TNPSC Thervupettagam

ஊருக்கு இளைத்தவர்களா உள்ளாட்சிப் பிரதிநிதிகள்?

September 12 , 2024 125 days 125 0

ஊருக்கு இளைத்தவர்களா உள்ளாட்சிப் பிரதிநிதிகள்?

  • இந்திய ஜனநாயகம் மூன்று அடுக்குகளைக் கொண்டது – நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள். இவற்றில் மூன்றாவதாக உள்ள உள்ளாட்சி அமைப்புகள்தாம் சாமானியர்களால் ஓரளவுக்கு அணுக முடிவதாக இருக்கிறது. அதனால்தான், மகாத்மா காந்திஉள்ளிட்ட பல தலைவர்கள், இந்திய ஜனநாயகம் கிராமங்களில் வாழ்வதாக நம்பினார்கள். அடித்தட்டு மக்களின் குரலாக, தோழனாக இருந்து சேவை ஆற்றுகிற இடத்தில் இருப்பவை – ஊராட்சி அமைப்புகள். மாநகராட்சி, நகராட்சிகளை விடவும், (கிராம) ஊராட்சி மன்றங்கள், கடைகோடி மனிதனின் கோரிக்கைகளைக் குறைந்த பட்சம், காது கொடுத்துக் கேட்கின்ற நிலையிலாவது இருக்கின்றன.
  • ‘ஜனநாயகத்துக்கு ஆபத்து’ இப்படி யாரேனும் கூறினால், உடனே இதனை ஆதரித்து அல்லது எதிர்த்து ஊரே அமர்க்களப்படும். நாடாளுமன்ற ஜனநாயகம் அல்லது சட்டமன்ற ஜனநாயகம் மட்டும்தான் இதற்குள் வரும். ஊராட்சிமன்ற ஜனநாயகம் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. இரு நாட்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு ஊராட்சி மன்றத் தலைவர், சட்டப்படியான கடமைகளில் இருந்து தவறி விட்டார், ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தினார், சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் ஆகிய காரணங்களுக்காக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-இன் கீழ், மாவட்ட ஆட்சியரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • இதேபோன்று கடந்த ஆண்டு செப்டம்பரில், தென்காசி அருகே சீவநல்லூர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. தம்மை தேர்ந்தெடுத்த மக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்போர் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள்தாம். இவர்களே முறைகேடுகளில் ஈடுபட துணிந்தால்…? நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் அச்சம் தருவதாய் இருக்கிறது. முறைகேடுகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், இதனைச் செய்ய வேண்டியது யார்? நீதிமன்றம். ஆனால், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி இந்த அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது. இது தவறு; உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
  • ‘அவசர சந்தர்ப்பங்களில்’ மாவட்ட நீதிபதி பொறுப்பில் மாவட்ட ஆட்சியர் செயல்படலாம். ஆனால், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களைப் பதவி நீக்கம் செய்தல்…. மன்னிக்கவும், ஏற்புடையது அல்ல. மாவட்ட ஆட்சியருக்கு பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் இருந்தால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எவ்வாறு சுதந்திரமாக செயல்பட இயலும்? திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கால் கடுக்க நின்று கைகட்டிக் கெஞ்ச வேண்டிய நிலையில் உள்ளாட்சித் தலைவர்கள் உள்ளதை எத்தனை பேர் அறிவோம்? இது, அரசு நிர்வாகத்தில் ஊழலை வளர்க்குமா? குறைக்குமா?
  • உள்ளாட்சி அமைப்புகள், யாரையும் சாராது தனித்து இயங்குகிற சுய அதிகார அமைப்புகளாக செயல்படுவதையே அரசமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது. ‘சுயாட்சி அலகுகளாக கிராம பஞ்சாயத்துகள் செயல்பட, வேண்டிய அதிகாரங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்’ என்று சாசனம் (பிரிவு 40) கூறுகிறது. சாசனத்தின் பாகம் 4 ‘அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள்’ கீழ் வருவதால், இந்தப் பிரிவில் சொல்லப்பட்டு இருக்கும் எதையும் நீதிமன்ற உத்தரவு மூலம் கட்டாயப் படுத்த முடியாது. இப்படிச் சொல்லி யாரும் தப்பித்து விடக் கூடாது என்பதற்காகவே, சாசனத்தின் பாகம் 9, தனியே ‘பஞ்சாயத்துகள்’ குறித்துப் பேசுகிறது.
  • ‘சட்டம் ஒருவரைத் தகுதி நீக்கம் செய்தால் அன்றி, அவர் பஞ்சாயத்து உறுப்பினராக நீடிக்க, வேறு எந்தத் தடையும் இருக்க இயலாது’ என்று பி.243F(1) தெளிவாகக் கூறுகிறது. ‘சட்டப்படி’ நீக்கம் என்றால் அது நீதிமன்ற உத்தரவின் மூலமாக அன்றி வேறு வகையில் இருத்தல் ஆகாது. சாசனம் இத்தனை தெளிவாகக் கூறியும், நீதிமன்ற ஆணை இன்றி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் மூலம் பஞ்சாயத்து உறுப்பினர் / தலைவரைப் பதவி நீக்கம் செய்தல், அவரது அதிகாரத்தைப் பறித்தல்… சாசன நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. நீதிமன்ற நடவடிக்கை மூலமே, பதவிப் பறிப்பு உள்ளிட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும்.
  • மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக கூவுவோர், பஞ்சாயத்துகளில் அதிகாரங்கள், பதவிகள் மாநில அரசின் அதிகாரிகளால் பறிக்கப்படும் போது மவுனம் ஆகி விடுகின்றனர். கடந்த 2010-ல் ‘யூனியன் பாங்க் ஆப் இந்தியா – எதிர் – ராகேஷ்குமார்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியது: ‘‘மரபு ரீதியாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள், சுய அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில் கால் பதிப்பதை உறுதி செய்ய வேண்டும்; இதற்குத் தேவையான ஜனநாயகப் பரவலை உருவாக்குவதே ‘பஞ்சாயத்துகள்’ என்கிற, சாசனத்தின் பாகம் 9-ன் அடிப்படை நோக்கம்’’.
  • தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்ளும் அதிகாரத்தை அடித்தட்டு மக்களுக்கு வழங்குவதே பஞ்சாயத்துகளின் பண்பும் பயனும் ஆகும். ஜனநாயகத்தின் அடிநாதம்’ ‘அதிகாரப் பகிர்வு’; அதிகாரப் பறிப்பு அல்ல. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கைகள் எடுக்கலாம். அது – நீதிமன்ற நடவடிக்கையாக இருத்தல் வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை, தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் வழங்குகிறது. இந்த ‘வசதி’, உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
  • குற்றப் பின்னணி கொண்டவர்கள் சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லையா? முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சர்களாகத் தொடரவில்லையா? நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடம் காட்டப்படாத கடுமை, கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது மட்டும் காட்டுவது ஏன்? பொதுவாழ்வில், அரசுப் பணியில் தூய்மை நிச்சயம் வேண்டும். தவறு இழைப்போர், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்; முறையாக தண்டிக்கப்பட வேண்டும். எல்லாருக்குமான இந்தப் பொது விதி, கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகள் / உறுப்பினர்களுக்கு மட்டும் மறுக்கப்படலாமா? இதனால் கடைநிலை ஜனநாயகம் பாதிப்புக்கு உள்ளாவதை சரி செய்ய வேண்டாமா?
  • மக்கள் பிரதிநிதிகளில் சிலர் மட்டும் ‘சற்றே குறைந்த சமம்’ என்பது எப்படி சரியாகும்? ‘ நமக்கு’ இணையாக ‘இவர்களுக்கு’ அதிகாரமா என்ற எண்ணம், ஜனநாயக நெறிமுறைகளை சிதைத்து விடும். அடித்தட்டு மக்களை அந்நியப் படுத்தி விடும். இது யாருக்கும் நல்லதல்ல.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories