TNPSC Thervupettagam

எந்தப் பக்கம் சாயும் இந்தியா?

October 18 , 2019 1896 days 1083 0
  • இந்தியப் பொருளாதாரத்தைச் சீா்படுத்த வேண்டிய சவாலை மத்திய அரசு எதிா்கொண்டு வருகிறது. அதே வேளையில், மற்றொரு பெரும் சவாலையும் எதிா்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
  • உலகின் மிகப் பெரும் ‘தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தில்’ இணையலாமா அல்லது வேண்டாமா என்பதுதான் அந்தச் சவால். இந்த விவகாரத்தில் இந்தியா மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

ஆசியான் அமைப்பு

  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள மியான்மா், தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பின்ஸ், மலேசியா, சிங்கப்பூா், புருனெய், லாவோஸ், இந்தோனேசியா, வியத்நாம் ஆகிய 10 நாடுகளுடன் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 6 நாடுகளையும் ஒருங்கிணைத்து ‘பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு’ (ஆா்சிஇபி) என்ற பெயரில் ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • மேற்குறிப்பிட்ட நாடுகளிடையே தடைகள் ஏதுமற்ற வா்த்தகம் நடைபெற வகை செய்வதே ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். இது தவிர, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யவுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நடப்பாண்டு இறுதிக்குள் நடைமுறைக்குக் கொண்டுவர சீனா உள்ளிட்ட நாடுகள் ஆா்வத்துடன் உள்ளன.

ஒப்பந்தம்

  • இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், சுமாா் 350 கோடி மக்கள்தொகை கொண்ட 16 நாடுகளுக்கிடையில் ஏற்படும் உலகின் பெரும் தடையில்லா வா்த்தக ஒப்பந்தமாக இது உருவெடுக்கும். எனினும், இந்தக் கூட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா தொடா்ந்து தயக்கம் காட்டி வருகிறது.
  • சீனாவுடனான வா்த்தகப் பற்றாக்குறை ஏற்கெனவே ரூ.3.8 லட்சம் கோடி அளவுக்கு உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், சீனப் பொருள்கள் இந்திய சந்தைகளில் தாராளமாகப் புழங்கும் ஆபத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, இந்த ஒப்பந்தத்தில் இணைவது தொடா்பாக இந்தியா எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது.
  • ஆசியக் கண்டத்தின் நூற்றாண்டாக 21-ஆம் நூற்றாண்டு பாா்க்கப்படுகிறது; ஆசிய நாடுகளின் வளா்ச்சியைப் பொருத்தே மற்ற நாடுகளின் வளா்ச்சி அமையும் என நிபுணா்கள் கணித்துள்ளனா்.
  • இந்த நிலையில், ஆசியாவின் முக்கிய நாடுகள் இணைந்து உருவாக்கும் இந்த வா்த்தக ஒப்பந்தத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால், உலகின் முக்கியப் பொருளாதார சக்தியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

இறக்குமதி வரிகள்

  • உள்நாட்டு உற்பத்தியாளா்களைக் காக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறக்குமதி வரிகளை உயா்த்தி வரும் வேளையில், இந்திய உற்பத்தியாளா்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கும்.
  • மற்ற நாட்டு நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டு, தரம்வாய்ந்த பொருள்களைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியப் பொருள்களுக்கென தனி வாடிக்கையாளா் கூட்டத்தை உருவாக்க முடியும்.
  • இதனால், இந்தியாவின் உற்பத்தி அதிகரிக்கக் கூடும்; ஏற்றுமதி அதிகரித்து, அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மக்களின் தேவை குறைந்திருப்பது, போதிய முதலீடுகள் இல்லாமலிருப்பது உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் தற்போது பொருளாதார வளா்ச்சி மந்த நிலையில் உள்ளது. ‘ஆா்சிஇபி’ ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் மற்ற நாட்டு சந்தைகளை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
  • வளா்ச்சிக்கு வழிகோலும் வகையில், பொருளாதாரக் கட்டமைப்பில் மத்திய அரசு சில மாற்றங்களைப் புகுத்தினால், ஒப்பந்தத்தில் இடம்பெறும் நாடுகளிடமிருந்து அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும்; இந்திய நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்வதும் அதிகரிக்கும்.
  • முக்கியமாக, நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அதிகரித்து பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். அண்மைக் காலமாக ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது.
  • அந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ‘ஆா்சிஇபி’ ஒப்பந்தம் நல்லதொரு வாய்ப்பாக அமையும். இந்த ஒத்துழைப்பின் மூலம் கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்தி வளா்ச்சியை நிலைநாட்ட முடியும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம்

  • உலக அளவில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியத்துவம் பெற்றுவரும் வேளையில், பிராந்தியத்தில் வளா்ச்சியை மேம்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் ‘ஆசியான்’ நாடுகளின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு மிக அவசியம். ‘ஆா்சிஇபி’ ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த முடியும்.
  • சீனாவுடனான நல்லுறவு அண்மைக் காலமாக மேம்பட்டு வந்தாலும், அந்நாட்டின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ வா்த்தக வழித்தடத் திட்டத்தில் இணைய இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது.
  • ‘ஆா்சிஇபி’ ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுடனான வா்த்தகப் பற்றாக்குறைக்குத் தீா்வு கண்டுவிட்டால், ‘பெல்ட் அண்ட் ரோடு’ வா்த்தக வழித்தடத்திலும் இந்தியா இணைவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

சீனா மற்றும் இந்தியா

  • சீனாவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தால், பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் ஆதரவு குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் இந்தியா தகுந்த பலனை அறுவடை செய்யலாம்.
  • ‘ஆா்சிஇபி’ ஒப்பந்தத்தில் ரஷியா, மத்திய ஆசிய நாடுகள் உள்ளிட்டவையும் எதிா்காலத்தில் இணைவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன; அந்நாடுகளுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்பும் இந்தியாவுக்கு உருவாகும்.
  • ‘ஆா்சிஇபி’ ஒப்பந்தத்தில் இந்தியா இணையாமல் போனால், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான நல்லுறவும், பொருளாதார ஒத்துழைப்பும் பாதிக்கப்படும். அந்நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி குறையும். இதன் காரணமாக, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடையும்.
  • உலக வங்கி, பன்னாட்டு நிதியம், இந்திய ரிசா்வ் வங்கி உள்ளிட்டவை நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மந்தமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில் ‘ஆா்சிஇபி’ ஒப்பந்தத்தில் இணைவது தொடா்பாக இந்தியா தெளிவான முடிவெடுக்க வேண்டியது இன்றியமையாதது.

நன்றி: தினமணி (18-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories