TNPSC Thervupettagam

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா புதிய நிதி ஆணையம்?

April 16 , 2024 270 days 290 0
  • மத்திய அரசுக்கு தங்கள் மூலமாகவே அதிக அளவில் வரி கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசோ வரிப் பகிர்வில் தங்களுக்கு நியாயமான பங்கை வழங்குவதில்லை என்று தென் மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பு 30 சதவீதமாகும். ஆனால் அம்மாநிலங்களுக்கு கிடைக்கும் வரி பகிர்வோ மிகவும் குறைவாகவே உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில், வரிப் பகிர்வாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ரூ.2.18 லட்சம் கோடி அறிவித்துள்ளது.
  • ஆனால், தென்னகத்தின் ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1.92 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2000-05 முதல் 2021-26 காலகட்டத்துக்கு தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப் பகிர்வு 21.1 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாகசரிந்துள்ளது. ஆனால் பிஹார், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 51.5% என்பதிலிருந்து 53.2% ஆக அதிகரித்துள்ளது.
  • இதுவரை 15 நிதி ஆணையம் அமைக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் இடையே நிதிப்பகிர்வு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. தற்போது 16-வது நிதி ஆணையம் (2026-31) அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆணையமாவது, தற்போதைய சிக்கல்களை கணக்கில் கொண்டு முறையான நிதிப் பகிர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • தற்போதைய நிதிப் பகிர்வில் சிக்கல்: 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசின் தனது மொத்த வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால், 2023-24 நிதி ஆண்டில் 30 சதவீதம் மட்டுமே மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வசூல் விகிதம் அதிகரித்து வந்த போதிலும் மாநிலங்களுக்கிடையே இந்த வரி வருவாய் பகிர்ந்து அளிப்பதில் எவ்வித அதிகரிப்பும் இல்லை. நிதி பலத்துடன் உள்ள மத்திய அரசு வளர்ச்சி திட்ட உதவிகளை நியாயமான முறையில் மாநில அரசுகளுக்கு தருவதில்லை. மேலும் மாநிலங்கள் கடன் வாங்கி சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கூட மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
  • மக்கள் தொகை: மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் செயல்பாட்டில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி பங்கீடு வழங்கப்படும் என்று 15-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்தாலும் அதற்கான அடிப்படை ஆண்டாக 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்துக்கொள்ளாமல் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்த முடிவு செய்தது.
  • இந்தப் பரிந்துரையால் 1970-80-களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தென் மாநிலங்கள் நிதிப் பகிர்வில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களிடமிருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பி உள்ளன.
  • உதவி மானியங்கள்: 2015-16-ம் ஆண்டில் மாநிலங்களுக்கு உதவி மானியங்களாக வழங்கப்பட்ட தொகை ரூ.1.95 லட்சம் கோடி. ஆனால், 2023-24 ஆம் ஆண்டில் உதவி மானியங்கள் ரூ.1.65 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாநிலங்களுக்கு உதவும் வகையில் வழங்கப்படும் வருவாய் பற்றாக்குறை மானியங்கள் தேவையா என்ற கேள்வியையும் நிதி ஆணையங்கள் கேட்டு வருகின்றன.
  • மானியங்கள் நிறுத்தப்பட்டால் மாநிலங்களின் நிதி ஆதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும். மாநிலங்களுக்கு ஊக்கமளித்தல் என்ற பட்டியலில் சமூக நலன் சார்ந்த திட்டங்களை ஜனரஞ்சக அரசியல் திட்டங்கள் என்பதாக 15-வது நிதி ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே முதியோருக்கு உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் ஜனரஞ்சக அரசியல் திட்டங்கள் என்று நிதி ஆணையங்களால் நிராகரிக்கப்படலாம் என்கிற அச்சம் எழுகிறது.
  • தனிநபர் வருமானம்: தனிநபர் வருமானம் குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதிப் பகிர்வும் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு குறைவான நிதிப் பகிர்வும் செய்யப்படுகிறது. குறைந்த தனிநபர் வருமானம் உள்ள மாநிலங்களால் வருவாய் வழிகளை பெருக்கிக் கொள்ள முடியவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் அது அதிகரித்து தனிநபர் வருமானம் குறையத்தான் செய்யும்.
  • 16-வது நிதி ஆணையம் என்ன செய்ய வேண்டும்? - முந்தைய நிதி ஆணையங்கள் செய்த தவறுகளை சரி செய்யும் வகையில் வருவாய் பகிர்வில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய மானியங்கள் வழங்கப்பட வேண்டும். பட்ஜெட் அறிக்கையில் நிகர வரி வருவாய் பற்றிய துல்லியமான மதிப்பீடுகளை மத்திய அரசு வெளியிட வேண்டும். செஸ் மற்றும் சர்ச்சார்ஜுகள் வசூலிப்பதில் வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
  • மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே அவை விதிக்கப்பட வேண்டும். காலவரம்பு முடிந்த பின்பு அந்த வரி வசூலிப்பு நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய தொகுப்பில் ஐஜிஎஸ்டி கொண்டு வர வேண்டும்.
  • சிறப்பாக செயல்படுகிற மாநிலங்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நலிந்த மாநிலங்களுக்கு உதவிகளை அதிகரிப்பதற்கு வேறு வழிகளை ஆராய வேண்டும். இயற்கை சீற்றங்களாலும் பேரிடர்களாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது தேவையான நிதியை வழங்கிட நிதி ஆணையம் மத்திய அரசை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.
  • ஒரே வரிகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் வசூலித்தாலும் வரி வசூலிக்க ஆகும் செலவுகளில் 10% வரை இரண்டு அரசுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. ஆகவே நிதி ஆணையம் மறைமுக வரியை வசூலிப்பதற்கு சரியான வழிகாட்டுதலை பரிந்துரைத்து செலவுகளை குறைப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் நிதி ஆணையமும் ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய வரித் தொகுப்புகளை சரியான முறையில் தீர்மானிக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலானது நிதி கவுன்சிலாக செயல்பட்டு நிதி ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்துவது அவசியமாகும்.
  • வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் வளர்ச்சி குறைந்த பின்தங்கிய மாநிலங்களுக்கு உதவுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் அந்த நிதி உதவியின் அளவு எவ்வளவு என்பது சரியாக தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும் உதவிக்காக வழங்கப்படும் நிதியை பின்தங்கிய மாநிலங்கள் எந்த அளவுக்கு சரியான முறையில் பயன்படுத்தி முன்னேறி இருக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories