ஊரக உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப் படலாமா?
- தமிழ்நாட்டில் 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும்வரை, தனி அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நீண்ட காலத்துக்குத் தள்ளி வைக்கப்படுவது, அரசின் நலத்திட்டங்களைக் கடைக்கோடி மக்கள்வரைக்கும் கொண்டுசெல்வதற்கும் மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதற்கும் பெரும் தடையாக இருக்கும் என்கிற கவலை எழுந்திருக்கிறது.
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களுக்கு 2019இலும் புதிய மாவட்டங்களின் உருவாக்கம் காரணமாக மறுசீரமைப்புக்குள்ளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 2021இலும் நடைபெற்றது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். 2019இல் பொறுப்பேற்றவர்களின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5இல் முடிவடைகிறது. அடுத்த தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் 45 நாள்களுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அறிவிப்போ, வாக்காளர் பட்டியலோ வெளியிடப்படவில்லை. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை எனச் செய்திகள் வெளியாகின. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாற்றாகத் தனி அலுவலர்கள் நியமிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டது.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் முனியன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்குக்குத் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் டிசம்பர் 21 அன்று அளித்த பதில் மேற்கண்ட கணிப்புகள் உண்மை என்பதை உணர்த்துகிறது. திருவண்ணாமலையை மாநகராட்சியாக்கி, அதனுடன் பல கிராமப் பஞ்சாயத்துகளை அரசு இணைத்துள்ளது. ஆனால், புதிய தொகுதிகளுக்கான வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெறவில்லை. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சில பஞ்சாயத்துகளில் பட்டியல் சாதியினருக்கும் பெண் பிரதிநிதிகளுக்கும் கிடைக்கவேண்டிய இடங்கள் பறிபோயுள்ளன. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை மேற்கொள்ளாமல் அடுத்த தேர்தலை நடத்தக் கூடாது என்பதே மனுதாரரின் கோரிக்கை. அப்பணிகள் நிறைவடைந்த பின்னரே, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றம் அவ்வழக்கை முடித்து வைத்துள்ளது.
- மறுவரையறையின்போது கிராமப் பஞ்சாயத்துகளை அருகிலுள்ள நகராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கையைப் பல பகுதிகளில் மேற்கொள்ள இயலவில்லை. மக்களின் எதிர்ப்பும் ஒரு காரணம். உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத் தரப்பினரது பிரதிநிதித்துவமும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்கிற அரசின் அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதை முன்வைத்துத் தேர்தலைத் தள்ளிவைப்பது சரியல்ல. மறுசீரமைப்பு ஆணையம் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே முன்தயாரிப்புப் பணிகளை முடித்துவிடும் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைப் போலத் தமிழகமும் செயல்பட முடியும்.
- தொகுதி மறுவரையறைப் பணிகளைக் காட்டி, உள்ளாட்சித் தேர்தல்களைத் தாமதப்படுத்தக் கூடாது என ஏற்கெனவே ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தங்களில் ஒருவரைப் பிரதிநிதியாக்கி, தங்கள் வார்டு சார்ந்த பிரச்சினைகளை அவர் மூலம் அரசின் நிர்வாகத்துக்குக் கொண்டுசேர்ப்பது உள்ளாட்சித் தேர்தல் மூலமே சாத்தியமாகிறது. அந்தப் பணியை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பது நிர்வாகத்திடமிருந்து சாமானிய மக்களை வெகுதொலைவில் நிறுத்துவதாகும். ஏற்கெனவே அரசு அதிகாரிகள் பணிச்சுமையோடு இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. மாநிலத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 12 – 2024)