TNPSC Thervupettagam

ஊரடங்கு: ஸ்வீடனிலிருந்து ஒரு செய்தி!

June 17 , 2020 1678 days 1304 0
  • ஒருங்கிணைந்த திட்டமிடலுக்காக ஸ்வீடனை மேற்கோள் காட்டி விவாதித்த காலம் மாறி, இப்போது அந்த நாடு கரோனாவை எப்படி அணுகுகிறது என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது.
  • அதற்கான முக்கியக் காரணம், கிருமியுடன் வாழ்தல் எனும் நிலைப்பாட்டை ஸ்வீடனே அறிமுகப்படுத்தியது.
  • விளைவாக, அச்சத்திலிருந்து உலகம் வெளியே வர வழிவகுத்தது. அந்த அணுகுமுறை ஸ்வீடனுக்கு முழுமையான பலனை அளித்திருக்கிறதா?
  • ஸ்வீடனின் தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்நெல் கரோனாவுக்கு முன்னால் எந்தெந்தத் தொற்றுநோய்கள் கொள்ளைநோய்களாக மாறின, தடுப்பூசிகளோ சரியான மருந்து மாத்திரைகளோ இல்லாதபோது அவையெல்லாம் எப்படிக் குறைந்தன என்ற பழைய வரலாறுகளை ஆழ்ந்து கவனித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
  • முழு ஊரடங்கு அவசியமில்லை, மக்களை வழக்கம்போல இருக்க அனுமதிப்போம் என்று முடிவெடுத்தார். அரசும் அதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்தியது.

டெக்நெல் கூற்று

  • ‘இந்நோய்க்கு மருந்து மாத்திரைகளோ தடுப்பூசிகளோ இல்லை என்பதால், இதைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம். அதே சமயம், பீதியடையக் கூடாது.
  • அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர வேண்டாம். முதியோர் இல்லங்களில் கூடுதல் சுகாதார ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • மக்கள் தாங்களாகவே தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஐம்பது பேர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட வேண்டாம்.
  • அதே சமயம் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், சந்தைகள், கடைகள், பேரங்காடிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை. அச்சப்படுகிறவர்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யட்டும்.
  • நாட்டில் எல்லாவிதமான போக்குவரத்தும் தொடரட்டும். பொதுப் போக்குவரத்தின்போது ரயில் - பேருந்துகளில் தனிநபர் இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இளைஞர்கள் விருப்பம்போல வெளியே போய்விட்டு வரட்டும்.
  • அவர்களிடம் நோய்க்கிருமிகள் தொற்றினாலும் அது சமூகப் பரவலாகி அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகிவிடும்’ என்றார் டெக்நெல்.

இதுதான் நிகழ்ந்தது

  • ஆண்டர்ஸ் டெக்நெல் அளித்த பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்றது. அந்நாட்டின் மக்கள்தொகை ஒரு கோடிக்குள்தான். அதிலும் நெரிசல், நெருக்கடி கிடையாது.
  • எனவே, மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் மாறுதல் ஏற்படவில்லை. பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ந்தன. கரோனாவின் அறிகுறிகள் தமக்கு இருப்பதாக உணர்பவர்கள் மருத்துவச் சான்றிதழ்கள் பெறாமலே மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
  • ஸ்வீடனின் பொது சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனை செய்துகொண்டவர்கள், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள், சிகிச்சை பெற்றுவருபவர்கள், கரோனாவுக்குப் பலியானவர்கள் பற்றிய விவரங்களை அளித்தது.
  • பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். செய்தித்தாள்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகளை அளித்துவந்தார்.
  • ஒப்பீட்டளவில் அதன் பக்கத்து நாடுகளைக் காட்டிலும் ஸ்வீடனில் குறைவாகவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமை தீவிரமாக இல்லை என்றால் கரோனாவுக்கு ஆளானவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சைபெற அறிவுறுத்தப்பட்டார்கள்.
  • ஆனால், இந்த அணுகுமுறை பலனளிக்கவில்லை. ஏப்ரலில் பக்கத்து நாடுகளான நார்வே, டென்மார்க், பின்லாந்தைவிட ஸ்வீடனின் உயிரிழப்பு விகிதம் மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது.
  • ஜூன் 15 நிலவரப்படி 51,614 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்கள் 4,874. முழு ஊரடங்கு தேவைப்படாது என்று தான் எடுத்த முடிவு தவறுதான் என்று டெக்நெல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
  • இப்போதும் முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும் ஓரளவு கட்டுப்பாடுகளை ஸ்வீடன் அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. இது நல்ல பலன் அளிக்கிறது.

ஸ்வீடனிடமிருந்து கற்க வேண்டியவை

  • ஸ்வீடனிடமிருந்து கற்க இரு வகைகளிலும் விஷயங்கள் உள்ளன. முழு ஊரடங்கைத் தவிர்த்தாலும், முதியோர் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் கொண்டவர்களைத் தொடர்ந்து கவனத்துடன் பராமரிக்கவும் செய்தது.
  • ஏனைய தரப்பினரை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பழைய வாழ்விலேயே அனுமதித்தது. விளைவாக, ஊரடங்கால் மற்ற நாடுகளைப் போல பொருளாதாரம் மோசமான அளவுக்குப் பாதிக்கப்படவில்லை.
  • ஆனால், அச்சத்தோடு எச்சரிக்கையையும் மக்கள் கைவிட்டதன் விளைவு, பாதிப்பு எண்ணிக்கையை அதிகமாக்கியிருக்கிறது. மாறாக, கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் கூடிய, முன்னெச்சரிக்கையுடனான இயல்பு வாழ்க்கையே சரியானது என்பதையே ஸ்வீடன் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
  • ஸ்வீடனிலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய பாடங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களால் தான் அங்கு நோய்ப்பரவல் அதிகரித்தது.
  • அதற்காக ஸ்வீடனில் யாரும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டவில்லை. அதுபோலவே தலைநகர் ஸ்டாக்ஹோம், நோய்ப்பரவலின் குவிமையமாக இருந்தது.
  • அதற்காகத் தலைநகரில் வசிப்பவர்களை அந்நாட்டினர் தள்ளிவைத்துவிடவில்லை. முக்கியமாக, அரசின் அறிவுறுத்தலை மக்கள் முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. முகக்கவசம் அணிகிறார்களா இல்லையா என்று காவல் துறையினர் சோதனை நடத்துவதில்லை.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, மருத்துவக் கட்டமைப்பு அங்கு வலுவாக இருக்கிறது. இத்தாலியைப் போல மருத்துவக் கட்டமைப்புகள் அங்கு வீழ்ச்சியடையவும் இல்லை, சீனாவைப் போல அவசரகதியில் மருத்துவமனைகளைக் கட்ட வேண்டிய தேவையும் எழவில்லை.
  • இயல்புக்குத் திரும்புதல் என்ற முடிவு ஸ்வீடனின் அசட்டுத் துணிச்சலிலிருந்து அல்ல; ஓர் இடரை எதிர்கொள்ள எப்போதும் அந்நாடு தயாராக இருப்பதாலும்தான் எடுக்கப்பட்டது.

நன்றி: தி இந்து (17-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories