TNPSC Thervupettagam

ஊரக உயர் கல்வியும் ஊரக வளர்ச்சியும்

September 5 , 2024 131 days 268 0

ஊரக உயர் கல்வியும் ஊரக வளர்ச்சியும்

  • உயர் கல்வி என்றாலே நகரங்களை மட்டுமே நாடிச் செல்கின்ற நிலை இன்று சற்று மாறியிருக்​கிறது. இருப்​பினும், இந்தியாவில் ஊரகப் பகுதியின் மக்கள்​தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் கல்லூரி​களும் பல்கலைக்​கழகங்​களும் இல்லை.
  • உயர் கல்வி குறித்த கணக்கெடுப்​பின்படி (AISHE, 2021) இந்தியாவில் 1,113 பல்கலைக்​கழகங்​களும் 43,796 கல்லூரி​களும் உள்ளன. இவற்றில் 54.7% பல்கலைக்​கழகங்​களும் 55.2% கல்லூரி​களும் மட்டுமே ஊரகப் பகுதி​களில் நடத்தப்​படு​கின்றன. ஆனால் 2011 கணக்கெடுப்​பின்படி மக்கள்​தொகையில் 69% பேர் கிராமங்​களில்தான் வாழ்கிறார்​கள்​.
  • இந்திய அளவில் உயர் கல்வி பயின்​றோரில் கிராமப்புற மாணவர்கள் 55.2%​தான். தமிழ்​நாட்டில் 59 பல்கலைக்​கழகங்​களும், 2,829 கல்லூரி​களும் இருக்​கின்றன. இவற்றில் 53.1% பல்கலைக்​கழகங்​களும் 51.5% கல்லூரி​களும் மட்டுமே கிராமப்புறப் பகுதி​களில் உள்ளன.
  • தமிழக அளவில் உயர் கல்வி பயின்​றோரில் 51.5% மட்டுமே கிராமப்புற மாணவர்கள். தேசியத் தரமதிப்பீடு (NAAC), தேசியத் தரவரிசை (NIRF) இரண்டிலும் ஊரக உயர் கல்வி நிறுவனங்கள் மிகவும் பின்தங்கி​யிருக்​கின்றன. உயர் கல்வியில் நிலவும் இந்தப் பாகுபாடு வருத்​தமளிக்​கிறது.

ஊரக மேம்பாடு அவசியம்:

  • உயர் கல்வியின் மூன்று தூண்களாகக் கற்றல்​-கற்​பித்தல், ஆராய்ச்சி-ப​திப்​பித்தல், விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றைப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்​துரைக்​கிறது. இவை மூன்றும் ஊரக உயர் கல்வி நிறுவனங்​களில் நகரங்​களைவிட மாறுபட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில், ஊரக உயர் கல்வியின் நோக்கம் ஊரக மேம்பாடாக இருக்க வேண்டும்.
  • நகர்ப்புற மாணவர்​களின் பாடத் ​திட்​ட​மும், ஊரக உயர் கல்வி நிறுவனங்​களின் பாடத்​திட்​டமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்​துக்கு, நகரங்​களில் கணினிப் பயன்பாட்​டியல் பயிலும் மாணவர்கள், பெரும்​பாலும் அவர்கள் வேலைவாய்ப்பை நாடிச் செல்கின்ற பன்னாட்டு - பெருவணிக நிறுவனங்​களின் தேவைகளைப் பூர்த்தி​செய்கிற வகையில், அந்நிறு​வனங்​களின் பங்கேற்போடு உருவாக்​கப்பட்ட பாடத்​திட்​டங்​களையே பயில்கின்​றனர்.
  • ஊரக உயர் கல்வி நிறுவனங்​களில் பயிலும் அதே துறையைச் சேர்ந்த மாணவர்கள், கணினிப் பயன்பாட்​டியல் அடிப்​படைகளைக் கற்றுக்​கொண்டு, அவற்றை ஊரக வளர்ச்​சிக்கு எவ்வாறு பயன்படுத்​தலாம் என்னும் நோக்கில் பாடத்​திட்​டங்கள் அமைய வேண்டும். குறிப்பாக, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு போன்ற​வற்றுக்குக் கணினியை எந்த அளவுக்குப் பயன்படுத்​தலாம் என ஆசிரியர்​களும் மாணவர்​களும் இணைந்து சிந்திக்க வேண்டும்.

புதிய பாடத்​திட்​டங்கள்:

  • ஊரக வளர்ச்​சிக்குப் பெரிதும் உதவுகிற புதிய துறைகளையும் உருவாக்க வேண்டியது, பாட்டாளி அறிவுஜீவி​களின் கடமையாகும். உதாரணமாக, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்​நிலைப் பல்கலைக்​கழகம், மதுரை கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி போன்றவை 1970களின் தொடக்​கத்​திலேயே, ஊரகவியல் என்னும் துறையை உருவாக்கின. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சமூகவியல் போன்ற மூன்று துறைகளின் கூட்டுக்​கல​வையாக இத்துறை உருவாக்​கப்​பட்டது.
  • இந்தத் துறையில் படித்த சில பட்டதா​ரிகள் அரசு வேலையில் (ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை) உள்ளனர். பலர் ஊரகப் பகுதி​களில் தொழில்​முனை​வோராக உருவாகி​யிருந்​தனர். கிராமப்பு​றங்​களில் குடிசை, சிறு-குறு தொழில்கள் வளர்ச்​சி​யடைந்தன. இந்த முன்னு​தா​ரணத்தின் அடிப்​படை​யில், மேலும் சில கிராமத்துக் கல்லூரிகள் ஊரகவியல் படிப்பைத் தொடங்கின.
  • அதேபோன்று, பிற துறைக் கல்வி​யாளர்​களும் முயற்சி எடுக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு, வணிகம் போன்ற​வற்றில் ஊரக இயற்பியல், இனவேதி​யியல், இனத்தாவர​வியல், உள்ளூர் வரலாறு, கிராமப்புறச் சந்தை​யியல் போன்ற கிராமங்களை மேம்படுத்துகிற ஆராய்ச்​சிகளில் முன்னெடுப்பு​களைச் செய்ய வேண்டும்.

விரிவாக்கப் பணிகள்:

  • உயர் கல்வியின் மூன்றாவது தூணாகக் கருதப்​படும் விரிவாக்கப் பணிகள், ஊரகக் கல்லூரி மாணாக்​கர்​களைக் கொண்டு சீரிய முறையில் செயல்​படுத்​தப்​படும்​போது, கிராமங்கள் மெய்யாகவே வளர்ச்​சி​யடை​யும். வீதிகளைத் தூய்மைசெய்வது, மரம் நடுவது என்பதையும் தாண்டி, கல்லூரி அருகே​யிருக்கிற ஒவ்வொரு கிராமத்தின் தனிப்பட்ட தேவைகளை ஆய்வு​பூர்​வ​மாகக் கண்டறிந்து, அவற்றை மேற்சொன்ன துறைசார்ந்த ஆராய்ச்​சிகள் மூலம், புதிதாகத் தீர்வு​களைக் கண்டு​பிடித்துச் செயல்​படுத்​தலாம். கிராமங்கள் தொழில்​மய​மாகி, மின்சாரமயமாகி​விட்டன. இணையமும் சாத்தி​யப்​பட்டு​விட்​ட​தால், கிராமங்கள் கணினிமயமாக வேண்டும்.
  • இதைத்​தான், அப்துல் கலாம் ‘பூரா’ (PURA) என்றார். அதாவது, நகரத்தில் உள்ள அனைத்து வசதிகளும், தொழில்​நுட்​பங்​களும் ஊரகப் பகுதி​களுக்கும் வழங்கப்பட வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் வி.கே.சி. (VKC) திட்டத்தைப் பரிந்​துரைக்​கிறார். ஊரக அறிவு நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பது இவரின் முன்னெடுப்பு. கணினி, இணையம் ஆகியவற்றின் உதவியால் உருவாக்​கப்​படும் இத்தகைய நிறுவனங்கள் விவசா​யிகளுக்கும் மீனவர்​களுக்கும் பேருதவியாக இருக்​கும்.
  • கடற்புரத்தில் வாழ்கின்ற மீனவர்​களுக்கும் கணினிப் பயன்பாட்டைக் கொண்டு​செல்வது ஊரக உயர் கல்வி நிறுவனங்​களின் கடமையாகும். இதன் மூலம் ஊரக-நகர்ப்புற ‘டிஜிட்டல் பிளவு’ தவிர்க்​கப்​படும். விவசா​யிகளும், சிறு/குறு தொழில் செய்வோரும் மீனவர்​களும் கணினி நுகர்​வோராக மட்டும் இருந்​து​விடாமல், வலைதளங்​களில் தங்கள் உள்ளூர் / மரபார்ந்த அறிவுநுட்​பங்​களைப் பகிர்ந்​திடவும் வேண்டும்.
  • மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் (2024-25) அறிவித்​திருக்கிற அக்ரி ஸ்டேக் (Agri Stack) சாத்தி​ய​மாகும்​போது, மேற்கண்டவை அனுகூல​மாகலாம். அக்ரி ஸ்டேக் என்பது விவசா​யிகளின் தரவுகள், நில ஆவணங்கள், காப்பீடு, கடன், பயிர் சாகுபடி மற்றும் அவர்களின் வருமானம் போன்ற அனைத்​தையும் கொண்டிருக்கும் சேமிப்புப் பெட்டகமாக இருக்​கும்.
  • இது விவசா​யிகள், அரசாங்கத் துறைகள், வேளாண் ஆராய்ச்​சி-தொழில்​நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்ற​வற்றை ஒருங்​கிணைக்கும் ஒரு டிஜிட்டல் தளமாகவும் செயல்​படும். பயிர் சாகுபடித் தொழில்​நுட்​பங்கள், உற்பத்தியை மேம்படுத்தும் வழிமுறைகள், வாழ்வா​தாரம் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் தரவுகளை உள்ளடக்கிய தளமாக இது இருக்​கும்.

ஊரகத் தொழில் வளர்ச்சி:

  • நகரமய​மாதல் இந்நூற்​றாண்டின் பெரும் சிக்கலாக உருவெடுத்​திருக்​கிறது. கிராமப்பு​றங்​களில் வேலைவாய்ப்​பின்மையே இதற்கு மூலகாரணம். எனவே, படித்த இளைஞர்களை ஊரகப் பகுதி​களிலேயே தொழில் தொடங்​கவைப்பது, இப்பிரச்​சினைக்குத் தீர்வாக அமையும். முதலாவதாக, உள்ளூரில் உற்பத்தி செய்யப்​படு​கின்ற விவசாய விளைபொருள்​களைச் சந்தைப்​படுத்துதலில் (கணினி உதவியுடன்) வணிகவியல் பட்டதா​ரிகள் ஆர்வம் காட்ட வேண்டும். அடுத்ததாக, அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற, சிறு தொழிற்​கூடங்களை அமைக்க வேண்டும் அல்லது குடிசைத் தொழிலாகவும் செய்ய​லாம்.
  • தனிநபர் தொழில்​முனைவின் அடுத்த பரிமாணமாக மலர்ந்​திருப்பது சமூகத் தொழில்​முனைவு. தனிமனித லாபம் என்பதைத் தாண்டி, சமூக ஆதாயத்தில் கவனம் செலுத்துவோர் சமூகத் தொழில்​முனை​வோர். சமூகமாக முதலீடு செய்து, ஒட்டுமொத்தக் கிராமத்தின் வளர்ச்​சிக்கு வித்திடலாம். கூட்டுப் பண்ணை விவசாயம், பெரிய தொழிற்​சாலைகள் போன்ற சவாலான முன்னெடுப்பு​களைச் சமூகத் தொழில்​முனைவோர் சாத்தி​யப்​படுத்​தலாம். இவை நிகழும்​போது, நகரமய​மாதல் கண்டிப்​பாகத் தவிர்க்​கப்​படும்.

ஊரக வளர்ச்​சியும் சாதி ஒழிப்பும்:

  • ஊரக வளர்ச்சி என்று சிந்திக்​கிற​போது, கிராமங்​களில் புரையோடிப்போன சாதி அமைப்பையும் நாம் கவனத்​தில்​கொள்ள வேண்டி​யிருக்​கிறது. நகரமய​மாதல் மூலம் சாதியும், சாதிரீதியிலான சமூக உறவும் தளரும் என்பதில் ஓரளவு உண்மை​யிருக்​கிறது. இருப்​பினும், நகரங்​களிலும் முழுமை​யாகச் சாதியை ஒழிக்க முடிய​வில்லை என்பதே யதார்த்தம்.
  • எனவே, கிராமங்​களைத்தான் சமத்து​வபுரங்களாக உருவாக்க வேண்டி​யிருக்​கிறது. கிராமசபை வலுவான அரசமைப்பு. அதில் பிற்படுத்​தப்​பட்ட, தாழ்த்​தப்​பட்ட, பழங்குடி​யினர் அனைவரும் சமமாகப் பங்கெடுப்பதன் வழியாக, ஒடுக்​கப்​பட்​டோருக்கான அதிகாரப் பரவலைச் சாத்தி​ய​மாக்​கலாம்.
  • இந்த இலக்குகளை அடைய, ஊரகப் பகுதி​களில் அரசுப் பல்கலைக்​கழகங்​களும் அரசுக் கல்லூரி​களும் தொடங்​கப்பட வேண்டும். விஜடி பல்கலைக்​கழகத்தின் வேந்தர் கோ.விசுவநாதன், “உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை தனியார் கல்வி நிறுவனங்​களில்தான் அதிகம். இந்த உண்மையை அரசு பெருந்​தன்​மையாக ஒப்புக்​கொண்டு, அவர்களுக்கு வரிச் சலுகைகள், மானியங்கள் போன்ற​வற்றை வழங்க வேண்டும்.
  • அதனால், தனியார் உயர் கல்வி நிறுவனங்​களில் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்று கூறுவது நாம் கவனத்​தில்​கொள்ள வேண்டியது. கிராமப் பகுதி​களில் நடத்தப்​படு​கின்ற தனியார் உயர் கல்வி நிறுவனங்​களுக்கு அரசின் ஊக்கு​விப்பு மிக அவசியம். அரசு மனம் கொள்ளட்​டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories