- இந்தியாவின் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில்வதற்குரிய நுழைவுத் தேர்வுகளில், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் 247 பேர் இந்த ஆண்டு தகுதிபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ‘புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்’ என 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருந்தபடி, இந்த மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
- அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்வி, நுண்கலை, விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு ஏதுவாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய 40 மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தேர்வாகியுள்ள 247 மாணவ-மாணவிகளில் பெரும்பான்மையானோர், அரசின் ‘மாதிரிப் பள்ளி’களில் பயின்றவர்கள்தான்.
- இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த, ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இலக்கை எட்டியுள்ளனர்; இவர்களில் அநேகம் பேர் அவர்கள் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அந்த வகையில், சேலம் ‘மாதிரிப் பள்ளி’யில் பயின்றவரும் பின்னலாடைத் தொழிலாளியின் மகனுமான பி.வசந்தகுமார், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதன் மூலம், சென்னை ஐஐடி-யில் சேர்ந்திருக்கிறார்; கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான எஸ்.கதிரவன் என்கிற மாணவர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.
- ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தேர்வில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்திருக்கிறது. மொத்தமுள்ள 247 மாணவர்களில் ஐஐடி-யில் 6, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் 77 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
- இது தவிர, தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தில் 6, இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் 6, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 9, சட்டப் பள்ளியில் 7, என்ஐஎஃப்டி-யில் 27, மத்தியப் பல்கலைக்கழகங்களில் 20, கட்டிடக் கலைப் பள்ளியில் 69, இந்திய அறிவியல்-கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்தில் 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
- மேலும், தருமபுரி மாவட்டத்தின் ‘மாதிரிப் பள்ளி’யில் பயின்ற ஜெயா என்கிற மாணவி, தைவானின் குன் ஷான் பல்கலைக்கழகத்திலும், சிந்து என்கிற மாணவி மிங் சுவான் பல்கலைக் கழகத்திலும் படிக்கச் செல்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்வது இதுவே முதல் முறை.
- இத்தகைய இலக்குகளை அரசுப் பள்ளி மாணவர்கள் எட்டுவதற்கு அரசு மேற் கொண்டிருக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இது போன்ற மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதே வேளை, அரசுப் பள்ளிகளில் நிலவிவரும் தீவிரப் பிரச்சினைகளைச் சீர்செய்வதன் மூலம், சமத்துவக் கல்வி அனைவருக்கும் கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி : இந்து தமிழ் திசை (16– 08 – 2023)