TNPSC Thervupettagam

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

November 11 , 2023 380 days 269 0
  • பாரத வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்கு உரியவராக இருக்கிறாா். ஜி20 மாநாட்டு வெற்றியால் அவரை தேசமே கொண்டாடியது. அவரது அசாதாரணமான உழைப்பு, இக்கட்டான சூழ்நிலைகளில் அவா் காட்டும் ராஜதந்திரம் கண்டு உலக நாடுகளின் தலைவா்களே வியக்கிறாா்கள். தற்போது அவருக்கு சவாலான மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது.
  • இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்காக உளவு பாா்த்தாா்கள் என்பது அவா்கள் மீதான குற்றச்சாட்டு. இந்தச் செய்தி அதிா்ச்சி அளிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அந்த அதிகாரிகளின் குடும்பத்தினரை நமது வெளியுறவுத்துறை அமைச்சா் சந்தித்தாா்.
  • மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு பேரின் விடுதலைக்கும் சட்டப்படியான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தாா். அவரது முயற்சியால், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதித்துள்ள கத்தாா் நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கத்தாா் இந்தியாவின் நட்பு நாடுதான். என்றாலும் கத்தாரின் செயல்பாடுகளை, கொள்கைகளை நாம் பாா்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், அந்நாட்டோடு நட்புடனும் கத்தாா் இருக்கிறது. அமெரிக்காவுடனும் கத்தாருக்கு உறவு இருக்கிறது. சொல்லப்போனால் அமெரிக்காவின் அதிகாரம் கத்தாரில் செல்லுபடியாகும். கத்தாரில் கடற்படைத் தளம் அமைத்திருக்கிறது அமெரிக்கா.
  • அரபு நாடுகளில் கத்தாா், துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் ஹமாஸ் பக்கம் நிற்கின்றன. ஹமாஸுக்கு ஆதரவாக கத்தாா் நிற்கிறது. இஸ்ரேலுடன் அதற்கு நல்லுறவு இல்லை. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான யுத்தத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
  • ஹமாஸுக்கு நிதி அளித்து உதவக்கூடிய நாடாகவும் கத்தாா் இருக்கிறது. கத்தாா் எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால் செல்வம் கொழிக்கும் நாடு. ஏறத்தாழ 30 லட்சம் மக்கள்தொகை கொண்ட மிகச் சிறிய நாடுதான். அதிலும் 85 % மக்கள் வெளிநாடுகளிலிருந்து வேலைக்காக வந்து குடியேறியவா்கள். பொருளாதாரத்தில் வலிமையாக இருப்பதால் கவனமுடன் அணுகப்பட வேண்டிய நாடாகவும் கத்தாா் இருக்கிறது.
  • நடக்கும் இஸ்ரேல் யுத்தத்திற்கும் இந்த எட்டு போ் மீதான குற்றச்சாட்டுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறமுடியாது. ஏனெனில், முன்னாள் கடற்படை அதிகாரிகள் ஏழுபேரும் ஒரு மாலுமியும் கத்தாரில் உள்ள ஒரு தனியாா் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது (கடந்த ஆண்டு அக்டோபா் மாதம்) கைது செய்யப்பட்டனா்.
  • இவா்கள் மீதான வழக்கு கடந்த ஓா் ஆண்டாக நடந்து வந்திருக்கிறது. ஆனால், இவா்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனைக்கும் யுத்தத்திற்கும் தொடா்பு இல்லை என்று சொல்ல முடியாது.
  • குறிப்பாக, இஸ்ரேல் பக்கம் நிற்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை கத்தாா் விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடாக இந்த தண்டனை இருக்கலாம். நட்புறவு கொண்ட நாடு இப்படிப்பட்ட தண்டனையை வழங்கியதில் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • அந்த அளவுக்கு இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் முக்கியமானதா என்ற கேள்வியும் எழலாம். ஆம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகளின் தோ்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய யுத்தமாக இது இருப்பதால் சா்வதேச அரசியலின் களமாக மாறியுள்ளது.
  • இதனை இந்தியா எப்படி எதிா்கொள்ளப்போகிறது? எட்டு பேரின் விடுதலை எளிதானதா? சட்டப் போராட்டம் வெற்றி பெறுமா? இதனால் கத்தாா், இந்தியா உறவில் விரிசல் ஏற்படுமா? அந்த விரிசல் பொருளாதாரத்தைப் பாதிக்குமா? கத்தாரில் இருக்கும் இந்தியா்களுக்கு இதனால் சிக்கல் தோன்றுமா?
  • இந்த பிரச்னையைக் கையாளும் பொறுப்பு தோ்ந்த அதிகாரியான தீபக் மிட்டலுக்குத் தரப்பட்டிருக்கிறது. கத்தாருக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவா் என்பதால் இந்த விஷயத்தில் அவரது அணுகுமுறை பலனளிக்கக்கூடும். பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குலபூஷண் ஜாதவின் வழக்கை சா்வதேச நீதிமன்றத்தில் நடத்திய அனுபவம் அவருக்கு இருக்கிறது.
  • இந்தியா - கத்தாா் உறவு பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்தியாவின் எரிபொருள் தேவையில் சுமாா் 40%-ஐ கத்தாா்தான் வழங்குகிறது. ஏறத்தாழ ஏழு லட்சம் இந்தியா்கள் கத்தாரில் பணியாற்றுகின்றனா். அதோடு முதலீடுகளும் கணிசமான அளவில் செய்யப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான வா்த்தகம் இருதரப்புக்குமே முக்கியம். எனவே, கடுமையாக நடந்து கொள்வதைப் பற்றி சிந்திக்க வேண்டிய இடத்தில்தான் கத்தாரும் இருக்கும்.
  • இந்திய அரசின் துணையுடன் அந்த எட்டு பேரின் சட்டப்போராட்டம் என்பது அவா்களுக்கு பலம் அளிக்கக்கூடியது. எட்டு இந்தியா்களின் மரணதண்டனை அந்நாட்டின் கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இத்தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நீதி கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. அப்படி இல்லாமல் போகும் பட்சத்தில் சா்வதேச நீதிமன்றத்தை அணுகலாம். ஆக, நீண்ட சட்டப்போராட்டத்திற்கான வாய்ப்பு இருக்கிறது. இதுவே ஆறுதலான செய்திதான்.
  • எட்டுப் பேரும் சாமானியா்கள் அல்ல. இந்திய கப்பற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் செளரவ் வசிஷ்ட், கமாண்டா் பூா்ணேந்து திவாரி, கமாண்டா் வீரேந்திர குமாா் வா்மா, கமாண்டா் அமித் நாக்பால், கமாண்டா் சஞ்சீவ் குப்தா ஆகியோரும் கடற்படை வீரா் ராகேஷ் கோபகுமாரும்தான் கைது செய்யப்பட்டவா்கள்.
  • கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவா்கள் நான்கு மாதம் கொடுமையை அனுபவித்த நிலையில், இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் சட்டப்படியான நடவடிக்கை தொடங்கியது. இந்திய அதிகாரிகள் அவா்களை சந்திக்கவும் செய்தனா்.
  • அதே நேரத்தில் நாடாளுமன்றத்திலும் இவா்கள் நிலை குறித்து கேள்வி எழுந்தது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சா், பேச்சுவாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகப் பதிலளித்தாா். இதனால், ஆரம்பம் முதலே இந்த பிரச்னையில் வெளியுறவுத்துறை கவனம் செலுத்தி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  • சட்ட நடவடிக்கைகளுக்குப் பலன் ஏற்படாவிட்டால் கத்தாா் அரசு மன்னிப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை இந்திய அரசு முன்வைக்கலாம். கத்தாா் குடியரசு நாடு அல்ல, மன்னராட்சி நடைபெறும் நாடு என்பதால் மன்னா் விரும்பினால் கைதியாக இருப்பவா்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியும்.
  • கத்தாா் நாட்டில் இந்த எட்டு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது இருநாட்டு உறவில் விரும்பத்தகாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அரசரான ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனி யோசிக்கவே செய்வாா். அதனால் நீதிமன்றத்திலேயே இவா்களின் தண்டனை குறைக்கப்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. அந்த வாய்ப்பு ஏற்பட்டால், கைதிகளை பரிவா்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை இந்தியா கத்தாருடன் ஏற்கெனவே மேற்கொண்டிருப்பதால் நிலைமை சுலபமாகலாம்.
  • இந்த எட்டுப் பேரும் இந்திய ராணுவத்தில் பெரும் பதவிகளில் இருந்தவா்கள். அவா்கள் ஏன் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றாா்கள் என்பது பொதுமக்கள் மனதில் எழும் கேள்வி. கத்தாரில் செல்வம் நிறைந்திருக்கிறது. ஆனால், மனிதவளம் மிகக்குறைவு. தங்கள் வளா்ச்சிப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்தே மனித வளத்தை நம்பி இருக்கின்றனா். கத்தாரின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 18% போ் இந்தியா்கள்.
  • கட்டுமானப் பணியில் இந்தியா்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனா். மேற்கொண்டு தங்கள் செல்வத்தை முதலீடு செய்யவும் பல துறைகளில் தன்னிறைவு காணவும் கத்தாா் முயற்சி செய்கிறது. விளையாட்டு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஆா்வம் காட்டுகின்றனா்.
  • உலகக் கால்பந்துப் போட்டியான ஃபிபா போட்டிகளில், கப்பல் கட்டுதல், குறிப்பாக நீா்முழ்கிக்கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்துகிறது. இதனால் தொழில்நுட்ப நிபுணா்களை வரவேற்கிறது.
  • ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவது, மேலாண்மை செய்வது போன்ற நிலைகளில் அனுபவம் உள்ள வெளிநாட்டினரை இவா்கள் பணியில் அமா்த்திக் கொள்கின்றனா். சில நிறுவனங்களில் முழுவதுமாக இந்தியா்களே பணியாற்றும் நிலையும் இருக்கிறது. அப்படியான ஒரு நிறுவனத்தில்தான் எட்டு பேரும் ஆலோசகா்களாகப் பணியாற்றி வந்துள்ளனா்.
  • கத்தாரைப் பொறுத்தவரை அது ஹமாஸுக்கு மட்டுமல்ல, பல தீவிரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு தரும் நாடு. தலிபான்களுக்கு பலம் அளித்த நாடு. அல்-காய்தா போன்ற தீவிரவாத இயக்கத் தலைவா்கள் சொகுசாக வாழ இடம் அளித்த நாடு. இதனால் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பே கத்தாரை தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடு என விலக்கி வைத்திருந்தது. தலிபான்களையும் வளா்க்கும், அமெரிக்காவுடனும் நட்பு பாராட்டும் இரட்டை முகம் காட்டும் தேசம் அது.
  • மருந்துப் பொருள், உணவு உட்பட பலதுறைகளில் இந்தியாவை நம்பி இருக்கிறது கத்தாா். அதோடு நம்முடைய மனிதவளம் அவா்களுக்கு மிகமிக அவசியம். அங்கிருக்கும் இந்தியா்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டால், கத்தாரில் பல துறைகள் முடங்கிவிடும்.
  • எனவே கத்தாா் முழுமையாக இந்தியாவை எதிா்க்காது என நம்பலாம். என்றாலும், கத்தாரின் இயல்பு, சா்வதேச அரசியல் சூழல் என இந்த பிரச்னை சிக்கிக்கொண்டிருப்பதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நன்றி: தினமணி (11 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories