TNPSC Thervupettagam

ஊழல் ஒழிக்கப்படும் நாள் எந்நாள்

September 14 , 2023 485 days 366 0
  • பல காலமாக மன்னர் ஆட்சியே எங்கும் நடைமுறையில் இருந்து வந்தது. மன்னர்களே அனைத்து அதிகாரங்களும் படைத்தவர்கள். அவர்களே குடிமக்களின் உயிர் என்று அக்கால இலக்கியங்கள் கூறுகின்றன. இதனால்தான் "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்று கூறினர். உலகம் தோன்றிய காலத்திலிருந்து இது தொடர்ந்தது.
  • காலம் எல்லாவற்றையும் மாற்றும் ஆற்றல் பெற்றது. மாபெரும் மன்னர்களின் ஆட்சியதிகாரம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. மக்களாட்சி மலர்ந்தது. மக்களாட்சியில் மக்களே முழு அதிகாரம் படைத்தவர்கள் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், இந்த மக்களாட்சியில்தான் இப்போது ஊழல்களே அரசாட்சி செய்து கொண்டிருக்கின்றன. அதனை ஒழிக்காமல் ஓயப் போவதில்லை என்ற அரசியலவாதிகள் சூளுரைக்கின்றனர்.
  • சுதந்திர இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. 2011-ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின்படி, உலகில் ஊழல் மிகுந்த 178 நாடுகளில் 95-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது.
  • "பணமோசடி தடுப்புச் சட்டம்', "ஊழல் தடுப்பு சட்டம் 1988' போன்ற பல சட்டங்கள் இந்தியாவில் இருந்தபோதிலும் ஊழல் மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அதன் அசுர வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. ஊழல் தடுப்புக் காவலர்களே அதற்கு உடந்தையாக இருக்கின்றனர்.
  • ஊழல் என்பது தனிமனிதனை மட்டுமன்றி, நாட்டின் வளர்ச்சியையும் முடக்கி விடுகிறது. திறமை மிக்கவர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தவறு செய்யும்போது பாமர மக்கள் என்ன செய்ய முடியும்? வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் முடியும். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசின் உதவிகள் சென்று சேராமல் தடுக்கப்படுகிறது.
  • ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆங்கில அரசின் இந்தியத் தண்டனை சட்டத்தில் போதிய வழி இல்லாததால் விடுதலை பெற்ற இந்திய அரசு 1947-இல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது. பிறகு அதே சட்டத்தைப் பல்வேறு திருத்தங்களுடன் இப்போது நடைமுறையில் உள்ள "ஊழல் தடுப்புச் சட்டம் 1988' நடைமுறைக்கு வந்தது.
  • இச்சட்டத்தின்படி கையூட்டு பெற்ற அல்லது ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மக்கள் மன்ற பிரதிநிதிகளான சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசின் உதவி பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசிடம் நிதியுதவி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசின் அமைச்சரான செந்தில் பாலாஜி இப்போது ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். சட்டவிரோத பண பரிவர்த்தனைத் தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, அவரைக் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் இலாகா இல்லாத அமைச்சராகவே நீடித்து வருகிறார்.
  • ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
  • சிஐடி விசாரணையில் தனியார் நிறுவனங்களுக்கு அவர்களின் 90 விழுக்காடு பங்களிப்புநிதியை விடுவித்து பணியைத் தொடங்காத நிலையில், மாநில அரசின் சார்பில் 10 விழுக்காடு பங்களிப்பு தொகையாக ரூ.371 கோடி விடுவிக்கப்பட்டதும், அந்த நிதி போலி ரசீதுகள் மூலம் கணக்குக் காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மாநில குற்றப் புலனாய்வு பிரிவு அவரை கைது செய்துள்ளது.
  • குற்றம் சாட்டப்படுவதனாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார். பல நேரங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதும் உண்டு. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கெண்டுதான் இருக்கின்றனர் என்பதையும், ஆட்சியதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல என்பதையும் அரசியல்வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும். அறமே இறுதியில் வெல்லும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "லஞ்ச ஒழிப்புத் துறை சுதந்திரமான முறையில் செயல்படாமல் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாகச் செயல்படுகிறது. இதுபோன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமுதாயத்தைச் சிதைத்துவிடும்' என்று கூறியுள்ளார்.
  • கடந்த 2001 முதல் 2006 வரையிலான ஆண்டுகளில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக . பன்னீர்செல்வம் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 77 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2006-இல் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
  • இந்த வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் . பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. "எம்.பி., எம்.எல்..க்களுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் மறு ஆய்வு செய்யப்படும்.
  • எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை, எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியாக வரும்போது மேல் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, அதன்பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வழி செய்கிறது. இவ்வாறு குற்ற விசாரணை நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்படிகின்றன. சட்டங்கள் எம்.பி., எம்.எல்..க்களுக்கு பொருந்தாது என்று அறிவித்து விடலாம்' என்று நீதிபதி மனம் வருந்திக் கூறியுள்ளார்.
  • அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஓசிசிஆர்பி என்னும் அமைப்பு அதானி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
  • அதானி குழுமம் பங்குச் சந்தையில் தனது நிறுவனங்களுடைய பங்குகளின் விலையை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தி வருகிறது.
  • இந்நிலையில், திட்டமிடப்பட்ட குற்றங்கள் - ஊழல் தடுப்புத் திட்டம் (ஓசிசிஆர்பி) என்ற அமைப்பு அதானி குழுமத்தின் மீது புதிய மோசடி குற்றச்சட்டை முன்வைத்துள்ளது. வரி விதிப்பு குறைவாக உள்ள நாடான மோரீஷஸிலிருந்து போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக அதானி நிறுவனங்களில் சிலர் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • தொழிலதிபர் கெüதம் அதானிக்கு நெருக்கமானவர்களே இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அதானி குழுமத்தின் மின்னஞ்சல் தகவல்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த மோசடி கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
  • அதானி குடும்பத்தினருடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்து வரும் நாசர் அலி, சபான் அலி, சாங்சுங் லிங் ஆகியோர் அதானி பங்குகளை அதிக அளவில் வாங்கி, அவற்றை மோரீஷஸ் நாட்டில் முறைகேடாக விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்துக்குப் பெருமளவில் வருவாய் கிடைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
  • நாட்டை ஆட்சி செய்யும் தலைவன் நடுநிலை தவறாமல் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டும். அவ்வாறு ஆட்சி செய்பவன் அவனது குடிமக்களுக்கு இறைவனாகவே போற்றப்படுவான் என்று வள்ளுவர் கூறுகிறார். மேலும், நாட்டை ஆட்சி செய்யும் தலைவன் தீயவனாக அமைந்து விட்டால் அவனைச் சார்ந்த குடிமக்களும் அறநெறி தவறிப் பொருள் ஈட்ட முனைவர். இதனால் நாடும், நாட்டு மக்களும் அல்லல்படுவர் என்றும் கூறிகிறார்.
  • ஆனால் இன்றைய மக்களாட்சியில் எல்லா அறநெறிகளும் புறந்தள்ளப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் ஆசையும், சுயநலமுமே காரணமாக அமைந்துள்ளன. "ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஒரே ஒரு மனிதனின் பேராசையை ஒருபோதும் யாராலும் நிறைவேற்ற முடியாது' என்று கூறினார் மகாத்மா காந்தி.
  • இன்று நாட்டில் நடக்கும் எல்லா ஊழல்களுக்கும் பேராசையே காரணமாகும். பல தலைமுறைக்குச் சொத்துச் சேர்க்கும் அரசியல்வாதிகள் இதை எப்போது எண்ணிப் பார்க்கப் போகின்றனர்?
  • "விழிப்பான இந்தியா வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பற்றிய தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்துள்ளார். அது நடைமுறைக்கு வரும் போதுதான் விழிப்பான இந்தியாவையும், வளமான இந்தியாவையும் பார்க்க முடியும். "ஊழலை ஒழிப்போம்' என்று முழங்கினால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

நன்றி: தினமணி (14 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories