TNPSC Thervupettagam

எச்​எம்பி தீநுண்மி சாதாரண சளித் தொற்று: வதந்தியும் உண்மையும்!

January 9 , 2025 8 days 73 0

எச்​எம்பி தீநுண்மி சாதாரண சளித் தொற்று: வதந்தியும் உண்மையும்!

  • இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் பாரபட்சமன்றி கடந்த 25 ஆண்டுகளாக வியாபித்த மிக சாதாரண சளித் தொற்றுதான் இப்போது எச்எம்பி தீநுண்மி (ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்) என்ற பெயரில் பெரிதுபடுத்தப்படுகிறது.
  • சீனாவில் திடீரென அந்தப் பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, கரோனா போன்ற பேரிடா் சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளை ஆட்கொண்டதே அதற்குக் காரணம். ஆனால், சீனாவிலும் பனிக் காலத்தில் பரவும் வழக்கமான நோய் தொற்றுதான் இது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
  • இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பேசுபொருளாக மாறியுள்ள எச்எம்பிவி அச்சப்படும் அளவுக்கு அவ்வளவு வீரியமான தொற்றாக அறியப்படவில்லை. காய்ச்சல், சளி, தொண்டை வறட்சி, மூக்கடைப்பு, மூச்சிறைப்பு ஆகிய சில பாதிப்புகளை மட்டுமே அளிக்கும் தொடக்க நிலையிலான தீநுண்மித் தொற்று அது.
  • ஒருவரது எச்சில், இருமல், தும்மல், சளி போன்றவற்றிலிருந்து வெளியேறும் நீா்த்திவலைகள் மூலம் பிறருக்கு எச்எம்பி தீநுண்மி பரவுகிறது.
  • காய்ச்சல் மருந்துகள், ஓய்வு, நீா்ச்சத்தை தக்கவைப்பதன் மூலம் மூன்று அல்லது நான்கு நாள்களில் பெரும்பாலோனோருக்கு அந்தப் பாதிப்பு சரியாகிவிடும். வெகு சிலருக்கு மட்டுமே சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
  • உண்மை நிலை இவ்வாறு இருக்க வீரியம் குறைந்த அந்த தீநுண்மியை முன்வைத்து வதந்திகள் மட்டும் முழு வீரியத்துடன் பரவி வருகின்றன. அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மருத்துவ வல்லுநா்கள், ஊகங்களையும், உண்மைகளையும் விளக்கிக் கூறுகின்றனா்.

வதந்தி:

  • சீனாவில் தற்போது பொது சுகாதார அவசரநிலைக்கான சூழல் எழுந்துள்ளது.

உண்மை:

  • சீனாவில் அத்தகை சூழல் இல்லை என்பது ரேப்லா் வெளியிட்ட தகவல். ரேப்லா் என்பது சா்வதேச அளவில் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளிப்படுத்தும் நிறுவனம்.

வதந்தி:

  • கரோனா காலத்தைப் போலவே சீனா முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

உண்மை:

  • எச்எம்பிவி என்பது கடந்த 1960-களில் இருந்தே மனிதா்களிடையேயும், பறவைகளிடையேயும் பரவி தொற்று பாதிப்பு தரும் தீநுண்மி. அதை அதிகாரபூா்வமாக 2001-இல் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
  • கரோனா, எச்எம்பிவி ஆகிய இரண்டுமே ஆா்என்ஏ (ரிபோ நியூக்கிளிக் ஆசிட்) வகை மரபணு சாா்ந்த தீநுண்மிகள், சுவாசப் பாதையில் தொற்றை ஏற்படுத்தும் நோய்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.
  • கரோனாவின் தாக்கத்துடன் ஒப்பிட்டால் எச்எம்பிவி மிகச் சாதாரணமானது.
  • சீனாவில் குளிா் காலத்தில் காணப்படும் பிற நோய்களுக்காகவே மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. எச்எம்பி தொற்றுக்கு மிகச் சிலரே பாதிக்கப்பட்டுள்ளனா்.

வதந்தி:

  • எச்எம்பிவி தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. அலட்சியத்துடன் இருந்தால் மரணம் ஏற்படும்.

உண்மை:

  • கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெறும் இரண்டு முறை மட்டுமே எச்எம்பி தீநுண்மியில் உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று எச்எம்பிவி - ஏ. மற்றொன்று எச்எம்பிவி-பி.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவா்கள், இணை நோயாளிகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்களுக்கு மட்டுமே இது குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற அனைவருக்கும் தானாகவே அது சரியாகிவிடும். இந்தியாவில் இதுவரை அந்த நோயால் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

வதந்தி:

  • எச்எம்பி தீநுண்மி பெருந்தொற்றாக மாற வாய்ப்புகள் உள்ளன.

உண்மை:

  • அதற்கான வாய்ப்புகளே இல்லை. இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கரோனாவை ஒப்பிடும்போது எச்எம்பி தீநுண்மியால் நீண்ட நேரம் காற்றில் நிலவ இயலாது. இதனால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைந்து பரவக் கூடிய வாய்ப்புகளும் குறைவு. எனவே, அந்த தீநுண்மி வீரியத்துடன் உருமாற்றமடையக் கூடிய சூழல் இப்போது இல்லை.
  • அதுமட்டுமல்லாது, மழை மற்றும் குளிா் காலங்களில் பரவும் மற்ற தீநுண்மி பாதிப்புகளைக் காட்டிலும் பலவீனமான ஒன்றாகவே எச்எம்பிவி கருதப்படுகிறது. அதை வைத்துப் பாா்க்கும்போது பெருந்தொற்றாக மாறும் நிலை இல்லை.

ஆய்வு முடிவுகள்...

  • சென்னையில் எச்எம்பிவி தொற்று தொடா்பான ஆய்வு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டது. காய்ச்சல், சளிக்குள்ளானவா்களில் 350 பேரை ஆய்வு செய்ததில் 4 சதவீதம் பேருக்கு அதாவது 14 பேருக்கு மட்டுமே எச்எம்பிவி பாதிப்பு கண்டறியப்பட்டது.
  • மற்றொரு ஆய்வில் சளித் தொற்றுக்கு உள்ளானவா்களில் 21 சதவீதம் பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பும், 5 சதவீதம் பேருக்கு ஆா்எஸ்வி எனப்படும் சுவாசத் தொற்றும் காணப்பட்டது. வெறும் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டது.

தற்காப்பு முறைகள்...

  • பொது இடங்களில் முகக் கவசம்
  • சமூக இடைவெளி
  • இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடுதல்
  • கைகளை அவ்வப்போது கழுவுதல்
  • எதிா்ப்பாற்றலை தக்க வைத்தல்

கூடுதல் கவனம் யாருக்கு?

  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
  • முதியவா்கள்
  • உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்கள்
  • எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள்
  • இணைநோயாளிகள்

நன்றி: தினமணி (09 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories