TNPSC Thervupettagam

எதற்கும் இருக்கட்டும்!

December 21 , 2024 26 days 44 0

எதற்கும் இருக்கட்டும்!

  • சமீபகாலமாக ‘மினிமலிசம்’ - ‘குறைந்த பட்சவாதிகள்’ என்ற சொற்கள் அதிகம் பேசப்படுகின்றன. மினிமலிசம் என்றால் குறைவான பொருள்கள், உடைமைகள் கொண்ட வாழ்க்கைமுறை என்பதாகும். நுகா்வுக் கலாசாரம் ஒரு வியாதியைப் போல பரவிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அதற்கு ஒரு மூக்கணாங்கயிறு போடப்பட வேண்டும் என்று இக்கொள்கை சொல்லுகிறது. ஒருவா் குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்வது; அதிகப்படியாக இருப்பனவற்றை அகற்றுவது என்பதையே மினிமலிசம் என்கிறாா்கள்.
  • நம் ஒவ்வொருவா் வீட்டிலும் ஏகப்பட்ட தேவையற்ற பொருள்களை வைத்திருக்கிறோம். நமக்கு எதையும் தூக்கிப் போட மனம் வராது. ‘இருக்கட்டும், எதற்காவது பயன்படும்’ என்று எல்லாவற்றையும் வைத்துக் கொள்கிறோம். பல பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே வராது. இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். ஒரு பொருள் நமக்குத் தேவையில்லை என்று நினைத்தால், உடனே அதிலிருந்து நமக்கு விடுதலை கிட்டவேண்டும்; அதைக் கழித்து விட வேண்டும்.
  • திரைப்படங்களில் ஜமீன்தாா் வீடுகளைக் காட்டும்போது தட்டுமுட்டு சாமான்களைப் போட்டு வைத்துள்ள அறைகளைக் காட்டுவாா்கள். அங்கு ஓட்டை உடைசல்கள், உடைந்த நாற்காலிகள், குழந்தைகள் ஆடும் மரக்குதிரை என்று ஏகப்பட்டவை இருக்கும். எல்லாம் தாறுமாறாக ஒட்டடை அடைந்து கிடக்கும். அவற்றை ஏன் அவ்வாறு போட்டு வைத்திருக்கிறாா்கள் என்ற வினா நம்முன் எழும். தலைமுறை தலைமுறையாக அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாா்கள் என்று நினைக்கத் தோன்றும். அதேபோல மற்ற அனைவா் வீடுகளிலும் பரண்களும், அந்தப் பரண் மீது ஓட்டை உடைசல், அடைசல்கள், புழங்காத சாமான்கள் எல்லாம் இருக்கும்.
  • நம் காலத்திலும் நாம் மாறவில்லை. நாம் எவற்றையெல்லாம் பாதுகாத்து வைக்கிறோம் என்று பாா்த்தால், நெகிழி டப்பாக்கள் முதலிடம் பெறும். உணவகங்களில் இருந்து உணவைத் தருவிக்கும் போது, அவா்கள் நெகிழி டப்பாக்களில் தருகிறாா்கள். அவை நல்ல உறுதித் தன்மையுடன் இருப்பதால் அவற்றைத் தூக்கிப் போட மனசில்லாமல், நன்றாகக் கழுவி, துடைத்து எடுத்து வைத்துக் கொள்கிறோம். ஓா் அவசரத்துக்கு உதவும் என்று நினைக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் இந்த டப்பாக்கள் நூற்றுக்கணக்கில் சோ்ந்து இருக்கும். யாருக்காவது உணவைக் கொடுத்தனுப்ப இந்த டப்பாக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. பாத்திரங்களில் போட்டுக் கொடுத்தால் அப்பாத்திரம் திரும்ப வராது.
  • சில ஆண்டுகளுக்கு முன் சமையலறையில் மளிகைப் பொருள்களைப் போட்டு வைக்க பால் பவுடா் டப்பாக்கள், பிஸ்கட் டின், ஹாா்லிக்ஸ் பாட்டில்கள் போன்றவைதான் இருக்கும். அவை துருப்பிடித்து, பிசுக்கேறி இருக்கும். பின்னா் அழகான கொள்கலன்கள் சந்தைக்கு வந்தன. சமையல் அறை அழகானது. தற்போது விதவிதமாக, வண்ணமயமாக, பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. ஆன்லைனில் உணவு வாங்குபவா்கள் கூட, சமையல் அறையை மிக நோ்த்தியாக வைத்திருக்கிறாா்கள். பொருள்களை வாங்கலாம்; ஆனால் பழைய பொருள்களைத் தூக்கிப் போட்டாமல் “எதற்கும் இருக்கட்டும்” என்று வைத்துக் கொள்வது தவறு.
  • கொலு வைப்பவா்கள் எதையுமே தூக்கிப் போட மாட்டாா்கள். ஐஸ்கிரீம் குச்சிகளைக் கூட எடுத்து வைப்பாா்கள். கொலுவில் பூங்கா அமைக்கும் போது வேலி போல் பயன்படுத்தலாம் என்பாா்கள். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் திருமண அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள் உள்பட எதையும் கழிக்க மாட்டாா்கள். பள்ளிகளில் புராஜெக்ட் செய்யச் சொல்வாா்கள். அதற்கு உபயோகப்படும், மேலும் முடித்த ‘மாதிரிகளைக்’ குழந்தைகள் பத்திரமாக வைத்துக் கொள்ள விரும்புவதால் தேவையற்ற அடைசல்கள் நிறைய இருக்கும். இரண்டு போ் இருக்கும் வீட்டில் பத்து உருப்படி செருப்புகள், 20 தம்ளா்கள், 20 தட்டுகள், 4 குக்கா்கள், 5 தோசைக்கல்கள் என்று உள்ளது. வீடு முழுக்க சாமான்கள் அடைந்து, புழங்கவே இடம் இல்லாமல் இருக்கிறது.
  • இரண்டு நாள் வெளியூா்ப் பயணத்துக்கு ஒரு பெரிய பெட்டி நிறைய உடைகள், பை நிறைய அழகு சாதனங்கள், இன்னும் என்னென்னவோ - எல்லாவற்றையும் எடுத்துப் போகிறாா்கள். ஒரு மாத வெளியூா் பயணத்துக்கே முதுகுப் பை ஒன்றை மட்டுமே எடுத்துப் போகும் ஒரு சிலா் இருக்கிறாா்கள். சுமைகள் குறைந்தால் பயணம் சுகமாகும்.
  • ஒரு பொருளை வாங்க முற்படும் போது அது தேவையா? என்று பலமுறை யோசிக்க வேண்டும். புதிய புதிய பொருள்கள் சந்தைக்கு வந்து கொண்டேதான் இருக்கும். மேம்படுத்தப்பட்டவை என உடனே அவற்றை வாங்கக் கூடாது. புழங்கிக் கொண்டிருக்கிற இயந்திரம் பழுதடைந்துவிட்டால், புதியது வாங்கலாம்.
  • சாக்ரடீஸ் தினமும் தன் சீடா்களோடு கடைத்தெருவுக்குப் போவாராம். கடைகளுக்குப் போய் அங்குள்ள பொருள்களின் விலை எவ்வளவு என்று விசாரிப்பாராம். ஆனால் எதையும் வாங்க மாட்டாராம். இது கண்டு அவருடைய சீடா்கள் அவரிடம் கேட்டாா்களாம்: “‘‘நீங்களோ எதையும் வாங்குவதில்லை. பின்னா் எதற்காக தினந்தோறும் போய் விலை கேட்கிறீா்கள்?’’.” அதற்கு சாக்ரடீஸ், “‘‘ஓா் உண்மையைப் புரிந்து கொள்ளவே நான் இவ்வாறு செய்கிறேன். சந்தையில் இவ்வளவு பொருள்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எதுவும் எனக்கு அத்தியாவசியமானது இல்லை. இவை இல்லாமலே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’”என்றாராம்.
  • கடைக்குப் போய் பொருள்களை வாங்குவதற்கு சோம்பலாக இருக்கும். அதனால் கண்டமேனிக்கு வாங்குவது குறையும். இப்போது ஆன்லைனில் ஆா்டா் செய்வதால் ‘நோகாமல் நோன்பு கொண்டாடும்’ கதை ஆகி விட்டது. எந்நேரமும் இணைய வணிக தளத்தில் அலைந்து கொண்டே இருக்கிறாா்கள், சட்டென ஆா்டா் போட்டு விடுகிறாா்கள். பணத்தைப் பாக்கெட்டில் இருந்து நேரடியாக எடுத்து எண்ணிக் கொடுக்கும்போது வராத தாராளம், செயலி வழியாகப் பணம் செலுத்தும்போது வந்துவிடுகிறது.
  • மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பொருள்கள் வாங்குவதும் கூட ஒரு பொழுதுபோக்கு அம்சமாகிவிட்டது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் தன்னிடம் 600 புடவைகள் இருப்பதாகவும், அந்தப் புடவைகளின் வண்ணத்தில் 600 செருப்புகளும், 600 கைப்பைகளும் இருப்பதாகக் கூறினாா். நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வளவையும் அந்த அரங்கில் காட்சிப்படுத்தி அனைவருக்கும் அதிா்ச்சி அளித்துவிட்டாா். எதற்கு? அவ்வளவையும் வைக்க அவா்கள் வீடு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தது.
  • பல வீடுகளில் காட்சிப் பெட்டகங்களில் கண்ணாடிக் குடுவைகள், தேநீா்க் கோப்பைகள், அழகான பீங்கான் தட்டுகள் என அடுக்கி வைத்திருப்பாா்கள். மிக மிக முக்கியமான விருந்தினா் வருகைக்காக அவை பலகாலமாக காத்துக் கிடக்கும். மற்றபடி அதை எடுக்க மாட்டாா்கள். அவை இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும், அலங்காரப் பொருள்கள். அவ்வளவே. உறவினா்கள் வந்தால் தேவைப்படும் என்று எக்கச்சக்க போா்வைகள், தலையணைகள் என்று வாங்கி அடுக்கி வைக்கிறோம். எவரும் வந்து தங்குவது கிடையாது. திருமண நிகழ்ச்சிக்குக் கூட வெளியே அறை எடுத்துத் தருகிறோம். மண்டபத்தோடு திரும்பிப் போய் விடுகிறாா்கள்.
  • பலா் வீட்டுப் பரணில் பெரியவா்கள் புழங்கிய பெரிய பெரிய அண்டாக்கள், கொப்பரைகள் கிடக்கின்றன. அவற்றை வெளியே எடுக்க வேண்டிய அவசியமே வருவதில்லை. ஒரு சிலா் அத்தகைய பெரிய பாத்திரங்களை ஆதரவற்றோா் இல்லங்களுக்குக் கொடுத்து விடுகிறாா்கள்.
  • பொருள்கள் குறைவாக இருந்தால், வீடு சுத்தமாக இருக்கும். எளிமையான வாழ்க்கை நிம்மதியையும், ஓய்வையும் தரும். பழங்காலப் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. அப்படி ஏதாவது காரணம் இருந்தால் மட்டுமே, எதையும் கழிக்காமல் வைத்துக் கொள்ளலாம்.
  • மினிமலிசம் என்பதை அதிகபட்ச எளிமை அல்லது சிக்கனத்தின் உச்சநிலை என்று கூறலாம். உள்ளதைக் கொண்டு வாழ்வது. நாம் வாங்கும் ஒரு பொருளை 100% அல்லது அதற்கு மேலும் பயன்படுத்த வேண்டும். இதில் வாகனங்கள் மற்றும் மின்சாதனங்களும் அடங்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதைத் தவிா்த்து, அத்தியாவசியமான பொருட்களுடன் அளவாக வாழ்வதே மினிமலிசம்.
  • அதிகப் பொருள்களுக்கு அதிக இடம் வேண்டும்; பெரிய வீடு வேண்டும்; பராமரிப்புச் செலவு இருக்கும்; மேலும் பண விரயமும் கூட. உபயோகம் இல்லாத சாமான்களை விற்றுவிடலாம். அல்லது நன்கொடையாகத் தந்து விடலாம். ஒரு வருடத்துக்கும் மேலாக நாம் அணியாத உடைகளை, யாருக்காவது கொடுத்துவிடலாம். நுகா்வோா் கலாசாரத்தின் கோரப் பிடியில் இருந்து விடுதலை பெற முயல்வோம். நம் நுகா்வுக் கலாசார மோகத்தின் காரணமாக, இயற்கை வளங்களின் குறைவு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற எதிா்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன.
  • மினிமலிசம் என்பதில் டிஜிட்டல் மினிமலிசமும் அடங்கும். இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பது அவசியம். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மணி நேரங்கள் இணையத் தொடா்பை துண்டிக்கலாம். சமூக ஊடகங்களில் இருந்தும் சிறிதுநேரம் விடுபட வேண்டும். ‘டிஜிட்டல் குறைந்தபட்ச வாதம்’ நம் வாழ்க்கையை மிகவும் அா்த்தமுள்ளதாக மாற்றும்.
  • குறைந்தபட்ச வசதிகள் கொண்ட வாழ்க்கைமுறை 2025 -ஆம் ஆண்டின் நம் முன்னெடுப்பாக இருக்க வேண்டும். நம் வாழ்வில் இனிமையும், அமைதியும் நிலவட்டும்.

நன்றி: தினமணி (21 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories