TNPSC Thervupettagam

ஊட்டச்சத்தின்றி அமையாது உலகு !

October 15 , 2019 1900 days 1123 0
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி உலக உணவு தினமாக சுமார் 150 நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக உணவு தினம்

  • "நமது செயல்பாடுகள்தான் நமது எதிர்காலம் - பசிப்பிணி அற்ற உலகுக்கு ஆரோக்கியமான உணவுகள்' என்பது இந்த ஆண்டுக்கான (2019) மையக் கருத்து. சிறந்த உணவுப் பழக்கங்கள், உணவுப் பொருள்கள் கிடைப்பது மற்றும் அவற்றை விநியோகிப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மையக் கருத்துடன் இந்த உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • உலகமயமாக்குதல், நகரமயமாக்குதல் மற்றும் பொருளாதார மாறுதல்களால் நமது உணவுப் பழக்கங்கள் மாறியிருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்தின் கலாசாரத்துக்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஒத்துப்போகும் வகையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், மீன் வகைகள் ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
  • கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களில் அதிக சர்க்கரை, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, உப்பு மற்றும் உணவுப் பொருள்களைப் பதப்படுத்த சேர்க்கப்படும் வேதிப் பொருள்கள் ஆகியவை மிகவும் அதிகமாக உள்ளன.

உணவில் உள்ள சத்துகள்

  • வீட்டில் வறுத்து, அரைத்து, இடித்து சமையலுக்கான மூலப் பொருள்கள் தயாரிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. சாலையோர கையேந்தி பவன்களில் உணவுகள் சாப்பிடுவதும், வறுத்த, பொரித்த, நொறுக்குத் தீனிகளைக் கொரிப்பதும் அதிகரித்து வருகின்றன. அவற்றின் சத்துக்களும் சுத்தமும் கேள்விக்குறி.
  • இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நோய்களும் அதிகரித்துவிட்டன. வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் உடல் பருமன் பிரச்னை உள்ளது. உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி குறைந்து வருவதே உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணம்.
  • உலகளவில் 82 கோடி மக்களுக்கு வயிற்றுக்கு வேண்டிய உணவு கிடைக்கவில்லை. மேலும் ஒரு புள்ளிவிவரமும் பயமுறுத்துகிறது. 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 67 கோடி மக்கள், 5 வயதிலிருந்து 19 வயது வரை உள்ளவர்களில் 12 கோடி சிறார்கள், 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் 4 கோடி குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்கள்.

தொற்றா நோய்கள்

  • சிறு வயதில் ஏற்படும் அதிக உடல் எடையால் தொற்றா நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு, ரத்தக் குழாய் நோய்கள் போன்றவற்றால் வாழ்க்கையின் தரம் குறைந்து இறப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.
  • இந்த உணவுத் தடுமாற்றங்கள் தொடர்ந்தால் 2025-ல் இரண்டு பேரில் ஒருவருக்கு அதிக உணவு அல்லது பற்றாக்குறை உணவால் ஏற்படும் நோய் இருக்கக்கூடும் என்கின்றனர் உணவியலாளர்கள்.
  • நகர்மயமாக்குதலால் வயல்களும் தோட்டங்களும் குறைந்து வருகின்றன. தண்ணீர்ப் பற்றாக்குறை, பருவநிலை மாறுதல்கள், மண்ணில் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் விவசாயப் பொருள்கள் உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது.
  • காட்சிப் பிழைகளான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட வசதி குறைந்த குடும்பத் தலைவிகளும் மாயத்தோற்றங்களை நம்பி அதிக பணம் செலவழித்து கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களை குழந்தைகளுக்கு அளிக்கின்றனர்.

உதாரணங்கள்

  • மாவுச் சத்தும் சர்க்கரைச் சத்தும் அதிகமாக உள்ள பலவகை பானங்களும் பிஸ்கட் வகைகளும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். குழந்தைகள் எவ்வளவு உயரம் வளர்வார்கள் என்பதற்கு அவர்கள் குடும்பவாகு அதாவது மரபணுக்கள் முக்கியக் காரணம்.
  • தேவையான ஊட்டச்சத்து, நோயற்ற நிலை போன்றவை வெளிக் காரணங்கள். எந்த ஒரு பானத்தைக் குடிப்பதாலும் அதிக உயரம் வந்துவிடாது.
  • அதே போன்று சத்தில்லாத மைதா மாவில் பல விதமான வேதிப் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும் பிஸ்கட், குழந்தைகளின் காலைப் பசியைக் குறைத்து மலச்சிக்கல் மற்றும் பலவித செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இவை ஊட்டச்சத்து உணவுகள் அல்ல.

குறிக்கோள்

  • பொருளாதார எல்லைகளைக் கடந்து பல நாடுகளில் பசி ஏப்பமும், புளி ஏப்பமும் கைகோத்து நடைபோடுகின்றன. இவை இரண்டையும் கட்டுப்படுத்தித் தடுக்க வேண்டும் என்பதே இந்த ஆண்டின் குறிக்கோள்.
  • 60% மகளிரும் 50 லட்சம் சிறு குழந்தைகளும் தினமும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக உயிரிழக்கின்றனர் என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் அச்சுறுத்தும் புள்ளிவிவரம்.
  • பசிப்பிணி இல்லாத சூழல் ஏற்படுமானால் ஆண்டுக்கு 31 லட்சம் குழந்தைகளின் இறப்பு தடுக்கப்படும். ஆரோக்கியமான பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • சத்துணவுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் பல மடங்கு திரும்பக் கிடைக்கும்; அதாவது, மருத்துவச் செலவுகள் குறையும். மேலும், ஊட்டச்சத்துடன் வளரும் குழந்தையின் அறிவும் உடல் பலமும் அதிகம்.
  • ரத்த சோகை இல்லாத குழந்தைகளால் நன்கு படிக்க முடியும். ரத்த சோகை இல்லாத ஆணும், பெண்ணும் நன்றாக உழைத்து பொருளீட்டுவார்கள். தனி மனித வருமானம் உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

சங்க இலக்கியங்களில்

  • சங்க இலக்கியங்களில் மலைவாழ் மக்கள் தினை அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தினர். தினை அரிசிக்கு "ஏனல்' என்ற பெயரும் இருக்கிறது.
  • மகளிர் தினைப்புனத்தை காவல் காத்தனர் என்றும் தினை மாவையும் தேனையும் விருந்தினருக்கு அளித்தனர் என்றும் பல தரவுகள் காணப்படுகின்றன. தேனும் தினை மாவும் என்றால் தமிழ்க் கடவுளான முருகனும் வள்ளியும் ஞாபகம் வருகிறதல்லவா?  "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...' என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
  • தினை அரிசி குறித்த குறிப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலக்கியங்களில் உள்ளன. தங்கள் மொழியில் தனிப் பெயர் இல்லாததால் வளர்ந்த தினைப் பயிர், நரியின் வாலைப்போல் இருப்பதால் அதற்கு நரிவால் தானியம் என்று பெயரிட்டு விளம்பரப்படுத்துகிறார்கள் பன்னாட்டு வியாபாரிகள்.
  • இது நமக்குத் தேவையா! நம் முன்னோர் பயன்படுத்திய உணவு முறைகளை தற்போதைய சூழலுக்குத் தக்கவாறு சிறிது மாற்றங்கள் செய்து கடைப்பிடித்தால் போதும். சிறு துளி பெருவெள்ளம் அல்லவா!

நன்றி: தினமணி (15-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories