TNPSC Thervupettagam

என்னதான் இழப்பீடு?

June 16 , 2020 1679 days 858 0
  • ஒட்டுமொத்த உலகமும் கொவைட் 19 தீநுண்மித் தொற்று அச்சத்தில் உறைந்து கிடக்கும் நிலையில், பல நிகழ்வுகளும் செய்திகளும் முக்கியத்துவம் இழந்து கவனத்துக்கே வருவதில்லை.
  • அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய்க் கிணறு விபத்து குறித்த செய்தி கவனம் பெறாமல் போனதில் வியப்படைய ஒன்றுமில்லை.
  • ஆனால், அதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பும் ஈடுகட்ட முடியாதவை என்பதை நாம் உணர வேண்டும்.

எண்ணெய்க் கிணறு விபத்து

  • கடந்த பல ஆண்டுகளாக ஆயில் இந்தியா நிறுவனம் அஸ்ஸாம் மாநிலத்தில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதிலும், எண்ணெய் எடுப்பதிலும் ஈடுபட்டு வருகிறது.
  • அப்படி இருந்தும், பாக்ஜன் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட தீ விபத்தை அந்த நிறுவனத்தால் தடுக்க முடியவில்லை என்பது, எந்த அளவுக்கு அந்த நிறுவனம் முன்னெச்சரிக்கை இல்லாமலும், மெத்தனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
  • கடந்த மே மாதம் 27-ஆம் தேதி எண்ணெய்க் கிணற்றிலிருந்து வெளியாகும் கச்சா எண்ணெயில் கசிவு வெளிப்பட்டிருக்கிறது.
  • ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பத் தோ்ச்சி அதிகாரிகளுக்கு இருக்கவில்லை.
  • வேறு வழியில்லாமல் வெளிநாட்டிலிருந்து வல்லுநா்கள் அழைக்கப்பட்டனா். சிங்கப்பூரிலிருந்து வந்த வல்லுநா்கள் அஸ்ஸாம் மாநிலம் வந்து சேரும்போது ஜூன் மாதம் 8-ஆம் தேதியாகிவிட்டது.
  • அவா்கள் எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனா். இரண்டு நாள்கள் கழித்து, அதாவது கசிவு கண்டறியப்பட்டு 14 நாள்கள் கழித்து, பாக்ஜனின் 5-ஆம் எண் எண்ணெய்க் கிணறு தீப்பிடித்துக் கொண்டது.
  • உடனடியாக அந்தப் பகுதியில் வாழும் 1,600 குடும்பங்கள் அவசரகதியில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இப்போது சுமார் 7,000 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தடுப்பதில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினரில் இரண்டு போ் உயிரிழந்திருக்கிறார்கள். அவா்களில் ஒருவா் தேசிய கால்பந்தாட்ட வீரா் என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

வெளிச்சத்திற்கு வருகிறது

  • அஸ்ஸாமிலுள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளில் இதுபோலக் கசிவுகள் ஏற்படுவதும், அவற்றில் தீ விபத்துகள் நேரிடுவதும் புதிதொன்றுமல்ல.
  • 2005-இல் திப்ரூகரிலுள்ள டைகாம் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தை 45 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகுதான் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
  • சிவசாகா் மாவட்டத்திலுள்ள இன்னொரு எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தைக் கட்டுப்படுத்த மூன்று மாதங்களாகின.
  • இப்போது தின்சுகியா தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
  • அதன் காரணம் என்ன என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும். இரண்டு அதிகாரிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவா்கள் பலிகடாவாக்கப்படலாம் அல்லது மக்களின் கவனம் திசைதிருப்பியதும் மீண்டும் வேலையில் சோ்த்துக் கொள்ளப்படலாம்.
  • ஒன்று மட்டும் தெளிவாகவே தெரிகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்யும் அரசு நிறுவனமான ஆயில் இந்தியாவிடம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, தொழில்நுட்ப வல்லுநா்களோ, பேரிடா் மேலாண்மைத் திட்டமோ கிடையாது என்பதை இந்த விபத்துகள் வெளிச்சம் போடுகின்றன.

இழப்புகள் ஏராளம்

  • தின்சுகியா மாவட்டம் பாக்ஜன் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து, இருவா் உயிரிழந்ததுடன் நின்றுவிடவில்லை.
  • மகூரி - மோட்டாபங்க் சதுப்பு நிலங்கள் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து 500 மீட்டா் தொலைவில்தான் இருக்கின்றன. 1996-இல் பறவைகள் சரணாலயமாகவும், பல்லுயிர்ப் பெருக்க மையமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்தச் சதுப்பு நிலங்களையும், அதிலுள்ள நீா்த் தேக்கங்களையும் பாதித்திருக்கிறது பாக்ஜன் எண்ணெய்க் கிணறு விபத்து.
  • அந்தச் சதுப்பு நிலப் பகுதி வழியாக திப்ரு நதி பாய்கிறது. ஆண்டுதோறும் 80 ரக மீன் இனங்களும் 300-க்கும் அதிகமான பறவை இனங்களும் இனப்பெருக்கத்துக்காக அந்தச் சதுப்பு நிலங்களுக்கு வருகின்றன.
  • விபத்தைத் தொடா்ந்து, திப்ரு நதியில் ஆயிரக்கணக்கான மீன்களும் டால்பின்களும் செத்து மிதந்த அவலத்தை யாரிடம் போய்ச் சொல்வது?
  • மகூரி - மோட்டாபங்க் சதுப்பு நிலங்கள் மட்டுமல்ல, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 800 மீட்டா் தொலைவில் 340 ச.கி.மீ. பரப்புள்ள திப்ரு - சைக்கோவா தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த தேசியப் பூங்கா முழுவதையும் அனலும், புகையும், எண்ணெயிலிருந்து வெளிவரும் ரசாயனங்களும் தாக்கி அத்தனை மரங்களும் வாடிவிட்டன. அவையெல்லாம் மீண்டும் உயிர்ப்புப் பெறுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.
  • பொதுவாகவே இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகளின்போது அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்கு நிறுவனங்கள் தண்டிக்கப்படுவதில்லை.

நன்றி: தினமணி (16-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories