- நாம் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குறித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நம்மில் பலருக்கு யுபிஎஸ்சி குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வு உள்பட பல்வேறு விதமான தேர்வுகளை நடத்துகிறது. குடிமைப் பணி தேர்வு மட்டுமல்லாது மேலும் பல சவாலான தேர்வுகளை நடத்தி இந்திய அரசாங்கத்தின் உயரிய பதவிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்யவும் யுபிஎஸ்சி உதவி செய்கிறது.
- யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகள் குறித்து தேர்வர்கள் பலரும் அறிந்திருப்பதில்லை. யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
யுபிஎஸ்சி என்றால் என்ன
- யுபிஎஸ்சி என்பது குடிமைப் பணி தேர்வுகளுக்கும், மத்திய அரசின் மற்ற பிற உயரிய பதவிகளுக்கும் தேர்வு நடத்தி அதிகாரிகளை உருவாக்குவதற்காக அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். குடிமைப் பணி தேர்வு யுபிஎஸ்சி-யால் நடத்தப்படும் மிக முக்கியமான தேர்வு.
- இந்தத் தேர்வின் வாயிலாக தேர்வர்கள் சமுதாயத்தில் மிகவும் மதிப்புமிக்க பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்குத் தேர்வாகின்றனர். குடிமைப் பணி தேர்வுகளை தவிர்த்து இந்திய வனத்துறை சேவைகளுக்கானத் தேர்வு, இன்ஜினியரிங் சேவைகளுக்கானத் தேர்வு, பாதுகாப்பு துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கானத் தேர்வு, கடற்படை சார்ந்த பணிகளுக்கானத் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கானத் தேர்வு போன்ற பல தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்துகிறது. இந்த தேர்வுகளின் மூலம் நிர்வாகம், பொறியியல், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கான உயர் அதிகாரிகளை யுபிஎஸ்சி தேர்வு செய்கிறது.
யுபிஎஸ்சி எப்போது தொடங்கப்பட்டது
- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அக்டோபர் 1, 1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. யுபிஎஸ்சி ஆரம்பத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி அரசியலமைப்பு அந்தஸ்தைப் பெற்றது. யுபிஎஸ்சி-யின் முதன்மையானப் பணி குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை நடத்துவது. குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வினை யுபிஎஸ்சி ஆண்டு முழுவதும் நடத்துகிறது.
- குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் தவறாமல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மூன்று படிநிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. இந்திய வனத்துறை சேவைக்கான தேர்வினை எழுதுபவர்களும் குடிமைப் பணி தேர்வின் முதல்நிலைத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின், வனத்துறை சேவைக்கான முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தனியாக நடத்தப்படும்.
தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது
- யுபிஎஸ்சி தேர்வுகள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆளுமைத் தேர்வு எனப் பல கட்டங்களாக தேர்வரின் திறன் மதிப்பிடப்படுகிறது. பல கட்ட மதிப்பிடுதல் மூலமாக தேர்வரின் அறிவுத் திறன், குடிமைப் பணிக்கான தகுதியை அவர் பெற்றுள்ளாரா என்பன விரிவாக மதிப்பிடப்படுகின்றன.
யுபிஎஸ்சி நடத்தும் முக்கியமான தேர்வுகள்
குடிமைப் பணி தேர்வு
பதவிகள்
- ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி சேவைகள்.
- குடிமைப் பணி தேர்வு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, வருவாய் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குடிமைப் பணித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் அரசின் கொள்களை வகுத்தல், அதனை செயல்படுத்துதல், பல்வேறு துறை சார்ந்த நிர்வாகத்தினை கவனித்துக் கொள்வது போன்ற மிக முக்கிய பொறுப்புகளில் ஈடுபடுகின்றனர்.
பொறியியல் சேவைகளுக்கான தேர்வுகள்
- பதவிகள்: இந்திய பொறியியல் சேவைகள் (ஐஇஎஸ்) (சிவில் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங்)
- பொறியியல் சேவைகளுக்கானத் தேர்வின் மூலம் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கான பொறியியல் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பொதுத்துறை சார்ந்த பணிகள், போக்குவரத்து, ஆற்றல், தொலைத்தொடர்பு மற்றும் உற்பத்தி போன்ற அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றுகின்றனர்.
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வு
பதவிகள்
- அரசின் பல்வேறு சுகாதாரம் சார்ந்த துறைகளில் மருத்துவ அதிகாரிகள். ரயில்வே துறை, ஆயுதக் கிடங்குகள், நகராட்சி அலுவலகங்களில் சுகாதார அதிகாரிகள்.
- ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கானத் தேர்வின் மூலம் பொது சுகாதாரம், நோய் வருமுன் காத்தல், குடும்ப நல சுகாதார முகாம்கள் மற்றும் மருத்துவ நிர்வாகம் போன்றவற்றுக்காக மருத்துவ வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்திய வனத்துறை சேவைகளுக்கான தேர்வு
- பதவி: இந்திய வனத்துறை பாதுகாப்பு அதிகாரி. காடுகள் மேலாண்மை, காடுகளையும் காடுகளில் உள்ள வன விலங்குகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வது வனத்துறை பாதுகாப்பு அதிகாரியின் முக்கிய பொறுப்பாகும்.
- வனத்துறை அதிகாரிகள் வனங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை, வனவிலங்குகளின் பாதுகாப்பு, கிராமப்புறங்களின் வளர்ச்சி, வனங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை எதிர்கால சந்ததியினரின் தேவையறிந்து பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதி செய்கின்றனர்.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறைக்கான தேர்வு
- பதவி: இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள்.
- ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறைக்கான தேர்வின் மூலம் ராணுவத்தின் பல்வேறு துறைகளுக்கான அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் ராணுவம், மருத்துவம் மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கான தேர்வு
- பதவி: இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் இந்திய கப்பற்படைக்கான வீரர்கள்.
- இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ராணுவப் பயிற்சியினை தேசிய பாதுகாப்பு அகாடெமி வழங்குகிறது. ராணுவத் தலைமை, ராணுவ யுக்திகள், ராணுவப் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு உடல்தகுதி என்பது மிக முக்கியம்.
யுபிஎஸ்சி தேர்வுக்கு ஏன் படிக்க வேண்டும்
- குடிமைப் பணி தேர்வுகளுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மிகப் பெரிய மரியாதையை யாராலும் மறுக்க முடியாது. மத்திய அரசின் மிக உயர்ந்த பதவியை அடைவதற்காக தேர்வர்கள் பல ஆண்டுகளாக தங்களது கடும் உழைப்பை கொடுக்கின்றனர். இத்தனை கடினமான தேர்வு எனத் தெரிந்தும் தேர்வர்கள் குடிமைப் பணித் தேர்வினை நோக்கி இழுக்கப்படுவது ஏன்? எதற்காக லட்சக்கணக்கில் இந்த குடிமைப் பணித் தேர்வுக்காக ஆண்டுதோறும் விண்ணப்பிக்கிறார்கள்?
யுபிஎஸ்சி தேர்வை நோக்கி தேர்வர்கள் கவரப்படுவதற்கான காரணிகள்
- தேர்வர்கள் பணியமர்த்தப்படுவதில் எந்தவொரு குழறுபடியும் இல்லாதது
- குடிமைப் பணித் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் நிலவும் கடும் போட்டி
- உயர்ந்த நிலையை அடைய வாழ்க்கைக்கானப் பாதையாக யுபிஎஸ்சி தேர்வுகள் பார்க்கப்படுவது
- சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதை மற்றும் பணியில் அமர்ந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்
- கொள்கைகளை வகுப்பதிலும், தேசத்தைக் கட்டமைப்பதிலும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
- உயர்ந்த பதவியை அடைய பலதரப்பட்ட வாய்ப்புகள்
- உத்தரவாதமான வேலை
- வேலையையும், குடும்பத்தையும் சமமாக கொண்டு செல்வதற்கான வாய்ப்பு
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பதவி
- ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும்போது இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) தேர்வினை உருவாக்கினார்கள். அதன்பின், ஆங்கிலேய அரசின் மிக முக்கிய பொறுப்பாக அந்தப் பதவி மாறிப்போனது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய குடிமைப் பணி பதவி தொடர்ந்தது. சிவில் சர்வீஸ் என்பது தற்போதும் நாட்டை கட்டமைப்பது, ஆட்சி செய்வது ஆகியவற்றில் மிக உயரிய பதவியாக உள்ளது. இந்த காரணங்களினால் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மிக முக்கிய நபர்களாக (விஐபிக்களாக) நடத்தப்படுகின்றனர். சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கும் இந்த அதிகப்படியான மரியாதை சரியா? தவறா? என்ற விவாதமும் வெகு நாள்களாக வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்தியாவின் முதல் குடிமைப் பணி அதிகாரி (சத்யேந்திரநாத் தாகூர்)
- இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுகள் அன்றைய காலக் கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமான உயரிய பதவியாக இருந்தது. அதிலும் குறிப்பாக உயர் வகுப்பைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரிகளால் மட்டுமே சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு வர முடிந்தது. 1864 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியரான சத்யேந்திரநாத் தாகூர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இந்தியாவின் முதல் சிவில் சர்வீஸ் அதிகாரியாக மாறினார்.
- பிரபலமாக அறியப்பட்ட தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சத்யேந்திரநாத் தாகூர். 1842 ஆம் ஆண்டு பிறந்த இவர், கல்கத்தாவில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் கல்வி கற்றார். அவரது கல்லூரி நாட்களில் பிரம்ம சமாஜத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இங்கிலாந்தில் சிவில் சர்வீஸ் பயிற்சியின்போதும் பிரம்ம சமாஜத்தின் கொள்கைகளை தீவிரமாக பரப்பினார். இந்தியாவுக்கு வந்த பிறகு பம்பாய் மாகாணத்தில் உதவி மாஜிஸ்ட்ரேட்டாக தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர், அகமதாபாதின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.
சிவில் சர்வீஸின் தந்தை (காரன்வாலிஸ்)
- சார்லஸ் காரன்வாலிஸ் (டிசம்பர் 31, 1738 - அக்டோபர் 5, 1805) ஒரு ஆங்கிலேய ராணுவத் தளபதி. இந்தியாவில் அவருடைய பதவிக்காலத்தில் (1786 - 1793) மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தங்களின் காரணமாக காரன்வாலிஸ் இந்திய சிவில் சர்வீஸின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவரது முயற்சிகள் இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நவீனமயமாக காரணமாக அமைந்தது. காரன்வாலிஸ் இந்தியாவில் வருவாய் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகள் உருவாவதற்கான பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது சீரிய முயற்சியால் இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) உருவானது. இந்தியன் சிவில் சர்வீஸ் தற்போது இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) என அழைக்கப்படுகிறது.
சிவில் சர்வீஸஸ் மற்றும் யுபிஎஸ்சி உருவான வரலாறு
- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) என அறியப்படும் இந்த அமைப்பானது, இந்தியாவில் மிக முக்கியமாக மதிக்கப்படும் அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவுக்கான ஆட்சியாளர்களைத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து இந்தியாவை வலிமையாக கட்டமைப்பதில் இந்த அமைப்பு மிக முக்கிய பங்காற்றுகிறது. அனைத்திந்திய சேவைகளுக்கான அதிகாரிகள், மத்திய அரசுப் பணிக்கான அதிகாரிகள் மற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி சேவைகளுக்கான அதிகாரிகளை யுபிஎஸ்சி கடுமையான தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது. இந்தியாவுக்கான அதிகாரிகளை உருவாக்குவதில் யுபிஎஸ்சி மிக முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், யுபிஎஸ்சி எப்படி உருவானது? எப்போது இந்த அமைப்பு இத்தகைய மதிப்பு மிக்க நிலையை அடைந்தது? இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் உருவானதற்கான வரலாறு என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி
1854 ஆம் ஆண்டுக்கு முன்பு
- கிழக்கிந்திய கம்பெனிக்கான சிவில் சர்வீஸ் அதிகாரிகள் அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு லண்டனில் உள்ள ஹேலிபரி கல்லூரியில் பயிற்சியளிக்கப்பட்டது.
1854
- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் தேடுதல் குழுவிடம் லார்டு மெக்காலே சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மெரிட் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான அறிக்கையை அறிமுகம் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் லண்டனில் சிவில் சர்வீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.
1855
- முதல் முறையாக போட்டித் தேர்வுகளை சிவில் சர்வீஸ் கமிஷன் லண்டனில் நடத்தியது. இந்தத் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 எனவும், குறைந்தபட்ச வயது வரம்பு 18 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் இந்தியர்கள் யாரும் தேர்ச்சி பெற முடியாத வகையில் ஐரோப்பிய கலாசாரங்கள் குறித்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி
1861
- லார்டு கேனிங் 1861 ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் சட்டத்தை இயற்றினார். இந்திய சிவில் சர்வீஸ் சட்டம், 1861 இந்திய குடிமகனாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளவர்களை சிவில் சர்வீஸின் சில பதவிகளுக்கு தகுதியானவர்களாக்கியது.
1864
- சத்யேந்திரநாத் தாகூர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியராக மாறினார்.
- 1866: சிவில் சர்வீஸஸ், இம்பீரியல் சிவில் சர்வீஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், இந்தியன் சிவில் சர்வீஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1870
- இந்திய சிவில் சர்வீஸ் சட்டம், 1870 இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, தகுதி மற்றும் மெரிட் அடிப்படையில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இந்தியர்கள் பதவி வகிக்கலாம். இந்த சட்டத்திற்கு இந்திய சிவில் சர்வீஸ் சட்டம், 1861 தடையாக இருக்காது.
1886
- இந்திய சிவில் சர்வீஸில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக வைசிராய் லார்டு டஃப்ரின், அய்ட்சிசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்தமற்ற சிவில் சர்வீஸுக்குப் பதிலாக இம்பீரியல், மாகாணங்கள் மற்றும் துணை சிவில் சர்வீஸ் என மாற்றம் செய்ய பரிந்துரைத்தது. உள்ளூர் சிவில் சர்வீஸ் பணியிடங்களில் அதிக அளவில் இந்தியர்கள் இடம்பெற வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
1912
- இந்தியன் சிவில் சர்வீஸில் 25 சதவிகித உயர் பதவிகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இஸ்லிங்டன் குழு பரிந்துரைத்தது. அதேபோல சிவில் சர்வீஸ் அதிகாரிகளை பணியமர்த்தும் நடைமுறை லண்டனிலும், இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியது.
1917
- இந்தியர்களின் பங்களிப்பு அரசின் அனைத்து துறைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டுமென லார்டு மாண்டேகு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆலோசனையை முன்வைத்தார்.
1918
- பிடிட்டிஷ் சிவில் சர்வீஸுக்கு 33 சதவிகித இந்தியர்களை பணியமர்த்துவதற்கு லார்டு மாண்டேகு மற்றும் லார்டு செம்ஸ்ஃபோர்டு ஆதரவு தெரிவித்தனர். இந்த சதவிகிதம் ஆண்டுதோறும் 1.5 சதவிகிதம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
1919
- மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது. மேலும், இம்பீரியல் சர்வீஸ் என்பது அனைத்திந்திய சேவைகள் (ஆல் இந்தியா சர்வீஸஸ்) என மாற்றம் செய்யப்பட்டது.
1922
- இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகள் இங்கிலாந்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் நடைபெறத் தொடங்கியது. மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.
1923
- இந்திய சிவில் சர்வீஸ் பணிகளில் இந்தியர்கள் இடம்பெறுவதை மேலும் உறுதி செய்ய, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 40 சதவிகிதம் பிரிட்டிஷ்காரர்களும், 40 சதவிகிதம் இந்தியர்களும், மாகாணங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து 20 சதவிகிதம் இந்திய சிவில் சர்வீஸ்களில் ஈடுபட லீ கமிஷன் பரிந்துரை செய்தது.
1926
- இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது. சர் ரோஸ் பார்க்கர் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1935
- இந்திய அரசாங்க சட்டம், 1935-ன் படி அனைத்திந்தியப் பணிகளுக்கு கீழ் இந்தியன் சிவில் சர்வீஸ், இந்தியன் போலீஸ் சர்வீஸ் மற்றும் இந்தியன் மெடிக்கல் சர்வீஸ் மட்டுமே இடம்பெற்றது. மற்ற சேவைகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கின. இந்த சட்டம் ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கியது.
சுதந்திரத்துக்குப் பிறகு
1950
- அரசியலைப்பு விதி 378 பிரிவு 1-ன் படி ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1951
- சிவில் சர்வீஸ் பணியமர்த்தலை ஒழுங்குபடுத்தவும், அதற்கான வரையறைகளை உருவாக்கவும் அனைத்திந்திய சேவைகள் சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
1966
- அனைத்திந்திய சேவைகள் சட்டத்தின் கீழ் இந்திய வனத்துறை சேவை (ஐஎஃப்எஸ்) உருவாக்கப்பட்டது.
1976
- கோத்தாரிக் குழு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மூன்று கட்டங்களை பரிந்துரைத்தது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டத் தேர்வுகள் பரிந்துரைக்கப்பட்டது.
1989
- எழுத்துத் தேர்வுகளில் (முதன்மைத் தேர்வு) கட்டுரை எழுதும் பகுதி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சதீஷ் சந்திரா தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. மேலும், நேர்காணலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
2004
- முதல்நிலைத் தேர்வில் திறனறித் தேர்வு (ஆப்டிடியூடு தேர்வு) அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென ஹோட்டா குழு பரிந்துரைத்தது.
2013
- இந்திய வனத்துறை சேவைக்கான தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வு போன்றே வடிவமைக்கப்பட்டது.
நன்றி: தினமணி (23 – 03 – 2024)