TNPSC Thervupettagam

என்ன நினைக்கிறது உலகம்? - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை

November 12 , 2019 1894 days 996 0
  • இங்கிலாந்து அரசாங்கம் நீரியல் துளையிடல் (Fracking - மீத்தேன் போன்ற எரிவாயு எடுக்கும் தொழில்நுட்ப முறை) முறையைத் தடைசெய்துள்ளது.
  • நீரியல் துளையிடல் என்பது நீர், வேதிப்பொருள், மணல் போன்றவற்றைக் கொண்டு தரைக்குக் கீழ் உள்ள பாறையைப் பிளக்கச்செய்தோ துளையிட்டோ அதன் கீழ் உள்ள எண்ணெய், எரிவாயு போன்றவற்றை எடுக்கும் முறையாகும்.

இங்கிலாந்து அரசு – தடை

  • இங்கிலாந்து அரசின் இந்தத் தடை சூழலியலாளர்களுக்கும் சமூகக் குழு செயல்பாட்டாளர்களுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. அமைச்சர்களும் ஷேல்வாயு நிறுவனங்களை இனி ஆதரிக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.
  • படிவ எரிபொருள் துறையில் புதிய பாதைகளுள் ஒன்றான நீரியல் துளையிடல் மூலம் பெரும் லாபம் ஈட்டலாம் என்று எதிர்பார்த்திருந்த நிறுவனங்களுக்கு இது பலத்த அடி.

நீரியல் துளையிடல்

  • நீரியல் துளையிடல் நடைபெறும் இடங்களுக்கருகே வசிப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்ட புதிய அறிவியல் ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
  • நீரியல் துளையிடல் பாதுகாப்பானது என்பதற்கு மறுக்க முடியாத, புதிய சான்றுகள் தந்தால் மட்டுமே எதிர்காலத்தில் நீரியல் துளையிடல் அனுமதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு குறிப்பிட்டுள்ளது.
  • இந்தத் தடையானது பிரிட்டனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு பெரும் குட்டிக்கரணம். பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்பு நீரியல் துளையிடலை ‘மனித குலத்துக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம்’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘ஷேல்வாயு தேடலில் எதையும் மிச்சம் வைக்க வேண்டாம்’ என்று முன்பு அறைகூவல் விடுத்திருந்தார்.

படிவ அகழ்வு

  • சர்ச்சைக்குரிய இந்தப் படிவ அகழ்வுக்கு எதிராகப் பத்தாண்டு காலமாகப் போராடிவரும் பசுமைக் குழுக்களும் பிரச்சாரகர்களும் இந்தத் தடையை வரவேற்றிருக்கிறார்கள்.
  • “கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக நாடெங்கும் உள்ள உள்ளூர் மக்கள் இந்த சக்தி வாய்ந்த தொழில் துறைக்கு எதிராக டேவிட்-கோலியாத் யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.
  • இந்தப் போராட்டத்தில் ஒரு பங்கு வகித்ததில் நாங்கள் பெருமைகொள்கிறோம்” என்று ‘பூமியின் நண்பர்கள்’ அமைப்பின் தலைமைச் செயலர்w க்ரெய்க் பென்னட் தெரிவித்திருக்கிறார்.
  • பிரிட்டன் பசுமைப் பொருளாதாரத்துக்கு மாறுவதற்கான பெரும் மறுஆய்வுத் திட்டங்களைப் பற்றி அரசு தெரிவித்திருக்கிறது. கார்பன் சமநிலை பொருளாதாரத்தைக் கொண்டுவருவது எப்படி என்பதை அரசுக் கருவூலம் ஆய்வுசெய்யும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

  • “எதிர்காலத் தலைமுறைகளுக்காக நாம் இந்த பூமியைக் காப்பதில் அனைவரும் பங்காற்ற வேண்டும்” என்கிறார் அரசுக் கருவூலத்தின் தலைவர் சாஜித் ஜாவிட். நீரியல் துளையிடல் தொழில்நுட்பம் அமெரிக்க எரிசக்தித் துறையையே கடந்த பத்தாண்டுகளில் பெருமளவில் மாற்றியமைத்திருக்கிறது. அங்கே ஒவ்வொரு கிணற்றுக்கும் 15 லட்சம் கேலன் தண்ணீர் செலவிடப்படுகிறது.
  • பிரிட்டனில் லங்காஷையரில் கடந்த ஆண்டு குவாட்ரில்லா நிறுவனத்தின் நீரியல் துளையிடல் பணிகளை மேற்கொண்டிருந்தது. அப்போது சிறுசிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து தடுத்துநிறுத்தப்பட்டன.
  • நீரியல் துளையிடலுக்காக அரசு வைத்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் சட்டபூர்வமாகச் செல்லாது என்று 2019-ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீரியல் துளையிடலுக்கு எதிராக உள்ள அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நன்றி: இந்து தமிழ் திசை  (12-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories