TNPSC Thervupettagam

எத்தனால் வாகனங்களில் இந்தியா ஏன் கவனம் செலுத்துகிறது

July 10 , 2023 505 days 542 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர்நிதின் கட்கரி, 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சமீபத்தில் தெரிவித்தார். வரும் ஆகஸ்ட் மாதம் டொயோட்டா நிறுவனத்தின் எத்தனால் கார் அறிமுகமாக உள்ளது என்றும் டிவிஎஸ்,பஜாஜ், ஹீரோ போன்ற இருசக்கர வாகன தயாரிப்புநிறுவனங்களும் முழுமையாக எத்தனாலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தப் போகின்றன என்றும் அவர் தன்னுடைய பேச்சில்குறிப்பிட்டார்.
  • அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் 40 சதவீத மின்வாகனங்களும் 60 சதவீத எத்தனால் கலப்பு எரிபொருளும் பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பெட்ரோல் விலை ரூ.15 ஆக குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்திருப்பது பெரும் கவனம் ஈர்த்து இருக்கிறது.
  • 2040-க்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் மின்வாகனங்களாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ஏன் அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் வாகனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்?
  • இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. சென்ற நிதி ஆண்டில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ரூ.13 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இந்தியாவின் அந்நிய செலாவணியில் பெரும் பகுதி கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செல்கிறது. இந்தச் சூழலில், கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
  • மத்திய அரசின் இலக்கின்படி பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து முற்றிலும் மின்வாகனங்களுக்கு மாற இன்னும் 15 ஆண்டுகள் எடுக்கும். எனில், இந்த காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பது எப்படி? அதற்குத்தான் மத்திய அரசு எத்தனாலில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.

எத்தனால் எனும் உயிரி எரிபொருள் 

  • பெட்ரோல்போல் எத்தனாலும் எரிதன்மை கொண்டது. கரும்பு, சோளம் உட்பட விவசாயப் பொருட்களிலிருந்து எத்தனால் உருவாக்கப்படுகிறது. குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால், குறைவான விலையில் எத்தனால் கிடைக்கிறது.தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டுகிறது. எத்தனாலின் விலை ரூ.60. பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் உயிரி எரிபொருளான எத்தனாலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகக் குறைவானது.
  • வாகனங்களில் எத்தனாலை அப்படியே பயன்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனாலின் செயல்திறன் குறைவானது. தவிர, உலகளாவிய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு எத்தனால் தயாரிப்பது சவால் நிறைந்தது. ஏனென்றால், எத்தனால் பிரதானமாக விவசாயப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், உணவுத் தடுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், எத்தனால் பெரும்பாலும் கலப்பு எரிபொருளாக, அதாவது பெட்ரோலுடன் கலக்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது.

முன்னுதாரணமாக திகழும் பிரேசில் 

  • பெட்ரோலுடன் எத்தனாலை கலந்து பயன்படுத்தும் போக்கு 1970-களிலேயே தொடங்கி விட்டது. பிரேசில் இதற்குஒரு முன்னுதாரண நாடாக திகழ்கிறது. 1970-களில், உலக அளவில் கச்சா எண்ணெய் நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், பிரேசில் எரிபொருள் சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. கரும்பு விளைச்சல் அதிகமிக்க நாடு அது.
  • இதனால், பெட்ரோலில் எத்தனால்கலக்க பிரேசில் முடிவு செய்தது. பிரேசிலில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் எத்தனால் இன்ஜினைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையை அந்நாட்டு அரசு உருவாக்கியது. 1975 முதல் பிரேசில் வாகனங்களில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலே பயன்படுத்தப்படுகிறது.
  • தற்போது அங்கு பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான வாகனங்கள், 100 சதவீத எத்தனால் இன்ஜினைக் கொண்டவை. எனினும் பிரேசிலில், பெட்ரோலில் 25 சதவீதம் அளவே எத்தனால் கலக்கப்படுகிறது.
  • உலக அளவில் எத்தனாலை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு, எத்தனால் இன்ஜின் வாகனங்களே பரவலாக பயன்பாட்டில் உள்ளன. அங்கு பெட்ரோலில் 15 சதவீதம் வரையில் எத்தனால் கலக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளும் பொருளாதார தாக்கத்தையும் காலநிலை மாற்றத்தையும் கணக்கில் கொண்டு, பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்திய நிலவரம்

  • தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப் படுகிறது. அதை 20 சதவீதமாக அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் 20 சதவீத எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2025-க்குள் நாடு முழுவதுவம் 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலை பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எத்தனால் கலப்பு விகிதத்தை படிப்படியாக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
  • இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும், வாகனங்களில் 10 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலை பயன்படுத்திக் கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. எத்தனால் கலப்பு 20 சதவீதம் மற்றும் அதற்கு மேல் அதிகரிக்கப்படும்பட்சத்தில், வாகனங்களின் இன்ஜினில் சில மாற்றங்கள் தேவைப்படும். அதனால், வாகன நிறுவனங்கள் தங்கள்புதிய தயாரிப்புகளை 100 சதவீத எத்தனாலிலும் ஓடும் வகையிலானதாக உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன.
  • இந்தியாவில் 2019-ம் ஆண்டே 100 சதவீத எத்தனால் வாகனம் - டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி RTR 200 Fi E100 - அறிமுகமாகிவிட்டது. கடந்த ஆண்டு டொயோட்டோ இந்தியாவின் முதல் 100 சதவீத எத்தனால் இன்ஜின் காரை அறிமுகம் செய்தது. இந்நிலையில், அந்நிறுவனம் 'காம்ரி’ என்ற புதிய மாடல் எத்தனால் இன்ஜின் காரை ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்கிறது. இத்தகைய வாகனங்கள் flex fuel vehicle என்று அழைக்கப்படுகின்றன. அதாவது இவை, பெட்ரோலிலும் ஓடும். எத்தனாலிலும் ஓடும்.
  • இந்தியா தற்சமயம் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பதால், பெட்ரோல் இறக்குமதியில் ரூ.40 ஆயிரம் கோடி வரை மிச்சமாகிறது என்று மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில் எத்தனால் கலப்பை 20 சதவீதமாக உயர்த்தும் நிலையில், இன்னும் கூடுதலாக மிச்சப் படுத்த முடியும். இதனால், எத்தனால் கலப்பில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது.
  • இதில் பல சவால்கள் உண்டு. தற்சமயம் இந்தியாவின் எத்தனால் தயாரிப்பு கட்டமைப்பு 700 கோடி லிட்டராக உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், இந்தக் கட்டமைப்பு 1500 கோடி லிட்டராக உயர்த்தப்பட வேண்டும். இந்த விரிவாக்கப் பணியில் தற்போது மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

விவசாயிகள் பயன்பெறுவர் 

  • எத்தனால் உற்பத்தியில் விவசாயப் பொருட்களே அடிப்படை என்பதால், இந்தியாவின் இந்த நகர்வில், விவசாயிகளின் பங்களிப்பு மிக அவசியமானதாக மாறுகிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாகவே, நிதின் கட்கரி, "இதுவரையில் நம் விவசாயிகள் நமக்கு உணவு அளிப்பவர்களாக இருந்தார்கள். இனி அவர்கள் நமக்கு எரிபொருள் அளிக்கக் கூடியவர்களாகவும் மாறுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  • எத்தனால் உற்பத்தி அதிகரித்தால் கரும்பு கொள்முதல்விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

நன்றி: தி இந்து (10 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories