TNPSC Thervupettagam

எது உண்மையான சமச்சீர்க் கல்வி

June 22 , 2023 381 days 368 0
  • தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களும் தொடங்கிஇருக்கின்றன. இந்தச் சூழலில், அவர் கொண்டுவந்த சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
  • தமிழ்நாட்டின் பள்ளிகளில் கடந்த 13 ஆண்டுகளாகச் சமச்சீர்க் கல்வி பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு வரலாறு உண்டு. 2006 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் ‘சமச்சீர்க் கல்வி’ கொண்டுவரப்படும்’ என திமுக அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியும் அமைத்தது. அதைத் தொடர்ந்து முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒரு நபர் குழுவின் ஆய்வறிக்கை, இது தொடர்பாக ஆராய்வதற்கு குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்குக் கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வுசெய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், 2010இல் ‘தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம்’ சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து, 1 முதல் 6 வகுப்புகளுக்கான சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் 2010இல் அறிமுகப்படுத்தப்பட்டன. 2011இல் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு, சமச்சீர்க் கல்வியைத் தடைசெய்தது கடும் எதிர்வினைகளைப் பெற்றது. நீதிமன்றத் தலையீட்டின் வழியாக மீண்டும் அது நடைமுறைக்கு வந்தது.
  • மாநில அரசுக் கல்வி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வகையான கல்வி அமைப்புகளால் மாணவர்களிடையே உருவாகும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கும் நோக்கில், சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் நிலை என்ன என்பது ஆய்வுக்கு உரியது.

சமவாய்ப்பு உள்ளதா?

  • அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசு உருவாக்கும் பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தேர்வுமுறையும் மதிப்பீட்டு முறைகளும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? அரசுப் பள்ளிகளில் முதல் எட்டு வகுப்புகளுக்குப் பின்பற்றப்படும் தொடர்-முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation, CCE), தனியார் பள்ளிகளில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை.

ஆசிரியர்கள் பற்றாக்குறை:

  • அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக நிலவிவருகிறது; ஓய்வுபெறும் ஆசிரியர்களின் பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை. அது மட்டுமல்ல.. அலுவலகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர் எனப் பல பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமலேயே கோரிக்கைக் காகிதங்களாகவே ஆண்டுகள் உருள்கின்றன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்று தடையில்லாமல் கற்றல்-கற்பித்தல் செயல்முறை நிகழ்கிறது. அங்கு ஆண்டுதோறும் புதிய ஆசிரியர்களை நியமித்துக் காலிப் பணியிடங்களே இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனர். நிர்வாகப் பணிகளுக்கு எனத் தனி அலுவலக ஊழியர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலை என்ன?
  • இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் மட்டும் சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 1,003 அரசு நடுநிலைப் பள்ளிகள், 1,235 அரசு ஆரம்பப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்நிலையில்தான் ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களும் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு மீண்டும் உதவித் தலைமை ஆசிரியர்களை நியமித்து பொறுப்பு வழங்கப்பட்டும், அப்படிப் பொறுப்பு வகிக்கும் மூத்த ஆசிரியர்களது இடங்களில் தகுதியான ஆசிரியர்களைப் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் வழியாக நிரப்பிக்கொள்ளவும் வழிகாட்டு நெறிமுறை வந்துள்ளது.

கற்பித்தல் பணியில் தொய்வு:

  • தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்களை அவர்களால் முழுமையாகக் கவனிக்க முடிகிறது. அன்றாடம் பாடம் நடத்தி மதிப்பீடு செய்து மாணவர்களுக்குக் கூடுதல் கவனம்கொடுத்து வழிநடத்த முடிகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் மட்டுமல்லாமல் மற்ற எல்லா பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியிருப்பதால் அடிப்படைப் பணியான கற்பித்தலில் தொய்வு ஏற்படுகிறது.

திட்டங்களால் ஆன பயன்?

  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும்போது வெற்றித் திட்டங்கள்போலத் தோன்றினாலும், அவற்றால் கற்றல்-கற்பித்தலில் இடைவெளி உருவாகிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால் புரிந்துகொள்ள முடியும்.
  • உதாரணமாக, ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’. மேற்குறிப்பிட்ட நான்கு வகைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ ஆகிய பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, இத்திட்டத்தின் வழியாகத்தான் கற்பித்தல் செயல்பாடு நடக்கவிருக்கிறதா? இல்லையெனில், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் ஏன்‌ இந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டக் கற்பித்தல்? இந்தத் திட்டம் மட்டுமல்ல, ‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணிலடங்கா திட்டங்களை அரசுப் பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் அரசு செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டங்கள் யாவும் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றியிருப்பதாகத் தெரியவில்லை.
  • ஏனென்றால், தொடக்கப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் உயர் வகுப்புகளுக்கு வரும்போது அங்கு அடிப்படைத் திறன்களின்றி இருக்கின்றனர். வெறும் தேர்வையும் தேர்ச்சியையும் மட்டுமே நோக்கி நகரும் கல்வி முறையே பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான குழந்தைகள் பெறும் கல்வியும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெறும் கல்வியும் சமமற்ற முறையில் இருப்பதைச் சமச்சீர்க் கல்வி என்று எப்படிச் சொல்ல முடியும்? பெயரில் மட்டும் சமர்ச்சீர் என்றிருப்பது எந்த வகையில் பலன் தரும்?

செய்ய வேண்டியது என்ன?

  • பாடத்திட்டங்களில் மட்டுமன்றி, அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல், வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வழங்குதல், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் தடையின்றி நடக்க ஏதுவான சூழலை உருவாக்குதல், கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்காமல் இருத்தல், கட்டிட வசதிகள் செய்துதருதல், கழிப்பறைகள் பராமரிப்பு என்று அடிப்படையான சிலவற்றை வழங்கினாலே கல்வி சிறக்கும். வெறும் திட்டங்களை மையப்படுத்தி பள்ளிகளை இயக்குவதற்குப் பதிலாக, மேற்கண்டவையே ‘சமச்சீர்க் கல்வி’யைச் செயல்படுத்துவதன் நோக்கமாக இருக்க வேண்டும். சமமான கல்வியை அனைத்துக் குழந்தைகளும் பெற்றிட‌ அரசு ஆவன செய்ய வேண்டும்.

நன்றி: தி இந்து (22  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories