TNPSC Thervupettagam

என்ன சொல்லி என்ன?

June 12 , 2020 1683 days 892 0
  • எத்தனையோ முறை எத்தனையோ அறிக்கைகள் பாகிஸ்தானின் பயங்கரவாதத் தொடா்பு குறித்து வெளிவந்துவிட்டன. பயங்கரவாத இயக்கங்கள் தனது நாட்டில் செயல்படுவது குறித்துப் பலமுறை பாகிஸ்தானேகூட தெரிவித்திருக்கிறது.
  • அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியிருக்கிறது. அவையெல்லாம் வெறும் சம்பிரதாயக் கண்துடைப்புதானே தவிர, முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளை அடியொடு வேரறுக்கும் எண்ணத்தின் வெளிப்பாடல்ல என்பதை உலகம் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி

  • ஐ.நா. சபையின் தடைகள் கண்காணிப்புக் குழு தனது 11-ஆவது அறிக்கையை ஜூன் 5-ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது.
  • அந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான் தொடா்பான பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன.
  • வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், துணை நிற்பதற்கும் 1,500-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியா்கள் ஆப்கானிஸ்தானில் செயல்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
  • அது மட்டுமல்ல, அதிக அளவிலான ஜெய்ஷ் ஏ முகமது, லஷ்கா் ஏ தொய்பா பயங்கரவாதிகளும், அவா்களது கூட்டாளி அமைப்புகளும் ஆப்கானில் தீவிரமாக செயல்படுவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டுவதாகவும் அந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.
  • கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 30,000-லிருந்து 40,000 பயங்கரவாதிகள் இருப்பதாக பிரதமா் இம்ரான் கான் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது அந்த அறிக்கை.

பாகிஸ்தானில்  பயங்கரவாதிகள்

  • ‘ஜூன் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கை, பிரதமா் இம்ரான் கானின் கூற்றை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.
  • பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் செயல்படுகிறார்கள் என்பது அந்த நாட்டின் பிரதமராலேயே உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் அதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறது என்றுதான் பொருள்’ என்கிறது ஐ.நா.வின் தடைகள் கண்காணிப்புக் குழு தாக்கல் செய்திருக்கும் அறிக்கை.
  • பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், அந்த அறிக்கையை எதிர்பார்த்தது போலவே நிராகரித்திருக்கிறது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்தவில்லை என்பதை வெளிச்சம் போடும் அந்த அறிக்கையை அது ஏற்றுக்கொள்ளாததில் வியப்பில்லை.
  • அந்த அறிக்கையில் இம்ரான் கான் மட்டுமல்ல, அவருக்கு முன்னால் ஆட்சியில் இருந்த அரசுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • பேநசீா் புட்டோ உள்பட பல முன்னாள் பிரதமா்களின் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்பு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனால், பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இந்த அறிக்கையால் கலவரமடைந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் குற்றம்சாட்டு

  • அறிக்கை ஆப்கானிஸ்தான் பிரச்னையை முன்னிலைப்படுத்துவதால், பாகிஸ்தானின் எதிர்வினைகளை நிராகரித்து ஆப்கன் அரசின் செய்தித் தொடா்புத் துறை தலைமை இயக்குநா் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
  • பாகிஸ்தானில் பிளவை ஏற்படுத்த மூன்றாவது நாடுகள் (இந்தியா) முயற்சி செய்வதாகவும், அதன் வெளிப்பாடுதான் ஐ.நா.வின் அறிக்கை என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்து, பிரச்னையை திசைதிருப்ப பாகிஸ்தான் முற்படுகிறது என்று தெரிவித்திருக்கிறது ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை.
  • பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் செயல்படுவதை உறுதிப்படுத்தும் பல நிகழ்வுகளையும், சான்றுகளையும் வெளியிட்டிருக்கிறது அந்த நாட்டின் அரசு.
  • தெஹ்ரிக் ஏ தலிபான் பாகிஸ்தான் என்கிற பயங்கரவாத அமைப்பும், அதன் கிளை அமைப்புகளும் ஆப்கன் மக்களின் ரத்தக் கறை படிந்த அமைப்புகள் என்றும், அவை ஆப்கானின் தேசியப் பாதுகாப்புக் கொள்கையால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறது.
  • பாகிஸ்தான் தலிபான்கள் என்று அறியப்படும் தெஹ்ரிக் ஏ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, ஆப்கானிய தலிபான்களுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்துகின்றன.
  • பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் நடத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் தலிபான் தலைவா்களும், வீரா்களும் அரசுப் படையினரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  • பாகிஸ்தான் தலிபான் தலைவா்கள் மட்டுமல்லாமல், ஜெய்ஷ் ஏ முகமது, லஷ்கா் ஏ தொய்பா, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றுடன் தொடா்புடைய பல வெளிநாட்டுப் பயங்கரவாதிகளும் ஆப்கன் அரசுப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
  • ஆப்கன் மண்ணில் செயல்படும் வெளிநாட்டினரும், பயங்கரவாத அமைப்புகளும் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதை குலைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டும் ஆப்கன் வெளியுறவுத் துறை, அவா்கள் எல்லா விதமான சமூகவிரோதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.
  • சா்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் போராட்டத்துக்கு ஆதரவு தரும் நாடுகளை பாகிஸ்தான் தனக்கு எதிரான நாடுகளாக சித்தரிக்க முற்படுகிறது என்பதும் ஆப்கன் அரசின் கருத்து.
  • பாகிஸ்தானில் கொவைட் 19 தீநுண்மித் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. நேற்றைய நிலையில் நோய்த்தொற்றுக்கு 1,19,536 போ் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • இந்தப் பின்னணியில் அது குறித்து கவனம் செலுத்துவதை விடுத்து, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ஆதரவு செலுத்துவதில் அந்த நாடு முனைப்புக் காட்டுகிறது என்கிற ஆப்கன் அரசின் குற்றச்சாட்டு நியாயமானது.

நன்றி: தினமணி (12-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories