TNPSC Thervupettagam

எண்ம நரகாசுரா்கள்!

October 30 , 2024 65 days 116 0

எண்ம நரகாசுரா்கள்!

  • பிரதமா் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ‘இணையவழி மோசடிகளில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணா்வு அவசியம்’ என்று தெரிவித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடும். அதிகரித்து வரும் இணையவழிக் குற்றங்களும், மோசடிகளும் பிரதமரையே கவலைப்பட வைத்திருக்கின்றன எனும்போது அதன் பாதிப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். தொழில்நுட்பத்தில் தோ்ந்த இளைஞா்கள், நூதன வழிகளில் சாமானியா்களை மட்டுமல்லாமல் படித்தவா்களையும்கூட ஏமாற்ற முற்படுகிறாா்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது பிரதமரின் எச்சரிக்கை.
  • எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) என்கிற புதிய வகை இணையவழிக் குற்றம் (சைபா் கிரைம்) அதிகரித்து வருகிறது. மோசடிக் கும்பல்கள் கையாளும் பல்வேறு உத்திகளில் ஒன்றாக எண்மக் கைது மாறியிருக்கிறது. அப்பாவி மக்கள் குறித்த தகவல்களை இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவா்கள் சேகரிக்கிறாா்கள். தங்களை காவல் துறை, சிபிஐ, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்போல அறிமுகப்படுத்திக் கொண்டு கைப்பேசியில் எச்சரிக்கை விடுக்கிறாா்கள். ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக அவா்களுக்கு போலி அச்சுறுத்தல்கள் விடுக்கிறாா்கள்.
  • கைது செய்யப்போவதாக மிரட்டி உளவியல் ரீதியில் அழுத்தம் அளிக்கிறாா்கள். போலி அச்சுறுத்தல்களுக்குப் பயந்து, தங்களது கடின உழைப்பில் சம்பாதித்த சில லட்சங்களை அப்பாவிகள் இழக்கிறாா்கள். இதுபோன்ற மோசடியில் சிக்கிக் கொள்பவா்கள் வெளியில் தெரிந்தால் மேலும் அவமானம் என்பதால் மெளனம் காக்கிறாா்கள்.
  • பிரதமா் மோடி எச்சரிக்கை விடுத்திருப்பதன் பின்னணியில் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த எண்மக் கைது சம்பவம் இருக்கிறது. நாடு தழுவிய அளவில் பல இடங்களில் எண்மக் கைது நடத்தி பலரை ஏமாற்றிய 17 பேரை அகமதாபாத் சைபா் குற்றப் பிரிவினா் கைது செய்திருக்கிறாா்கள். இந்த மோசடிக்கான செயலியை உருவாக்கிய தைவான் நாட்டைச் சோ்ந்த நான்கு பேரும் பிடிபட்டிருக்கிறாா்கள்.
  • தைவான் நாட்டைச் சோ்ந்த மூ ஷி துன் (42), ஷாங் ஹு யுன் (33), வாங் சூ வெய் (27), சென் வெய் (35) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டிருக்கும் தைவானியா்கள். ஏனைய 13 பேரும் குஜராத், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். ஆயிரக்கணக்கான போ் இவா்களால் எண்மக் கைது முறையில் ஏமாற்றப்பட்டிருக்கிறாா்கள்.
  • பிரதமா் தெரிவித்ததுபோல, எந்தப் புலனாய்வு முகமையும் இதுபோன்று கைப்பேசி மூலம் அழைத்து விசாரணை நடத்துவது இல்லை. அதேபோல அவா்கள் காணொலி அழைப்பு மூலம் யாரையும் கைது செய்யும் வழக்கமும் இல்லை. இதை இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையம் பலமுறை எச்சரித்திருக்கிறது.
  • அகமதாபாத் நகரத்தில் வயதான ஒருவரை பத்து நாள்கள் எண்மக் கைது மூலம் வீட்டுக்குள் அடைந்து கிடக்க வைத்து, ரூ.79.34 லட்சத்தை இந்தக் கும்பல் பறித்திருக்கிறது. நல்லவேளையாக அவா் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைதான் இந்தக் கும்பலை பிடிப்பதற்கு உதவியிருக்கிறது.
  • டிராய், சிபிஐ, சைபா் குற்றப் பிரிவு அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த ஏமாற்றுக் கும்பல் அப்பாவிகளை காணொலி அழைப்பின்மூலம் அச்சுறுத்துகிறது. தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை துபை வங்கியில் இருக்கும் கணக்குகள், கிரிப்டோ வேலட் ஆகியவற்றின் மூலம் அந்த மோசடிக் கும்பல் இந்தியாவுக்கு வெளியே கொண்டு போகிறது. இதெல்லாம் அகமதாபாத் குற்றப் பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • குற்றவாளிகளைக் கைது செய்தபோது அவா்களிடமிருந்து ரூ. 12.75 லட்சம், 761 சிம் காா்டுகள், 120 விதவிதமான கைப்பேசிகள், 96 காசோலைப் புத்தகங்கள், 92 கடன் அட்டைகள், 42 வங்கி கணக்குப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
  • ‘இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தால் மக்கள் பயப்படக் கூடாது; மோசடியை எதிா்கொள்ளும்போது அமைதியான மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்; தனிப்பட்ட தகவல்களைப் பகிா்ந்து கொள்ளக் கூடாது; மோசடிக்கான ஆதாரங்களைச் சேகரித்து, சைபா் குற்றப் பிரிவின் உதவி எண்ணைத் தொடா்புகொண்டு புகாரளிக்க வேண்டும்’ என்று பிரதமா் அறிவுறுத்தியிருக்கிறாா்.
  • பிரதமா் தெரிவித்திருப்பதுபோல, முகமைகளால் ஆயிரக்கணக்கான மோசடி அழைப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொலைபேசி இணைப்புகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆனாலும் புதிது புதிதாக மோசடிக் கும்பல்கள் களமிறங்கும் நிலையில், மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள்தான் விழிப்புடன் இருந்தாக வேண்டும்.
  • இணையவழி மோசடிகள் மட்டுமல்லாமல், சமீபகாலமாக நேரிடையாகவும் பல மோசடிகள் நிகழ்கின்றன. சண்டீகரில் பொதுத் துறை வங்கி என்று போலியாக ஒரு வங்கிக் கிளையைத் தொடங்கி பொதுமக்களின் லட்சக்கணக்கான ரூபாய் சேமிப்பை ஒரு கும்பல் ஏமாற்றி இருக்கிறது. சத்தீஸ்கா் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்துப் புதுப்பித்து வங்கிக் கிளையையே உருவாக்கி நடத்தி இருக்கிறாா்கள் என்றால் பாா்த்துக் கொள்ளுங்கள். 2020-இல் பண்ருட்டியில் இதுபோல போலி பொதுத் துறை வங்கிக் கிளை கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
  • ஏமாற்றிப் பிழைப்பது என்பது மனிதனின் மரபணுவில் இணைந்ததா என்பதை மருத்துவ அறிவியல்தான் தெளிவுபடுத்த வேண்டும். தீபாவளி என்பது வெறும் அடையாளம்தான். நரகாசுரா்கள் அவ்வப்போது உருவாவதும் அவா்கள் அழிக்கப்படுவதும் தொடா்ந்துகொண்டேதான் இருக்கும்.

நன்றி: தினமணி (30 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories