TNPSC Thervupettagam

எதிர்கொள்ளத் தயாராவோம்!

November 1 , 2021 1000 days 492 0
  • வட கிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவரும் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்த செய்திகள் கவலையளிக்கின்றன.
  • குறிப்பாக, இந்தியாவின் வடக்கிலிருக்கும் உத்தரகண்டிலும், தென்கோடியிலிருக்கும் கேரளத்திலும் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்கிடையே பெரிய வித்தியாசம் இல்லை.
  • இரண்டுமே தென்மேற்குப் பருவமழைக் காலம் முடிந்த பிறகு ஏற்பட்ட வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவால் ஏற்பட்டவை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பின் விளைவாகத்தான் அவற்றைக் கருத வேண்டும்.
  • இவ்விரு மாநிலங்களிலுமே இதற்கு முன்னால் ஏற்பட்ட மழை பாதிப்புகளைப் போலவே தான் இந்த ஆண்டும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நிகழ்வுகளிலும் மழையால் பேரழிவு ஏற்படக்கூடும் என்று வல்லுநர்களின் அறிக்கைகள் எச்சரித்தன.
  • பருவநிலை குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் விடுத்திருந்த முன்னெச்சரிக்கையைப் போலவேதான் மழைப்பொழிவுகளும் நிகழ்ந்தன. ஆனால் இரண்டு மாநிலங்களும் திடீர் அடைமழையால் ஏற்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கவில்லை.

வட கிழக்குப் பருவமழை

  • கேரளத்திலும் உத்தரகண்டிலும் ஏற்பட்டவெள்ளப் பெருக்கால் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உத்தர பிரதேசம், நேபாளம் ஆகிய இரு இடங்களிலும் சேர்த்து ரூ.10,000 கோடிக்கும் அதிகமான இழப்பு நேரிட்டிருக்கிறது.
  • வெள்ள பாதிப்பு சிக்கிமையும், இமயமலையையொட்டிய மேற்கு வங்கப் பகுதிகளையும் கூட பாதித்திருக்கிறது. பாதிப்பின் முழுமையான அளவு இன்னும்கூட தெரியவில்லை.
  • வெள்ளப் பெருக்கு என்பது எதிர்பாராமல் நிகழ்வது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எந்தவித முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளாமல், முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருப்பதை நியாயப்படுத்திவிட முடியாது.
  • இரண்டு மாநிலங்களிலுமே மழை வெள்ளத்தின் அளவு குறித்தும், அதிக அளவில் மழை பொழிய இருக்கும் இடங்கள் குறித்தும் வானிலை முன்னறிவிப்புகள் கிடைத்திருந்தால் இந்த அளவிலான பாதிப்பைத் தவிர்த்திருக்க முடியும்.
  • சொல்லப்போனால் நிர்வாக கவனக்குறைவால் பாதிப்புகள் அதிகரித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
  • உத்தரகண்டை எடுத்துக்கொண்டால் நைனிடால், முக்தேஷ்வர், பந்த் நகர், பித்தோராகர் உள்ளிட்ட பல இடங்களில் முந்தைய அளவைவிட அதிக மழைப்பொழிவு காணப் பட்டிருக்கிறது.
  • அதனால் சாரதா நதியில் பஞ்சேஷ்வர், பந்த்பஷா காட், பலியாகலன் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அளவு முந்தைய அளவுகளைக் கடந்திருக்கிறது.
  • அலகநந்தா நதியில் தேவபிரயாக், கர்ணபிரயாக் பகுதிகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைகடந்து பாய்ந்திருக்கிறது.
  • கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மணிமலை ஆற்றிலும், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடியாறு நதியிலும் வெள்ளம் முந்தைய அதிகபட்ச அளவுகளைக் கடந்துள்ளது.
  • உத்தரகண்டிலும் கேரளத்திலும் மிக அதிகமான மழைப்பொழிவு காணப்படும் என்று வானிலை முன்னறிவிப்புகள் தரப்பட்டிருந்தன. ஆனால், அங்கெல்லாம் அடிமட்ட அளவில் பேரழிவை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு எதுவுமே இருக்கவில்லை. நிலச்சரிவு குறித்து தெரிவிப்பதற்கான முன்னேற்பாடுகளோ வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களையும் உடைமைகளையும் வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான அடிப்படை முன்னேற்பாடுகளோ இருக்கவில்லை.
  • பேரிடர்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஒடிஸா மாநிலத்திடமிருந்து படிக்க வேண்டி பாடங்கள் நிறைய உண்டு. 1999-இல் புயல் தாக்கியபோது ஒடிஸா மாநில நிர்வாகம் திகைத்துப் போனது. மிகப்பெரிய பேரழிவை அந்தப் புயல் ஏற்படுத்தியது.
  • அதிலிருந்து மாநில நிர்வாகம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டது. 2019-இல் ஒடிஸாவை போனி புயல் தாக்கியபோது, புயல் தாக்கும் வரை நிர்வாகம் காத்திருக்கவில்லை.
  • 10,000-க்கும் அதிகமானோரை 20 ஆண்டுகளுக்கு முன் தாக்கிய புயலில் பலிகொடுத்த ஒடிஸா, போனி புயல் அடித்தபோது மொத்த உயிரிழப்பை 64 ஆக குறைக்க முடிந்தது.
  • அதற்கு காரணம், கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்படுத்தியிருந்த பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான்.
  • முன்கூட்டியே அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது, நிலச்சரிவு - மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை அகற்றுவது, அவர்களுக்கு வழங்குவதற்குப் போதுமான அளவு உணவுப் பொருள்களை தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஒன்றும் சிரமமானதல்ல.
  • அதற்கு தொலைநோக்குப் பார்வையும், திட்டமிடலும், செயல் திறமையும் வேண்டும், அவ்வளவே. 2018-19 ஆண்டுகளில் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, அணைகளைக் குறித்த நேரத்தில் திறக்காமல் இருந்ததுதான் மிகப்பெரிய பாதிப்புக்கு காரணம்.
  • உத்தரகண்டிலும் அதேநிலைமைதான். அந்தத் தவறுகளுக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து பொறுப்பேற்க வைப்பதற்கான ஏற்பாடுகளை இதுவரை இரண்டு அரசுகளும் செய்யவில்லை.
  • 2015 முதல் உத்தரகண்டில் 7,500-க்கும் அதிகமான கடுமையான மழைப் பொழிவுகள் பதிவாகியிருக்கின்றன. உலக அளவிலான சராசரியைவிட வேகமாக இமயமலை வெப்பமடைந்து வருகிறது. இமயமலையின் உயர் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது.
  • அதேபோல கேரளமும் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று வெள்ளப் பேரழிவை எதிர் கொண்டிருக்கிறது. அரபிக் கடல் வெப்பமடைவதால் புயல் மழைகள் 52% அதிகரித்திருக்கிறது.
  • கேரளமும் உத்தரகண்டும் போல தமிழகம் இருந்துவிடலாகாது!

நன்றி: தினமணி  (01 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories