TNPSC Thervupettagam

எதிர்வினை - ‘ஆதி’ என்கிற சாதியற்ற அடையாளம்

July 13 , 2023 550 days 574 0
  • விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ‘திராவிட மணி இரட்டை மலை சீனிவாசன்’ என்ற தலைப்பில் 07.07.2023 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. தரவுகளுடன் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

ஆதி’ சேர்ந்த பின்னணி

  • ‘திராவிடர்’ என்று விளிக்கும்போது, திராவிட நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களையும் அது பாகுபாடின்றிக் குறிக்கிறது. தனால்தான் இன்றைய தமிழ்நாடு அரசு, ‘திராவிட மாடல்’ அரசாகத் தன்னைப் பெருமிதத்துடன் அடையாளப்படுத்திக்கொள்கிறது. ‘திராவிடர்’ என்பதில் சாதி, மதம், பாலினம் என அனைவரையும் உள்ளடக்கிய பொதுத்தன்மை வெளிப்படுவதோடு ‘திராவிடர்கள் சாதி, மத, பாலினப் பாகுபாடற்றவர்கள்’ என்ற உள்ளீடும் அதில் மிளிர்கிறது.
  • ஆனால், திராவிடர் என்ற அடையாளத்துடன் ‘ஆதி’ என்ற முன்னொட்டைச் சேர்த்தவுடன் - பொதுமக்களின் பார்வையில் - அது ஒரு சாதியைச் சுட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ‘ஆதி’ என்ற தமிழ்ச் சொல், சாதியின் குறியீடாக இல்லாதபோது ஏன் இந்த முரண்பட்ட பார்வை தோன்றுகிறது?

கைகூடாத ஓர்மை

  • நீதிக்கட்சி ஆட்சியில், 1922 ஜனவரி 20 அன்று சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: ‘தமிழ் மற்றும் ஆந்திர மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய திராவிடச் சமூகத்தின் தொல்குடி மக்களை, அரசு ஆவணங்கள் போன்றவற்றில் ‘பஞ்சமர்’ அல்லது ‘பறையர்’ என்று குறிப்பிடப்படுவதை நீக்கி, அதற்குப் பதிலாக ‘ஆதி திராவிடர்’ என்றும் ‘ஆதி ஆந்திரர்’ என்றும் குறிப்பிடப்பட வேண்டும் என்று இச்சட்டப் பேரவை ஒருமனதாக அரசுக்குப் பரிந்துரைக்கிறது’ (அரசாணை எண்: 817, 25.03.1922).
  • மக்கள் பல நூறு சாதிகளாக வாழ்ந்தாலும் தமிழர்/திராவிடர் என்ற ஓர்மையின் அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இச்சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், சிரமேற்கொண்டு உருவாக்கப்படும் இத்தகைய ஓர்மை, சமூக ஓர்மையாகப் பரிணமிக்காமல் அரசியல் ஓர்மை என்ற அளவிலேயே நின்றுவிடுவதால்தான் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு, சாதிப் பாகுபாடுகளுக்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் வழிவகுக்கிறது.
  • பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் / தலித் / தாழ்த்தப்பட்டோர் என எப்பெயரைக் கொண்டு அழைத்தாலும், அவர்கள் ‘சாதியற்றவர்கள்’, ‘சாதியை எதிர்த்தவர்கள்’ அல்லது ‘ஆதிக்குடிமக்கள்’ என்ற உள்பொருளே ஓங்கி நிற்கிறது. ஏனெனில், இந்து நால்வர்ண அமைப்பில் அவர்களுக்கு இடமில்லை என்பதும், அவ்வர்ண தர்மத்தைக் கடுமையாக எதிர்த்ததால்தான் அவர்கள் ‘அவர்ணர்’களாக்கப்பட்டனர் என்பதும் வரலாறு. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால்தான் இழிவான பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
  • அது மட்டுமின்றி, அவர்கள்மீது திணிக்கப்பட்ட ‘சாதி அடையாளங்கள்’ அனைத்துமே - பிற சாதிகளுக்கு உள்ளதுபோல - அவர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க அடையாளங்கள் அல்ல. அக்காலத்தில் வழங்கப்பட்டுவந்த ஹரிஜன், பஞ்சமர் என்பது போன்ற அடையாளங்களும் பிறவி ஏற்றத்தாழ்வுகளைக் கேள்வி கேட்கும் வகையில் அமையவில்லை. எனவே, பிறவி இழிவை நீக்குவதற்கான ஒரு முக்கியச் செயல்பாடாகத்தான் தங்கள்மீது சுமத்தப்பட்ட பெயரிழிவுகளைக் களைய ‘ஆதி’ என்ற அடையாளத்தை அம்மக்கள் தாய்ச் சொல்லாக்கிக்கொண்டனர்.

முரணான கருத்துகள்

  • இந்நிலையில், ரவிக்குமார் தனது கட்டுரையின் 9ஆவது பத்தியில், ‘மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் முன்முயற்சியால் நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணையின் காரணமாகவே இன்றளவும் ஆதிதிராவிடர் என்கிற பெயர் தமிழ்நாடு அரசாங்கத்தின் பயன்பாட்டில் உள்ளது. அது பட்டியல் சாதிகளில் இடம்பெற்றுள்ள உள்சாதி ஒன்றின் பெயர் அல்ல. அந்தப் பெயரில் எந்த ஒரு சாதியும் இருந்ததில்லை. சாதி மறுப்பின் அடையாளமாகவே அந்தப் பெயர் சூட்டிக்கொள்ளப்பட்டது.
  • அரசாணை வெளியிடப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் சாதிச் சான்றிதழ் வழங்கும்போதும் உள்சாதிகளின் பெயர்களை அதிகாரிகள் பயன்படுத்தியதால் சீனிவாசன் உள்ளிட்ட முன்னோடிகள் போராடிப் பெற்ற அடையாளம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலை உள்ளது’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், அதற்கு முரணாக அதே கட்டுரையின் இறுதிப் பத்தியில், ‘தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் என்ற அடையாளங்களுக்குள் உள்ளடக்கப்பட்ட 14 சாதிகள் போக மீதமுள்ள சாதிகளை ‘ஆதிதிராவிடர்’ என ஒரே பெயரில் வகைப்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடுகிறார்.

எது சாதி அடையாளம்?

  • ஆதிதிராவிடர்’ என்கிற பெயர், பட்டியல் சாதிகளில் இடம்பெற்றுள்ள உள்சாதி ஒன்றின் பெயர் அல்ல என்றும் அந்தப் பெயரில் எந்தவொரு சாதியும் இருந்ததில்லை என்றும் சாதி மறுப்பின் அடையாளமாகவே அது சூட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுவிட்டு, தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் என்ற அடையாளங்களுக்குள் உள்ளடக்கப்பட்ட 14 சாதிகள் போக மீதமுள்ள சாதிகளை ஆதிதிராவிடர் என ஒரே பெயரில் வகைப்படுத்திவிட வேண்டும் என்று சொல்வது, ‘ஆதிதிராவிடரும் ஒரு சாதியே’ எனக் கருதுவதற்கு இடம்கொடுப்பதாக அமைந்துவிடுவதால் இதன் நோக்கமே பாழ்பட்டுவிடுகிறது.
  • அது மட்டுமல்ல, 60 உள்சாதிகளை மட்டும் ஆதிதிராவிடர் என்று அடையாளப்படுத்தினால் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் பெயரையும் மாற்றியாக வேண்டிய சிக்கலான நிலை உருவாகும். இதற்கு மாறாக, தமிழ்நாடு அரசுப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயரும் ஓர் உள்சாதியாக வைக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கப்பட வேண்டும்.
  • ஏனெனில், சாதியால் நால்வர்ணத்தினர் ஆக்கப்பட்டு, சூத்திரர் என இழிவுபடுத்தப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களை - ‘பிற்படுத்தப்பட்டோர்’ - என அழைப்பதுபோல, ஆதிதிராவிடர் என்பது சாதியும் அல்ல, உள்சாதியும் அல்ல; அது, சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதியற்றவர்களாக்கும் ஓர் உன்னதக் குறியீடு. அரசின் பிரதிநிதித்துவத் திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்துடன்தான் திராவிடர்களில் மூத்த குடியினர் என அம்மக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். திராவிடர் என்பது எப்படி சாதி அடையாளமாக மாறாதோ, அதேபோல் ஆதிதிராவிடர் என்பதும் எந்த நிலையிலும் சாதி அடையாளம் ஆகாது.

வரலாற்றுப் பிழை

  • தங்களை இந்து மத அடையாளத்துடன் வெளிப்படுத்திக்கொண்டால் இழிவு போய்விடும் என்ற எண்ணத்தில், பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள், அந்தப் பெயரில் அணி சேர்ந்தனர். தங்கள் மீது திணிக்கப்பட்ட பிறவி இழிவுக்குக் காரணமான மத அடையாளத்தையே சூட்டிக்கொள்வதால் இழிவு நீங்கிவிடாது என்பதைக் காலம் அவர்களுக்குப் புரியவைக்கும். ஆனால், அருந்ததியர்களுக்கு அந்த எண்ணமில்லை. பட்டியலில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அவர்கள் அரசால் வகைப்படுத்தப்பட்டனர். மேற்சொன்ன காரணங்கள், எஞ்சியுள்ள பட்டியல் பிரிவினருக்குப் பொருந்தாது.
  • அவர்கள் எப்போதும்போல மதச்சார்பற்ற, சாதி சார்பற்ற ஆதிதிராவிடர் என்ற இயல்பான அடையாளத்துடனேயே நீடிப்பதன் மூலம் இனிவரும் காலத்திலும் சாதியற்ற பட்டியல் ஓர்மையை வென்றெடுப்பதற்கு வழிகாட்டுபவர்களாகத் திகழ்வர். ஒரு பெயர் மாற்றம் தீண்டத்தகாதவர்களின் நிலையில் மிகப்பெரிய புரட்சியைக் கொண்டுவரும்.
  • ஆனால், அந்தப் பெயர் இந்து சமூகத்தைச் சாராத வேறொரு சமூகத்தின் பெயராகவும் இந்து மதத்தால் களங்கப்படுத்த முடியாத பெயராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெயரானது தீண்டத்தகாதவர்களுக்குக் கிடைக்கும் பெரும் சொத்து’ என்றார் டாக்டர் அம்பேத்கர். ‘ஆதிதிராவிடர்’ என்ற தொல்குடி அடையாளம்தான் அம்பேத்கர் சொன்ன பெரும் சொத்து. அச்சொல்லை உள்சாதிகளை அடையாளப்படுத்தக்கூடிய சொல்லாக மாற்றுவது வரலாற்றுப் பிழை!

நன்றி: தி இந்து (13 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories