TNPSC Thervupettagam

என்ன நினைக்கிறது உலகம்? - மூழ்குகிறதா வெனிஸ்?

November 25 , 2019 1880 days 1488 0
  • நீர்மட்டம் அதிகரிப்பு என்பது இத்தாலிய நகரமான வெனிஸில் ஆண்டுதோறும் நிகழக்கூடியதே. வழக்கமாக வெனிஸ் நகரவாசிகளும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய நகரம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வெனிஸ் நகரத்துக்குக் குளிர்காலத்தில் வருகை தருபவர்களும் கால்வாய்க் கரைகளைத் தாண்டி நீர் ததும்புவதையும் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தின் சாக்கடைகள் குமிழிடுவதையும் கண்டிருப்பார்கள்.
  • ஆனால், இந்த ஆண்டு அந்தச் சதுக்கம் முழுவதும் நீரின் அடியில் சென்றுவிட்டது. இது 50 ஆண்டுகளில் மிக மோசமான வெள்ளமாகும். வெனிஸின் 85% பகுதிகளை நீர் சூழ்ந்திருக்கிறது. நெருக்கடிநிலையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல்

  • வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடலுக்கு அடியில் நகரும் தடுப்புகள் நீண்ட காலமாகக் கட்டப்பட்டுவந்தன. இந்தப் பணியை விரைந்து முடிக்க வெனிஸ் மேயர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்துக்கு அதீதமான காற்று, மிகுந்த கன மழை, தாழ்வான நில மட்டம், உயரும் கடல் மட்டம் போன்றவை காரணங்கள்.
  • இவை யாவும் பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடையவையே. “புவியை எந்த அளவுக்கு நாம் சூடாக்குகிறோமோ அந்த அளவுக்கு மிக அதிகமான கனமழை இருக்கும்; அந்த அளவுக்குக் கடல் மட்டமும் அதிகமாக உயரும்” என்கிறார் பருவநிலை ஆய்வாளரான ஆண்டெர்ஸ் லீவர்மன்.
  • கடந்த 1,200 ஆண்டுகளில் செய்ன்ட் மார்க் பேராலயத்தை ஆறு முறை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை சூழ்ந்திருக்கிறது. எதிர்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று லீவர்மன் கூறுகிறார்.

வெனிஸ் நகரம்

  • 2100-க்குள் வெனிஸ் நகரம் நீருக்கு அடியில் சென்றுவிடும் என்று கணிக்கப்படுகிறது. வெனிஸ் என்றில்லை; ஹாம்பர்க், ஷாங்காய், ஹாங்காங், நியூயார்க் போன்ற பெரிய கடற்கரை நகரங்களின் பெரும்பான்மையான இடங்கள் நீரின் அடியில் செல்ல வாய்ப்பிருப்பதால் அதற்கேற்ற வகையில் அந்த நகரங்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
  • “கடல் மட்டம் உயர்வதைத் தடுப்பதற்கு ஒரே வழி நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற வற்றை எரிப்பதை நிறுத்துவதே” என்கிறார் லீவர்மன். பருவநிலை மாற்றம் என்பது புரளி என்று சொல்பவர்களுக்கு இது ஏதோ அர்த்த மில்லாத எச்சரிக்கைபோல் தோன்றலாம்.
  • ஆனால், பருவநிலை நெருக்கடியின் நடுவே நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகளின் வெள்ளத்தில் இப்போது வெனிஸும் சேர்ந்திருப்பதால் உடனடியான, ஒருமித்த செயல்பாடு தேவைப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (25-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories