TNPSC Thervupettagam

எடை மட்டுமல்ல இடை சுற்றளவும் முக்கியம்

February 15 , 2025 7 days 25 0

எடை மட்டுமல்ல இடை சுற்றளவும் முக்கியம்

  • உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் பாதிப்பு எந்த நாட்டிலும் குறையவில்லை எனக் கடந்த 33 ஆண்டு காலத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், டைப்-2 நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு உடல் எடை அதிகரிப்பே முக்கியக் காரணம் என மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.
  • நீரிழிவு, உடல் பருமன் போன்ற பாதிப்புகள் உலக அளவில் தொற்றுநோய் பாதிப்புகளின் பரவல் விகிதத்தை எட்டியுள்ளன. இருப்பினும், சில வெப்பமண்டல நாடுகளில், குறிப்பாகத் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தப் பிரச்சினை சற்று வித்தியாசமாக உள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகம். ஆனால், இங்கே உடல் நிறை குறியீட்டெண் (BMI) மூலம் வரையறுக்கப்பட்ட உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
  • இந்த முரண்பாட்டுக்கு இப்பகுதியில் நிலவும் தனித்துவமான உடல் தோற்றம் ஒரு காரணம். இவர்கள் ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டிருந்தாலும், இவர்களின் இடைச் சுற்றளவு (waist circumfe rence - மேல் வயிற்றுக்கும் இடுப்புக்கும் நடுவிலான பகுதி) மிக அதிகமாக உள்ளது.

கொழுப்பின் அடிப்படையில் பி.எம்.ஐ:

  • உலக மக்களின் ‘பிஎம்ஐ’ வரம்பு களைக் கொழுப்புத்தன்மையின் அடிப்படையில் விளக்கும் விதமாக, 2004இல் ‘தி லான்செட்’ மருத்துவ ஆராய்ச்சி இதழில் ஒரு மருத்துவப் படம் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் ஓர் அயல்நாட்டு மருத்துவர், ஓர் இந்திய மருத்துவர் ஆகியோரின் உடல் நிறை குறியீட்டெண், அவர்களின் உடல் அமைப் புடன் ஒப்பிடப்பட்டு விளக்கப்பட்டு இருந்தது. அதில், அந்த இரண்டு மருத்து வர்களின் பி.எம்.ஐ அளவும் 22.3 என ஆரோக்கியமான வரம்புக்குள் இருந்தன.
  • இருப்பினும், இந்திய மருத்துவரிடம் உடல் கொழுப்பின் அளவு 21.2% எனவும், அயல்நாட்டு மருத்துவரிடம் அது 9.1% எனவும் இருக்கிறது. இந்திய மருத்துவர், அயல்நாட்டு மருத்துவரைவிட அதிக வயிற்றுக்கொழுப்பைக் கொண்டு இருந்ததே அதற்கு முக்கியக் காரணம். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, அயல் நாட்டு மருத்துவர் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார், அவ்வப்போது மாரத்தானும் ஓடுகிறார்; இந்திய மருத்துவரோ மருத்துவமனையின் லிஃப்டில் நுழைவதற்கு மட்டுமே ஓடுகிறார்.
  • பி.எம்.ஐ, - உடல் கொழுப்பு அளவு ஆகியவற்றுக்கு இடையிலான இந்த முரணுக்கு மரபணுக்களின் பங்களிப்பு, கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் (நீரிழிவு நோய், உடல்பருமன், ரத்தக்கொதிப்பு), கருப்பையில் இருக்கும்போது ஏற்படும் ஊட்டச்சத்துக் குறை பாடு, அதன் காரணமாகக் குறைந்த எடையுடன் பிறப்பது உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.

வயிற்றுப் பருமன்:

  • 1990 முதல் உலக அளவில் வயிற்றுப் பருமன் (வயிற்றில் கொழுப்பு படிதல்) அதிகரித்து வருகிறது. வயிற்றுப் பருமன் இதயநோய், டைப்-2 நீரிழிவு நோய்க் கான முக்கியக் காரணிகள் என்று கூறுவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நடுத்தர வயதுப் பெண்களிடையே, இதய நோய் ஏற்படும் ஆபத்தை இடுப்புச் சுற்றளவுடன் ஒப்பிடும்போது, வயிற்றுச் சுற்றளவின் (இடைச் சுற்றளவு) அதிகரிப்பு முன்னரே உணர்த்தும் அறிகுறியாக இருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக் கின்றன. அதிக அளவு வயிற்றுக் கொழுப்பைக் கொண்ட ஆண் களுக்கு நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிஎம்ஐ மட்டும் போதுமா?

  • உலக அளவில் ‘பிஎம்ஐ’ அளவை வரம்புக்குள் வைப்பதே ஆரோக்கியத்தைப் பேணும் வழி எனக் கருதும் போக்கு பரவலாக உள்ளது. மருத்துவ உலகும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘பிஎம்ஐ’ என்பது மருத்துவம், ஆராய்ச்சி, காப்பீட்டுத் திட்டங்கள் ஆகிய வற்றில் உடல் பருமனைத் தீர்மானிக்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் அளவீடு மட்டுமே.
  • ‘பிஎம்ஐ’ ஒரு நபரை அவரின் எடை, உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான எடை, அதிக எடை, குறைவான எடை கொண்டவர் என வகைப்படுத்துகிறது. இருப்பினும், அதன் கண்டறிதல் துல்லியம் விவாதத்திற்குரி யது. ஏனெனில், இது பெரும்பாலும் மனித உடலில் படிந்துள்ள கொழுப்புத்தன்மை யின் தவறான மதிப்பீட்டிற்கு வழிவகுக்கிறது.

இடைச் சுற்றளவு ஏன் முக்கியம்?

  • முகம், கழுத்து, தோள்பட்டை, கைகள், மார்பு, வயிற்றுப்பகுதி, பின்புறம் (பிட்டம்), கால்கள் உள்ளிட்ட உடலின் வெளிப்பகுதி களில் படியும் கொழுப்பு, ஈரல், இதயம் உள்ளிட்ட பல உடல் உள்ளுறுப்புகளில் படியும் கொழுப்பு, உடல் எடை ஆகியவற்றில் வெவ் வேறு நாட்டு மக்களிடையே பெரும் வேறுபாடுகள் நிலவுகின்றன. அயல் நாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது இந்தியர்களுக்கு உடலின் மற்ற பகுதிகளைவிட, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு ‘பிஎம்ஐ’ ஆரோக்கியமான வரம்புக்குள் இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு; இவர்கள் வெளித்தோற்றத்தில் ஒல்லியாக இருப்பதாகவும் தெரிய லாம். ஆனால், இவர்களுக்கே பிற் காலத்தில் நீரிழிவு, இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்.
  • காலப்போக்கில், மனித உடலின் வெளித்தோற்றமானது வயிற்றுக் கொழுப்பு அதிகரிப்பதைப் பிரதி பலிக்கும் ஒன்றாக மாறக்கூடும். இந்நிலையில், உடல் பருமன் தொடர்பான நோய்களின் அபாயத்தைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு ‘பிஎம்ஐ’ உடன் இடுப்புச் சுற்றளவு போன்ற கூடுதல் அளவீடுகளையும் இணைப்பது அவசியம்.

இடுப்பு-உயர விகிதம்:

  • இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றின் அபாயத்துக்கும், இடை - உயரம் விகிதம் (WHR - Waist Hip Ratio) அல்லது ‘பிஎம்ஐ’ உடன் இணைந்த இடை - உயரம் விகிதம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை வளர்ந்த நாடுகளில் உள்ள தொற்றுநோயியல் நிபுணர்கள் தெளிவாகக் கண்டறிந்து தெரிவித் தனர். இதன் பிறகே, இடை - உயரம் விகிதம் பிரபலமடைந்தது. பின்னர் அது பல மருத்துவ ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டது.
  • இருப்பினும், இடை - உயரம் விகிதத்துடன் ஒப்பிடும்போது, இடைச் சுற்றளவு (waist circumference) மட்டுமே, வயிற்றுக்கொழுப்பு அல்லது உடல் கொழுப்பின் அளவுடன் மிகவும் வலுவாகத் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பிற்காலச் சான்றுகள் சுட்டிக்காட்டின. இந்தியர்களை எடுத்துக்கொண்டால், இடையின் சுற்றளவு ஆண்களுக்கு 35 அங்குலம் எனவும் பெண்களுக்கு 31 அங்குலம் எனவும் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு, இதய நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும் ஆபத்து உண்டு.

எச்சரிக்கை முக்கியம்:

  • ‘பிஎம்ஐ’ மூலம் அளவிடப்படும் உடல் பருமனின் பரவல், சில நாடுகளில் அதிகரிக்காமல் இருக்கலாம். ஆனால், இடைச் சுற்றளவு மூலம் அளவிடப்படும் வயிற்றுப் பருமனின் பாதிப்பு உலக அளவில் அதிகரித்துவருகிறது. உலகளாவிய உடல் பருமன் கண்காணிப்பில் இடைச் சுற்றளவு (waist circumference) இன்னும் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக, உலக அளவில் உடல் பருமன் பரவலுடன் தொடர்புடைய உடல்நல ஆபத்து முழுமையாக வகைப்படுத்தப்படாமல் உள்ளது.
  • ‘பிஎம்ஐ’ அடிப்படையிலான தற்போதைய உடல் பருமன் பரவல் போக்குகள் மிகுந்த எச்சரிக்கை யுடன் கையாளப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். ஏனெனில், ‘பிஎம்ஐ’ வரம்புக்குள் இருந்தாலும், இடைச் சுற்றளவின் அதிகரிப்பு பெரியவர்களின் ஆரோக்கியத்தை மிகுந்த ஆபத்தில்தள்ளுகிறது; இந்த எச்சரிக்கை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories