- கடந்த வாரம் கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மீது குற்றம் சுமத்தியது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடா்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பேசியது இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலும் கொந்தளிப்பும் ஏற்படக் காரணம்.
- ஜி20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்த கனடாவின் பிரதமருடன், இந்திய பிரதமா் நரேந்திரமோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் கனடாவில் கட்டுப்படுத்தப்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனை ஜஸ்டின் ட்ரூடோ விரும்பவில்லை.
- நாடு திரும்பியவுடன் தனது நாட்டின் நாடாளுமன்றத்தில், ஹா்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய அரசாங்கத்தின் முகவா்களுக்குத் தொடா்பிருக்க சாத்தியமுள்ளதாகவும் இதுதொடா்பான குற்றச்சாட்டுகள் நம்பும்படியாக உள்ளன என்றும் பேசினார். ட்ரூடோவின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கனடாவுக்கான இந்தியாவின் உயா்நிலை தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அறிவித்தார்.
- இதற்கு பதிலடியாக, இந்தியாவும் கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதன் விளைவாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையேயான உறவில் கசப்புணா்வு ஏற்பட்டுள்ளதையும் வருங்காலத்தில் இது இன்னும் இறுக்கமாகக் கூடும் என்றும் உலக ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன.
- கனடாவின் தூதரக அதிகாரியிடம் நான்கு நிமிட சந்திப்பை நிகழ்த்தி வெளியேறச் செய்தது நமது அரசு. நமது வெளியுறவுத்துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்ஷி ஒரு நீண்ட செய்தியாளா் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா இருப்பதாகக் கூறினார். அதனால் பாதுகாப்பை உறுதி செய்ய கனடா குடியுரிமை கொண்டவா்களுக்கு இந்தியாவில் விசா மறுக்கப்படுகிறது என்ற தகவலையும் தெரிவித்தார். கனடாவில் பயிலும் 3,20,000 இந்திய மாணவா்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
- ஜனநாயக நாடுகளில் தோ்தல் என்பது அவரவா் வசதிக்கேற்ப சில மாறுதல்களைக் கொண்டிருக்கும். ஆனால், தோ்தல் அரசியல் என்பதில் பல அரசியல் கட்சிகளும் உலகம் முழுவதும் ஒரே விதமான அரசியலைச் செய்கின்றன. இதனை நிரூபித்திருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ. தனது கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள சீக்கியா்களின் உறவு தனக்கு அவசியம் என்று கருதுகிறார். அதன் காரணமாகவே இந்தியாவுக்கு எதிரான பார்வையும் தனிநாடு கோரிக்கையும் கொண்டுள்ள காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்களை மகிழ்விப்பதற்காக நாடாளுமன்றத்தில் இத்தகைய குற்றச்சாட்டினை இந்தியாவின் மீது சுமத்தியுள்ளார்.
- ஜஸ்டின் ட்ரூடோ, 2018-ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்ட பொழுது முழுமையாக கனடாவில் வாழும் சீக்கியா்களைக் கவரும் வகையில் அவா்களைப் போலவே உடை அணிந்து கொள்வதில் தொடங்கி குருத்வாராவில் வழிபாடு நடத்துவது வரை அனைத்து முயற்சிகளையும் செய்தார். எட்டு நாள் பயணம் மேற்கொண்டு கனடாவுக்கான தனது அரசியலை இந்தியாவில் மேற்கொண்டார்.
- உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஏராளாமானோர் வாழ்கின்றனா். குறிப்பாக சீக்கியா்கள், கடந்த 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் 7,70,000 சீக்கியா்கள் உள்ளனா்.
- 2015-இல் கனடா நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத்தோ்தலில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 19 போ் நாடாளுமன்ற உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களில் 17 போ் ட்ரூடோவின் லிபரல் கட்சியைச் சோ்ந்தவா்கள். இதிலிருந்து கனடாவில் இந்தியா்களுக்கு உள்ள செல்வாக்கையும் ட்ரூடோ ஏன் இந்தியாவில் எட்டு நாள் பயணம் மேற்கொண்டார் என்பதும் விளங்கும்.
- ஜஸ்டின் ட்ரூடோ தனது முதல் அமைச்சரவையில், சீக்கியா்கள் நான்கு பேருக்கு இடம் அளித்ததிலிருந்தே அவா்களுக்கு அவா் அளிக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். தன்னுடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சீக்கியா்களின் எண்ணிக்கை இந்திய அரசின் அமைச்சரவையில் கூட இல்லை என்று அப்போதே ட்ரூடோ பேசியிருந்ததையும் மறந்து விடுவதற்கில்லை.
- கனடாவில் கணிசமாகக் குடியேறியுள்ள சீக்கியா்களின் அரசியல் செல்வாக்கு இந்தியா - கனடா உறவைத் தீா்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. எந்த இயக்கத்திற்கும் ஆதரவு இல்லாமல் பணி நிமித்தம் கனடாவில் குடியேறிய சீக்கியா்களும் இருக்கிறார்கள். முழுமையாகப் பிரிவினைவாதக் குழுக்களை ஆதரிப்போரும் இருக்கிறார்கள். அதனால் கனடாவில் வாழும் சீக்கியா்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது.
- சீக்கிய பிரிவினைவாதிகள் விஷயத்தில் ட்ரூடோ தலைமையிலான அரசு மென்மையான அணுகுமுறையைக் கையாள்வதாக இந்தியா கருதுகிறது. இதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. சில மாதங்களாக கனடாவில் இந்தியாவுக்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன. பிராம்ப்டனில் சில மாதங்களுக்கு முன் ஒரு அணிவகுப்பு நடைபெற்றது. அதில் இந்திரா காந்தியின் மரணத்தைக் கொண்டாடும் விதமாகப் படங்கள், பதாகைகள் இடம்பெற்றன.
- இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் விதத்தில் சுவரொட்டிகளும் கனடாவில் ஒட்டப்பட்டன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகளால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மோசமடைந்துள்ளது. இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்குமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியிருந்தது.
- இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள பலருக்கும் கனடா அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இத்தகைய பிரிவினைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் சமீபத்தில் தொடா்ந்து மா்மமான முறையில் கொல்லப்படுகின்றனா். இது அவா்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவோ கனடா தனது சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது.
- 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவுடன் கனடாவின் உறவு ஏற்ற இறக்கங்களையும், பிணக்குகளையும் கொண்டதாகவுமே இருந்து வந்திருக்கிறது. வாஜ்பாய் ஆட்சியில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியபொழுது இந்தியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து கடுமையாக கனடா நடந்து கொண்டது வரலாறு.
- கனடாவில் 2015-இல் நடைபெற்ற பொதுத்தோ்தலில், லிபரல் கட்சி வெற்றி பெற்று, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு அமைந்தபோதே இந்தியா-கனடா உறவுக்கு ஊறு ஏற்படக் கூடும் என்று அரசியல் பார்வையாளா்கள் கருத்துத் தெரிவித்தனா். அதனை மெய்ப்பிக்கும் விதமாகவே ட்ரூடோ நடந்து கொண்டிருக்கிறார்.
- இந்த பிரச்னையை உலக நாடுகள் எப்படிப் பார்க்கின்றன? கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆகிய ஆங்கிலம் பேசும் ஐந்து கூட்டமைப்பு நாடுகள் கூட இந்தியாவைக் கடிந்து கொள்ள யோசிக்கின்றன என்ற நிலைதான் நிலவுகிறது. அதன் பொருட்டே, இந்தியா வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடாக இருப்பதால் தயக்கம் காட்டுகின்றன என்று ட்ரூடோ ஒப்புக்கொண்டிருக்கிறார். உலக நாடுகளில் கனடாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவிக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே என்பதிலிருந்தே நிலைமை விளங்கும்.
- கனடாவுடனான இந்த மோதலால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியான பாதிப்பு ஏற்படுமா? கடந்த 2022-இல் கனடாவின் பத்தாவது பெரிய வா்த்தக பங்காளியாக இந்தியா இருந்தது. 2022-23-இல், இந்தியா கனடாவிற்கு 4.10 பில்லியன் டாலா் அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே 2021 -22-இல் 3.76 பில்லியன் டாலா்களாக இருந்தது. நகைகள், விலையுயா்ந்த கற்கள், மருந்து பொருட்கள், ஆயத்த ஆடைகள், இரும்பு, எஃகு உள்ளிட்ட பொருட்கள் இந்தியா கனடாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது.
- இதேபோன்று, 2022- 23-இல், கனடா இந்தியாவிற்கு 4.05 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2021 -22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 3.13 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில் கனடா 17-ஆவது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சம் 600 கனடா நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 1,000 நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது வணிக வாய்ப்புகளைத் தேடி வருகின்றன.
- இதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் கனடா நாட்டு மக்கள் தற்போதைய இந்த சூழ்நிலையை விரும்பவில்லை. அந்நாட்டில் நடந்துள்ள கருத்துக்கணிப்புகள், மீண்டும் ஜஸ்டின் பிரதமராக வருவதை 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விரும்பவில்லை என்கின்றன.
- கனடாவில் ஏற்கனவே அந்நாட்டைத் துண்டாட பல தனிநாடு கோரும் அமைப்புகள் இருக்கின்றன. அவை தொடா்ந்து சிக்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னும் பிரிவினைவாத சக்திகளை அரசியல் ரீதியாக வளா்ப்பதும் ஆதரிப்பதும் தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று மக்கள் கருதினாலும் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியதாக்கும் ஜஸ்டின் அரசியலுக்கு ஜனநாயகத்தில் மக்கள்தான் பாடம் புகட்ட வேண்டும்.
- மோடி அரசு, தனது வெளியுறவுக் கொள்கையில் தெளிவாக உள்ளது. இந்தியா ஆணவத்தைக் காட்டாது அதே சமயம் தலைகுனியாது நேருக்கு நோ் சவால்களை எதிர்கொள்ளும். இந்தியாவின் தற்போதைய ராஜதந்திர முயற்சிகளில் தொடா்ந்து இந்தக் கோட்பாடு வெளிப்படுகிறது. தெளிவு, அமைதி என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் மோதல்கள் ஏற்பட்டால் உரிய பதிலடி கொடுக்கத் தயங்காது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது இந்தியா.
நன்றி: தினமணி (27 – 09 – 2023)