், பத்திரிகைகளில் எழுதுவதும், பத்திரிகைகளை நடத்துவதும் ஒன்றல்ல. ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என்பது பெருஞ்சவால். பல அரசியல் இயக்கங்களுக்கே அது சாத்தியமாக இங்கே இல்லை. நாட்டின் முதுபெரும் அரசியல் கட்சியான காங்கிரஸுக்காக நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை ‘நேஷனல் ஹெரால்டு; சுதந்திர இந்தியாவில் வெகு நீண்ட காலம் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோதும்கூட காங்கிரஸால் அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியவில்லை; இடையிலே ஒரு சுணக்கத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார்கள் என்றாலும், அது காங்கிரஸார் மத்தியிலேயேகூட செல்வாக்கோடு இல்லை. திமுக வரலாற்றையுமே இங்கே எடுத்துப் பேசலாம். அண்ணாவால் நடத்தப்பட்ட பத்திரிகைகள் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தன என்றாலும், எதுவுமே வெற்றிகரமாகத் தொடரவில்லை. அண்ணா காலத்தில் திமுகவின் அதிகாரபூர்வ ஏடாக வந்த ‘நம் நாடு இதழும் அண்ணா மறைந்த சில ஆண்டுகளிலேயே முடங்கிப்போனது.
  • பத்திரிகையில் எழுதுபவராக மட்டுமல்லாது, வெற்றிகரமாகப் பத்திரிகையை நடத்துபவராகவும் இருந்தார் கருணாநிதி என்பதையும், அவர் நடத்திய ‘முரசொலி இதழானது கட்சிக்குச் சொந்தமானது இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். பெரியார், அண்ணா ஆகியோரெல்லாம் வாழ்ந்த காலத்திலேயே ‘விடுதலை, ‘நம் நாடு இவற்றையெல்லாம்விட அதிகம் விற்கும் பத்திரிகையாக ‘முரசொலி திகழ்ந்திருக்கிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தால்தான் ஒரு பத்திரிகையதிபராக கருணாநிதியின் பங்களிப்புகளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
  • பெரியாரோ அண்ணாவோ பத்திரிகையில் எழுத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை வெளிப்பாட்டுக்கும் வடிவமைப்புக்கும் கொடுத்தார்கள் என்று சொல்லிட முடியாது. தன்னுடைய காலத்திய வெகுஜனப் பத்திரிகைகளின் பாணியையும், திரைத் துறை சார்ந்த அனுபவங்களையும் கலந்து ஒப்பீட்டளவில் மேம்பட்ட பத்திரிகையாக ‘முரசொலியைக் கொண்டுவந்தார் கருணாநிதி. எளியோரிடமும் கருத்துகளைக் கொண்டுசெல்ல ‘சித்திரக்கதைகள், ஆழமான விஷயங்களை விவாதிக்க ‘கேள்வி - பதில் என்று பல்வேறு வடிவங்களையும் முயற்சித்தார்.
  • தன்னுடைய எழுத்துகளோடு, ஏனைய தலைவர்களின் எழுத்துகளும் ‘முரசொலியில் வெளிக்கொணர்வதில் அக்கறை கொண்டிருந்தார். அண்ணா ‘நம் நாடு இதழுக்காக எழுதும் கட்டுரைகளைக்கூட நயம்படப் பேசி ‘முரசொலிக்கு வாங்கி வந்துவிடும் அளவுக்கு சாதுர்யமான பத்திரிகையாசிரியராக எப்போதும் அவர் செயல்பட்டார். அடுத்தடுத்த நிலைகளில் இருந்த தலைவர்கள் தங்களுடைய இதழில் வெளிவருவதைக் காட்டிலும் ‘முரசொலியில் வெளிவந்தால் பார்க்கவும் நன்றாக இருக்கும்; மேலதிகம் பலரிடமும் சென்றடையும் என்று நம்பினார்கள்; இந்த நம்பிக்கையை கருணாநிதியின் செயல்பாடுகள் உறுதிப்படுத்தின. ஆக, அண்ணாவின் காலத்திலேயே ‘கழகத்தின் கெஸட் என்ற அதிகாரபூர்வமற்ற பெயர் ‘முரசொலிக்கு வந்துவிட்டது என்கிறார் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு.
  • ஆயினும், ‘முரசொலியை நடத்துவது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. “முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் அரை நூற்றாண்டு காலம் எதிர்க்கட்சியாக நின்று யுத்தம் செய்திருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்துக்கு அரசாங்கம் பூட்டுப்போடலாம், கைதுசெய்யப்படலாம் என்கிற நினைப்பு எங்களுக்குப் பழகியிருந்தது. நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பத்திரிகையைக் கொண்டுவந்துகொண்டிருந்தோம் என்கிறார் பிற்பாடு அதன் நிர்வாக ஆசிரியரான கருணாநிதியின் மருமகன் செல்வம்.
  • ஒரு பேட்டியில், “குடும்பப் பத்திரிகை என்று ‘முரசொலியைச் சொல்லலாமா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலானது ‘முரசொலி கடந்துவந்த பாதையோடு, ஒரு பத்திரிகை தொடர்ந்து வெளிவர இந்தச் சமூகத்தில் எப்படிக் குடும்பங்களும் தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. “குடும்பமே உழைத்த பத்திரிகை என்று இதைச் சொல்லலாம். திமுக தொடங்கப்படுவதற்கு முன்பு, ஒரு அரசியல் தலைவராக உருவெடுப்பதற்கு முன்பு, தலைவர் அவருடைய 19 வயதில் தொடங்கிய பத்திரிகை இது. பெரிய நிறுவனம் எல்லாம் அல்ல – ஒரு சாமானிய இளைஞனின் கனவு.
  • இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு யார் உதவியாக இருக்க முடியும்? குடும்பமே ஓடினோம் என்றால், ஒரு பெரிய கட்டமைப்பில் நடந்த பத்திரிகை அல்ல இது என்பதால் எல்லோருடைய உதவியும் தேவைப்பட்டது. அதனால் ஓடினோம். வீட்டில் யாராவது சும்மா உட்கார்ந்திருந்தாலே, ‘அங்கே போய்க் கொஞ்சம் வேலை பார்க்கலாமே! என்பார்கள். இப்படித்தான் மாறன், அமிர்தம், நான், அழகிரி, ஸ்டாலின், தமிழரசு என்று எல்லோருமே இதற்காக ஓடினோம். சந்தாதாரர் முகவரிப் பட்டியலை சரிபார்ப்பது, பார்சல் போடுவது இப்படிச் சின்னச் சின்ன வேலைகளாகத்தான் இருக்கும். எல்லோரும் பார்ப்போம்! என்று சொல்கிறார் செல்வம்.
  • நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் தன் வாழ்வில் மிகப் பெரும் நெருக்கடிகளை கருணாநிதியும் ‘முரசொலியும் எதிர்கொண்டனர். தணிக்கை என்ற பெயரில் உள்ளடக்கத்தைக் கண்டபடி சிதைத்திருக்கின்றனர் அதிகாரிகள். கருணாநிதி தன்னுடைய இலக்கிய அறிவை, பூடகமொழி ஒன்றை உருவாக்க இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்திக்கொண்டார்.
  • அரசால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் பட்டியலை நேரடியாகப் பத்திரிகையில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டபோது, ‘அண்ணா சதுக்கத்துக்கு மலர் வளையம் வைக்க வர இயலாதவர்களின் பட்டியல் என்று அவர் வெளியிட்ட பட்டியல் மாவட்டவாரியாக திமுகவினர் எவ்வளவு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டுக்குத் தெரிவித்தது. தன்னுடைய பெயரில் எழுதினால், தடை விதிக்கிறார்கள் என்று ‘கரிகாலன் என்பது உள்பட பல்வேறு புனைப்பெயர்களில் எழுதினார் கருணாநிதி.
  • அப்படியும் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, ‘வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும் என்று தலைப்புச் செய்தி போட்டு ஆட்சியாளர்களிடம் தன் காட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல, படைப்புகளாக வெளியிலிருந்து கிடைக்கும் பங்களிப்புகள் தொடர்வதிலும் நெருக்கடிகள் இருந்திருக்கின்றன. சில காலகட்டங்களில் 12 பக்கங்களில் 8 பக்கங்களுக்குப் பங்களிப்பவராக அவரே இருந்திருக்கிறார் என்கிறார்கள். நிதியும் ஒரு சவாலாக இருந்திருக்கிறது. அதனாலேயே சின்ன அலுவலகம், சின்னக் கட்டமைப்பு என்கிற மாதிரியிலேயே இயங்கினார் கருணாநிதி. “நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் விதமாகத்தான் ‘முரசொலியை ஓர் அறக்கட்டளைக்குக் கீழே கொண்டுவந்தார்; கட்சிக்காரர்களின் நன்கொடையோடும் சேர்ந்துதான் ‘முரசொலி எப்போதும் நடந்திருக்கிறது என்கிறார்கள்.

சூழலும் அரசியலும்

  • இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஏன் கருணாநிதி தொடர்ந்து பத்திரிகையை நடத்தத் தலைப்பட்டார்? இப்படி ஒரு கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ளாவிட்டால், ‘முக்கால் நூற்றாண்டு காலத்துக்கு அவர் பத்திரிகை நடத்தினார், பல நூறு கட்டுரைகளை எழுதினார் என்று வெறும் உழைப்பும் எண்ணிக்கையும் சார்ந்த செயல்பாட்டுச் சாதனைகளாக அவர் பணிகளை நாம் சுருங்கப் பார்த்துவிடுவோம். ‘ஏன் கருணாநிதி இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து பத்திரிகையை நடத்தத் தலைப்பட்டார்?’ என்றால், தமிழ்நாட்டின் இதழியல் சூழல் அப்படி இருந்தது.
  • இந்த இடத்தில் மீண்டும் நாம் வரலாற்றுக்குக் கொஞ்சம் செல்வோம். பெரியாரின் வருகைக்குப் பின்பு வணிக நோக்கோடும் தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு வந்து, இங்கு பெரும் செல்வாக்கை நிலைநாட்டிய முக்கியமான சில பத்திரிகைகளைப் பார்ப்போம். 1926-ல் பூதூர் வைத்தியநாத ஐயரால் தொடங்கப்பட்ட ‘ஆனந்த விகடன் 1928-ல் எஸ்.எஸ்.வாசனால் கையகப்படுத்தப்பட்ட அடுத்த சில ஆண்டுகளிலேயே கல்கியும் அங்கு வந்துசேர, ஓர் உச்சம் நோக்கி நகர்கிறது. பிற்பாடு ‘விகடனிலிருந்து வெளியேறி 1941-ல் சதாசிவத்துடன் இணைந்து ‘கல்கி எனும் பெயரிலேயே ஒரு பத்திரிகையைப் பத்திரிகையாளர் கல்கி தொடங்கிய பிறகு அது தனியே ஓர் உச்சம் நோக்கி நகர்கிறது.
  • கல்கியின் மறைவுக்குப் பிறகு, 1950-களில் உருவாகும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு, முன்னதாக 1948-ல் எஸ்.ஏ.பி.அண்ணாமலையும் பி.வி.பார்த்தசாரதி அய்யங்காரும் இணைந்து தொடங்கிய ‘குமுதம் இதழ் ஓர் உச்சம் நோக்கி நகர்கிறது. இதற்கு இடைப்பட்ட காலகட்டத்திலேயே உ.வே.சாமிநாத ஐயர் கௌரவ ஆசிரியராகச் செயலாற்றிய ‘கலைமகள் 1932-ல் தொடங்கப்படுகிறது. அதையொட்டிய காலகட்டத்திலேயே தமிழ் பருவ இதழ்களின் உள்ளடக்கத்துக்கும் வடிவமைப்புக்கும் முன்மாதிரியான இரு இதழ்களான வை.கோவிந்தனின் ‘சக்தி, வெ.சாமிநாத சர்மாவின் ‘ஜோதி இரண்டும் அடுத்து வந்து செல்கின்றன. இதேபோல நாளிதழ் வரிசையிலும் பெரும் வருகைகள் நிகழ்ந்தன.
  • 1934-ல் சதானந்தால் தொடங்கப்பட்டு, பிற்பாடு ராம்நாத் கோயங்காவால் வாங்கப்பட்ட ‘தினமணி நாளிதழ் தமிழ்நாட்டின் முன்னணிப் பத்திரிகை ஆகிறது. டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன் என்கிற இரு புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் அதன் அடுத்த 50 ஆண்டு காலத்தைத் தீர்மானிக்கிறார்கள். பின்னாளில் தமிழ்நாட்டிலேயே அதிகம் விற்கும் பத்திரிகையாக உருவெடுத்த ‘தினத்தந்திக்கு 1942-ல் வித்திடுகிறார் சி.பா.ஆதித்தனார். பிற்பாடு இன்னொரு பெரும் பத்திரிகையாக உருவெடுத்த ‘தினமலர் நாளிதழை 1951-ல் தொடங்குகிறார் ராமசுப்பு ஐயர். பிந்தைய காலகட்டத்தில் அரசியல் விமர்சனம் என்கிற பிரிவில் சோ.ராமசாமியின் ‘துக்ளக் வெளிவருகிறது. அரசியல் புலனாய்வு இதழ்கள் பிரிவில் ஒரு முன்னோடியாக ‘ஜூனியர் விகடன் இதழ் விகடன் குழுமத்திலிருந்து வெளியாகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே பிறந்து ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் இதழாக ‘இந்தியா டுடே வருகிறது. மேற்கண்ட இதழ்களை அடியொற்றிப் பல பத்திரிகைகள் வருகின்றன.
  • எதற்காக இவ்வளவையும் இங்கே குறிப்பிடுகிறேன்? ஏனைய பல விஷயங்களில் எல்லாம் வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா எனும் கருத்தையும், தேசியம் எனும் கருத்தையும் அணுகுவதில் இவ்வளவு இதழ்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆதித்தனார் தொடக்கக் காலத்தில் தமிழ்த் தேசியத்துக்கான பத்திரிகையாக ‘தந்தியை முன்னெடுத்தாலும், அதன் ஒட்டுமொத்த வரலாற்றில் அது ஏனைய பத்திரிகைகளின் பெரும் போக்கையே கொண்டிருந்தது.
  • இதில் பிராமணர், அபிராமணர்; சித்தாந்தப் பத்திரிகை, வணிகப் பத்திரிகை என்கிற வேறுபாடுகளெல்லாம் இல்லை. ‘விகடன், ‘கல்கி இரண்டுக்கும் எங்கே வேறுபாடு என்றால், காமராஜருக்கு ஆதரவா, ராஜாஜிக்கு ஆதரவா என்பதில்தான் வேறுபாடு; ‘குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையும் காந்தியராகவே திகழ்ந்தார்; தேசிய இயக்கத்தையே அவரும் ஆதரித்தார்.
  • அதேபோல, ஒட்டுமொத்த தளத்தில் பிராமணர் ஆதிக்கம் என்பது பத்திரிகைகளை நடத்தும் எண்ணிக்கையிலும், பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையிலும் குறைந்திருந்தாலும், சிந்தனைத் தளத்தில் பிராமணிய மதிப்பீடுகளின் ஆதிக்கம் தொடர்ந்துவந்தது. விளைவாக, சமூகநீதி சார்ந்த விஷயங்களுக்கும்  இங்கே பெரிய முக்கியத்துவம் இல்லை. திமுக எதிர்ப்பு என்பதும், கருணாநிதி எதிர்ப்பு என்பதும் உள்ளடக்கத்தின் மனநிலையில் பெரும்பான்மைப் பத்திரிகைகளின் அணுகுமுறையிலும் ஒளிந்திருந்தது.
  • தங்களுடைய கருத்துகளை ஏனைய பத்திரிகைகளின் கத்தரிக்கோலுக்குப் பலி கொடுக்காமல் இருக்கவே திராவிட இயக்கத்தினர் பத்திரிகைகளை நடத்தினர். கருணாநிதியும் தான் எதிர்கொண்ட பெரும் போருக்கான கருவியாகவே பத்திரிகையைக் கையாண்டார். இப்போது திராவிட இயக்கத்தின் ஆக முக்கியத்துவமான பகுதி நோக்கி நாம் நகர்கிறோம் என்று நினைக்கிறேன்; கருணாநிதியினுடைய இதழியலின் முக்கியமான பங்களிப்பும் அதுவே.
  • ஆம், ஏனைய பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள்போல திராவிட இயக்கமும் கருணாநிதியும் பேரலையோடு நீந்தியவர்கள் அல்லர்; எதிரலையில் நீந்தியவர்கள். திராவிட இயக்கமானது இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும், அடுத்து இந்தோ – சீனப் போருக்குப் பிறகும், நெருக்கடிநிலைக்குப் பிறகும் படிப்படியாகத் தன்னுடைய நிலைப்பாட்டில் ஒரு புள்ளியை வந்தடைந்தது; ‘திராவிட நாடு எனும் நிலைப்பாட்டிலிருந்து முழுமையாக விலகி ‘கூட்டாட்சி இந்தியா எனும் நிலைப்பாட்டுக்கு அது முழுமையாக வந்தடைந்தபோது, அந்தச் சிந்தனை ஏற்கெனவே உருவாகிவந்த ‘இந்தியா எனும் சிந்தனைக்கு மேலும் செழுமை சேர்ப்பதானது; தங்களுடைய மூலநோக்கமான சமூகநீதியை இந்தியா முழுமைக்கும் தூவுபவர்களானார்கள் அவர்கள்.
  • இந்திய ஜனநாயகத்துக்கும், அரசியல் சிந்தனை மரபுக்கும் தமிழ்நாட்டின் முக்கியமான பங்களிப்பு என்று இதைக் குறிப்பிடலாம். இந்தியாவில் எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாத உயரத்தில் சமூகநீதி - கூட்டாட்சி சிந்தனைகள் முகிழ்ந்திருக்க திராவிட இயக்கமே காரணம். பெரியார், அண்ணா வழியில் இந்தச் சிந்தனைக்குப் பெரும் பங்களிப்பைத் தன் இதழியல் வழியே செய்திருந்தார் கருணாநிதி. வாழ்நாள் நெடுகிலும் சமூகநீதிக்கும், கூட்டாட்சிக்கும் குரல் கொடுப்பவராக இருந்தார்; அவருடைய கட்சியினருக்குக் கொள்கைகளை விளக்கும் ஓர் ஆசிரியராக இருந்தார். இதுவே தமிழ் இதழியலில் அவருடைய முக்கியமான சாதனை.  
  • இதழாளர் கருணாநிதி என்று ஊடகத் துறையில் அவருடைய சாதனையை முன்வைக்கும்போது, பலரும் அவருடைய அரசியல் பின்னணி சார்ந்து பொதுப்பட்டியலிலிருந்து நாசூக்காக அவர் பெயரைக் கத்தரித்துவிடுவதுண்டு. அது நாசூக்கு இல்லை; திட்டமிட்ட இருட்டடிப்பு. அப்படியென்றால், பாரதியை எப்படி அணுவது? தமிழ் இதழியலின் தந்தை என்று சொல்லப்படும் ‘சுதேசமித்திரன் நாளிதழின் நிறுவன ஆசிரியரான ஜி.சுப்பிரமணி ஐயரே ஓர் அரசியலர்தான். காங்கிரஸ் மகாசபையைத் தொடங்கக் காரணமான 72 பெருந்தலைவர்களில் ஒருவர் அவர்.
  • தொழில்முறைப் பத்திரிகையாளர்களாகச் செயலாற்றியவர்களுக்கும் இங்கே வெளிப்படையான அரசியல் சார்புநிலை உண்டு. இன்று பத்திரிகையாளர்களுக்கான முன்னோடிகளாகப் பலராலும் முன்னிறுத்தப்படும் கல்கி, ஏ.என்.சிவராமன் போன்றவர்கள் தங்களை காங்கிரஸ்காரர்களாகப் பிரகடனம்செய்துகொண்டவர்கள் மட்டுமல்லாது, கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் சிறை சென்றவர்களும்கூட. அரசியல் சார்பு என்பது எதிர்மறையான விஷயம் இல்லை.
  • எந்த ஒரு பிரதியும் அரசியல்தன்மை கொண்டதே. அரசியல் சார்பே இல்லாத பத்திரிகையாளர் என்ற சொல்லாடல் ஒரு பொய்; கோழைத்தனத்தின் வெளிப்பாடு. நிச்சயமாக, பத்திரிகையாளராக ஓர் அரசியலர் செயல்படுவதற்கும், ஒரு பத்திரிகையாளர் தனக்கென்று ஓர் அரசியல் பார்வையுடன் செயல்படுவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆயினும், இந்த வேறுபாடு எவருடைய பணியையும் புறந்தள்ளுவதற்கான நியாயமாக இருக்கவே முடியாது.
  • நான் இதுவரையில் இந்த உரையில் குறிப்பிட்டிருக்கும் தளகர்த்தர்களும், சிற்றுரை என்பதால் தவறவிட்ட பல தளகர்த்தர்களும் சேர்ந்தே இன்றைய தமிழ்ப் பத்திரிகை வந்தடைந்திருக்கும் இடத்தை உருவாக்கிக் கொடுத்திருப்பதாகக் கருதுகிறேன். இந்தப் பட்டியலில் கருணாநிதிக்கு மிகத் தனித்துவமான இடம் உண்டு.
  • இன்னும் விரித்து இந்திய அளவில் பேசலாம் என்றால், கோகலே, திலகர், காந்தி, ராஜாஜி, பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா, இ.எம்.எஸ்… இப்படி ஒரு வரிசையில் வைத்துப் பேசப்பட வேண்டியவர் அரசியலரும் ஊடகருமான கருணாநிதி. மிகக் கறாராக அவருடைய பத்திரிகை எழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றைக் கொண்டு ஒரு நூல் தொகுதியை உருவாக்கினாலே அது பல முழுநேரத் தொழில்முறைப் பத்திரிகையாளர்களின் வாழ்நாள் பங்களிப்பையும் விஞ்சும் அளவுக்கு இருக்கும். அப்படி ஒரு தொகுப்பு அவருக்குக் கொண்டு வரப்பட வேண்டும். 

நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories