TNPSC Thervupettagam

எட்கர் தர்ஸ்டனும் மஞ்சள்முகப் பாறுக்கழுகும்

January 20 , 2024 220 days 191 0
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்கலைக்கழகங்களைவிடவும், அருங்காட்சியகங்களே அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பங்களிக்கும் வகையிலும், மக்களிடையே அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடமாகவும் திகழ்ந்தன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எட்கர் தர்ஸ்டன் காலத்தில் இருந்த மதராஸ் அரசு அருங்காட்சியகத்தைச் (தற்போதைய சென்னை அருங்காட்சியகம்) சொல்லலாம். அவர் கண்காணிப்பாளராக இருந்த 24 ஆண்டுகளில் (1885-1908) தென்னிந்தியாவின் மானுடவியல், இனவரைவியல், கடல் சார் உயிரினங்கள், பவளத்திட்டுகள் குறித்த ஆராய்ச்சி ஆகிய துறைகளில் பெரும்பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார்.

கள ஆராய்ச்சி

  • எட்கர் தர்ஸ்டன் அடிப்படையில் மருத்துவர். மதராஸ் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பாடங்களைக் கற்பித்துவந்தார். அதேவேளையில் அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்தார். அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்த தவளைகளைப் பற்றிய விவரங்களைத் திரட்டி, ஒரு நூலாக எழுதினார். பின்னர் அங்கு அவர் பணிபுரிந்த முதல் ஐந்து ஆண்டுகளில் கடல்சார் உயிரினங்கள், பவளத்திட்டுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதற்காகக் களப்பணிக்காக ராமேஸ்வரம் தீவுகளுக்குப் பல முறை அவர் சென்று திரும்பியுள்ளார். பாம்பன் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் உள்ள ராமநாதபுரம் ராஜாவின் பங்களாவில் தங்கி, அந்த இடத்தை ஒரு சோதனைச்சாலையாகவே மாற்றியிருந்தார். முத்துக்குளித்தல் வரலாறு குறித்து தகவல்களைச் சேகரித்து நூலாக எழுதினார். சிப்பிகளில் முத்து உருவாகத் தட்டைப்புழுக்கள் எப்படிப் பங்கு வகிக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அது குறித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதினார்.
  • மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் பிடித்துவரும் மீன்களையும், பவளத்திட்டு உயிரினங்கள், மேலும் பல கடல் உயிரினங்களைச் சேகரித்துப் பாடம்செய்து அருங்காட்சியகத்தில் அவற்றின் பெயர்கள் குறிக்கப்பட்ட பலகைகளை வைத்து முறையாகக் காட்சிப்படுத்தினார். அவர் நடத்திய ஆராய்ச்சிகளைப் பற்றிய அறிக்கைகளை 1894 முதல் அருங்காட்சியகத்தின் வழியாகத் தொடர்ச்சியாக பதிப்பித்தார். மதராஸ் கடல்வாழ் உயிரின காட்சியகத்தை (Madras Marine Aquarium) 1906இல் நிறுவினார். இங்கே கடல் உயிரினங்களைக் கண்ணாடித் தொட்டிகளில் காட்சிப்படுத்தினார். கடலாமை, கடல் பாம்பு, பல நிறங்கள் கொண்ட கடல் மீன்கள், கணவாய், துறவி நண்டு, சிங்கி இறால் போன்ற மதராஸ் கடல் பகுதிகளில் உயிருடன் பிடிக்கப்பட்ட உயிரினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒரே நாளில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இவற்றைப் பார்க்க வந்ததாகக் குறிப்புகள் உள்ளன. எட்கர் தர்ஸ்டனின் இந்த முன்னெடுப்புகள் யாவும் மக்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கடல்சார் உயிரினங்களைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தின.

குலங்களும் குடிகளும்

  • ஐரோப்பிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மானுடவியல் (Anthropology), இனவரைவியல் (Ethnology) குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் எட்கர் தர்ஸ்டனிடம் இந்தியாவில் இத்துறை எந்த நிலையில் உள்ளது எனும் கேள்வியை எழுப்பினர். இதுவே இத்துறையில் அவர் கவனம் செலுத்தக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் 1891இல் வெளியான மதராஸ் மக்கள்தொகை அறிக்கையும் தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சாதி, இன, பூர்வகுடி மக்களின் விவரங்களைத் தொகுக்கும் அவரது ஆராய்ச்சிக்கு உதவியது. இதன் முதல் கட்டமாக 1894இல் நீலகிரி, ஆனைமலை மலைப்பகுதிகளில் களப்பணி மேற்கொண்டு அங்குள்ள பூர்வகுடி மக்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து அருங்காட்சியக இதழ்களில் எழுதினார். இதன் பின்னர் 1901இல் பிரிட்டிஷ் அரசு இந்திய அளவில் இனவரைவியல் கணக்கெடுப்பை (Ethnographic Survey of India) நடத்த முடிவெடுத்தது. இதற்கான பணியைத்தென்னிந்தியாவில் நடத்த எட்கர் தர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.
  • இதற்காக மதராஸ் மாகாணம், திருவிதாங்கூர், மைசூர், குடகு, புதுக்கோட்டை ஆகிய சமஸ்தானங்களில் சுமார் ஏழு ஆண்டுகள் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. அருங்காட்சியகத்தில் உலர்தாவரத் தொகுப்பை பராமரிக்கும் பொறுப்பில் இருந்த கடம்பி ரங்காச்சாரி என்பவரும் தர்ஸ்டனுடன் இப்பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று தகவல்களைத் திரட்டியும், பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், மாவட்ட அரசு ஆவணங்கள், விவரக் குறிப்புகள், அறிக்கைகள் ஆகியவற்றில் இருந்து ஆதாரங்களையும் திரட்டினர். ஒவ்வோர் இனம், சாதியைச் சேர்ந்தவர்களின் உடல் பாகங்களின் அளவுகளையும், அவர்களது ஒளிப் படங்களையும் எடுத்தனர். அவர்களின் ஆராய்ச்சியின் விளைவாக எழுதப்பட்டதே 1909இல் வெளியான ஏழு தொகுதிகளைக் கொண்ட Castes and Tribes of Southern India எனும் படைப்பு. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பூர்வகுடியினரையும் சாதியினரையும் பற்றிய விவரங்கள் இந்நூலில் உள்ளன.

இனவரைவியல் ஆய்வு

  • ஈழத்து தமிழறிஞரான .சி. கந்தையா1938இல் ஆங்கிலத்தில் உள்ள ஏழு தொகுதிகளையும் சுருக்கிதென்னிந்தியக் குலங்களும் குடிகளும்எனும் நூலாக எழுதினார். இந்த நூல் https://www.noolaham.org/இல் பெறலாம். பின்னர் 1986இல் இந்த ஏழு தொகுதிகளையும், தமிழ்நாட்டின் முன்னோடிப் பறவை ஆர்வலர்களில் ஒருவரும் தமிழறிஞருமான முனைவர் . ரத்னம் தமிழில்தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்எனும் பெயரில் மொழிபெயர்த்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் ஓரிரு தொகுதிகளைத் தமிழிணையம்-மின்னூலக இணைய தளத்தில் (https://www.tamildigitallibrary.in/) காணலாம்.
  • எட்கர் தர்ஸ்டன் எழுதிய 1906இல் Ethnographic notes in southern India (தென்னிந்தியாவின் இனவரைவியல் குறிப்புகள்) எனும் ஆங்கில நூலில் அக்காலகட்டத்தில் நிலவிய சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்த நூலின் பறவைகள் பகுதியில் திருக்கழுக்குன்றத்திற்கு வந்து செல்லும் இரண்டு மஞ்சள்முகப் பாறுக்கழுகுகளின் (Egyptial Vulture) ஒளிப்படம் தரப்பட்டுள்ளது.

திருக்கழுக்குன்றக் கழுகுகள்

  • திருக்கழுக்குன்றத்தைப் பற்றிய பதிவு பொ.. (கி.பி.) 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் உள்ளது. எனினும் அதில் குறிப்பிட்டுள்ள கழுகு, பாறுக்கழுகுதானா என்பதை அறிவது கடினம். செவிவழிச் செய்தியாக இந்த திருக்கழுக்குன்றக் கழுகுகள் குறித்த விவரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். எனினும் அவற்றை முறையாக முதன்முதலில் ஒளிப்படத்துடன் ஆவணப்படுத்தியது இந்த நூலாகத்தான் இருக்கும். இது குறித்து இணையத்தில் ஆராய்ந்தபோது 1923இல் வெளியான Tirukalukunram (Pakshi-Tirtham) - திருக்கழுக்குன்றம் (பக்க்ஷி-தீர்த்தம்) - எனும் ஆங்கில நூலையும் காண நேர்ந்தது. அக்கோயிலின் சிறப்பையும் வரலாற்றையும் பற்றி அப்போதைய தர்மகர்த்தாவான எம்.எம்.குமாரசாமி முதலியார் என்பவர் எழுதியது. இந்நூலில் (பக்கம் 13-15) ஒரு சுவையான தகவலைக் காண முடிந்தது. அந்தத் தகவலின் தமிழ் வடிவம்:
  • மதராஸ் செய்தித்தாள் ஒன்றில்17 ஜூன் 1921இல் அன்று வெளியான செய்தியில் இரண்டு வெள்ளை நிறக் கழுகுகள் மதுரை கோயிலில் பார்க்கப்பட்டன. அவற்றின் நிழற் படங்கள் எடுக்கப்பட்டு, ‘திருக்கழுக் குன்றம் தர்மகர்த்தாவிற்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. அக்கடிதத்தில்’....இரண்டு கழுகுகள் காலை 9 மணியளவில் ஸ்ரீ மீனாட்சி கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்து, அங்கே குளித்துவிட்டுப் படிகளில் சுமார் இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. இவற்றின் படம் சுமார் 10:30 மணியளவில் எடுக்கப்பட்டது....அவை பொற்றாமரைக் குளத்தின் மேல் பறந்து விபூதி பிள்ளையார் மண்டபத்திற்கு அருகில் நின்றன. அவை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன. இவைதான் திருக்கழுக்குன்றம் செல்லும் கழுகுகள் என்றனர் மக்கள். அனுப்பியுள்ள படத்தில் உள்ள பறவைகள் உங்கள் கோயிலுக்கு வருபவைபோல உள்ளனவா என்பதைத் தெரிவிக்கவும். திருக்கழுக்குன்றம் கோயிலின் தர்மகர்த்தாவும், உடனிருந்த சிலரும், மதுரையில் இருந்து வந்த நிழற்படத்திலுள்ள பறவைகளைப் பார்த்த உடனேயே இந்தப் பறவைகள்தாம் இங்கும் வருகின்றன என்றனர். இதையே பதிலாகவும் அனுப்பினார்கள்.
  • மதுரையில் எடுக்கப்பட்ட நிழற்படம் அந்த நூலில் தரப்படவில்லை. எனினும், இந்தப் பதிவிலிருந்து மஞ்சள்முகப் பாறுக்கழுகுகள் மதுரைப் பகுதியிலும் இருந்திருக்கிறன என்பதை அறிய முடிகிறது.

இன்றைய நிலை

  • பாறுக்கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அருளகம் அமைப்பைச் சேர்ந்த பாரதிதாசனிடம் திருக்கழுக்குன்றத்திற்கு வரும் மஞ்சள்முகப் பாறுக்கழுகு குறித்து கேட்டேன். அவை கடைசியாக 1996இல் அங்கு பார்க்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள் என்றார். பாறுக்கழுகுகள் ஒரு காலத்தில் இந்தியாவின் பல இடங்களில் பரவி இருந்தன. கால்நடைகளுக்கு நாம் போடும் டைக்ளோபீனாக் எனும் வலி நிவாரணி ஊசி, கால்நடைகள் இறந்த பின்னும் அவற்றின் சடலத்தில் எச்சமாகத் தங்கிவிடுகிறது. இவற்றை உண்ணும் பாறுக்கழுகுகளுக்கு இந்த மருந்து நஞ்சாகிறது. இதனாலேயே ஒரு காலத்தில் வானமெங்கும் வட்டமடித்துக் கொண்டிருந்த பாறுக்கழுகுகள் இப்போது அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. டைக்ளோபீனாக் அல்லாத மாற்று மருந்துகளைக் கால்நடைகளுக்குப் போடுவதன் மூலமே இவ்வகையான அரிய பறவைகளை அழிவிலிருந்து மீட்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories