TNPSC Thervupettagam

என்னவாகிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை

September 22 , 2023 461 days 321 0
  • எந்த ஒரு சமூகமும் கால ஓட்டத்தில், நாகரிக வளர்ச்சிக்கு ஏற்பப் புதிய மாற்றங்களை எதிர்கொள்கிறது. அறிவை மையமாகக் கொண்டு, ஆக்கபூர்வ வளர்ச்சியை முன்னெடுக்கும் எந்த ஒரு சமூகமும் அடுத்துவரும் தலைமுறையை விமர்சிக்காமல் இருப்பது சாத்தியமில்லை. ஓர் எடுத்துக்காட்டுக்கு இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் ஆதர்சங்களாக, முன்மாதிரிகளாக இருக்கும் அம்சங்கள், நபர்கள் யார் என்று யோசிக்கலாம். உலகில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டு இளைஞர்களில் பெரும்பாலோர் செய்ய விரும்புவது என்ன அல்லது யாரை அவர்கள் பின்தொடர்கிறார்கள்?
  • இன்றைய வெகுமக்கள் திரளில் உள்ள இளைஞர் கூட்டத்தின் ஆதர்சமாகப் பெரிய ஆளுமைகளோ, மனித குலத்தை முன்னேற்றியவர்களோ முதன்மை இடத்தைப் பெற்றிருக்கவில்லை. தாறுமாறாக பைக் ஓட்டுபவர்கள், அடுத்தவரைத் தொந்தரவு செய்து காட்சிப்படுத்தும் பிராங்க்ஸ்டர்கள்’, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக இன்ஸ்டகிராமில் ரீல்ஸ்போடுபவர்கள் போன்றவர்களே இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கிறார்கள்.

இலக்கற்ற முன்னுதாரணங்கள்

  • வட இந்தியாவில் சமூக ஊடகப் பிரபலமாக இருக்கும் உர்பி ஜாவேத் எனும் இளம்பெண், யாரும் யோசிக்க முடியாத வகையில் உடலைக் காட்சிப்படுத்தும் ஆபாச உடைகளை அணிவதற்காக அடையாளம் பெற்றவர். சுருக்கமாக, காண்பவரிடம் அதிர்ச்சி மதிப்பீட்டை ஏற்படுத்தி தொடர்ச்சியாகக் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப நினைப்பவர். அதேபோல், போலி ஆண்மையின் வெளிப்பாடுகளில் ஒன்றான அதிவேகமாக பைக் ஓட்டும் டிடிஎஃப் வாசன், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே - குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் - பிரபலமாக இருக்கிறார்.
  • ஒருவர் வளர்ந்து அடையாளம் பெறுவதற்கு முன் பதின்வயதில் தான் யார் என்கிற அடையாளச் சிக்கல் எழும். அந்த நிலையில் கலை, இலக்கியம், பொழுதுபோக்கு என எந்தத் துறையில் வேண்டுமானாலும் ஒருவர் அடையாளம் தேட முயலலாம். பிரக்ஞானந்தா, குகேஷ், லிடியன் நாதஸ்வரம் போன்ற சிறந்த முன்னுதாரணங்கள் நம்மிடையே உண்டு. ஆனால், பெரும்பான்மை இளைஞர்களின் ஆதர்சமாக டிடிஎஃப் வாசன்களே இருக்கிறார்கள் என்பதுதான் துயரம்.
  • இப்படி இவர்கள் நடந்துகொள்வதற்கு வயதுக்கேற்ற ஆற்றல் பயன்படுத்தப்படாமல் இருப்பது, உடல்-மன வளர்ச்சிக் கட்டத்தில் ஏற்படும் குழப்பம் போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே, இவற்றைச் சற்று முறைப்படுத்துங்கள் என்று யாராவது இவர்களிடம் கூறினால், உடனே அவர்களை பூமர் அங்கிள்/ஆன்ட்டி என்று கூறிப் புறங்கையால் ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் தான்தோன்றித்தனமாக எதைச் செய்துகொண்டிருக்கிறார்களோ, அதையே தொடர்கிறார்கள்.
  • சமூகத்தில் வாழ்வதற்குச் சில அடிப்படை விதிமுறைகளை மனிதகுலம் எல்லா காலமும் கடைப்பிடித்தே வந்திருக்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப அந்த விதிமுறைகள் மாறி-வளர்ச்சி அடைந்து வந்தாலும்கூட அவை அனைவருக்கும் பொதுவானவையாகவும், பெரும்பாலோரைத் தொந்தரவு செய்யாதவையாகவும் இருந்துவருகின்றன. ஆனால், அப்படி எதையும் கடைப்பிடிக்கத் தேவையில்லை. எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு உடை என்பது இந்த ஜென் இசட்’ / ஸூமர் தலைமுறையினரின் வழக்கமாக இருக்கிறது.

எல்லாமே ஃபன்தான்

  • இந்தத் தலைமுறையினர் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு வாசன் பைக்கில் சென்று விழுந்து கையை உடைத்துக்கொண்டது குறித்து வெளியான காணொளிகள் சான்று பகர்கின்றன. வாசனுடன் இன்னொரு பைக்கில் சென்ற நண்பர் அஸீஸ், வாசன் விபத்தில் சிக்கிய பிறகு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் மருந்துக்குக்கூட எந்த உணர்வையும் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோலத்தான் அவருடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஃபன்னாகக் கிளம்பினோம். இப்போ கொஞ்சம் வருத்தமாக இருக்கு.
  • வாசன் குணமடைய ப்ரே பண்ணுங்கஎன்கிறார். அதே நேரம், வாசன் ஒரு பெரிய நட்சத்திரம் போலவும், அவருக்கு என்ன நடக்கிறது என்கிற அப்டேட்டை உங்கள் அனைவருக்கும் நான் அவசியம் சொல்லிவிடுவேன் என மறுபடி மறுபடி உறுதிப்படுத்துவதில்தான் அவருடைய கவனம் முழுக்கவுமே இருக்கிறது. வாசனும் அஸீஸும் ஏன் இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தைத் தொடங்கினார்கள் என்பது குறித்தும் சில காணொளிகள் உள்ளன.
  • மும்பை போகலாமேன்னு நண்பன் அஸீஸ் கேட்டான், அங்க காமாத்திபுரா என்கிற பகுதி இருக்கிறது என்று சொன்னான். உடனே நைட்டே கிளம்பிட்டோம்’. அவருடைய பேச்சை இடைமறித்த நண்பர், ‘நானெல்லாம் வியட்நாம், தாய்லாந்து நைட் லைஃபே பார்த்தவன். நண்பனுக்கு பாஸ்போர்ட் இல்லை என்பதால், மும்பைக்குப் போறோம்என்கிறார். இதெல்லாம் சீரியஸ் இல்லை, சும்மா ஃபன் தாங்கஎன்று வாசன் அந்தப் பேச்சுக்கு ஒரு டிஸ்கிளைமர்போட்டு, அந்தக் கேவலமான பேச்சை மிகச் சாதாரணமாகக் கடந்துவிடுகிறார்.
  • இப்படிப் பயணத்தின் தொடக்கத்திலும், விபத்துக்கு ஆளான பிறகும், வாசன் இறந்துவிட்டதாகப் போலிச் செய்தி பரப்பாதீர்கள் எனச் சொல்லும் சில காணொளிகளிலும் இயல்பான மனித உணர்வுகள் எதையுமே இவர்களிடம் பார்க்க முடியவில்லை. மீறி ஏதாவது உணர்வு தென்பட்டால், அது அப்பட்டமான போலியாக இருக்கிறது. இவர்களுக்கு அதிவேகமாக பைக்கில் போவதும், போவோர்-வருவோர் அதிர்ந்துபோய் தங்களைப் பார்ப்பதும், மற்ற இளைஞர்கள் வாயைப் பிளந்து ஆச்சரியமாகப் பார்ப்பதும், ஏன் விபத்தில் கை உடைவதும்கூட ஃபன்’, ‘ஃபன்’, ‘ஃபன்ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லை.

வன்முறை எனும் மூலப்பொருள்

  • சமூக ஊடகத்தில் சமீபத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த விஷயம், இந்தத் தலைமுறையினரின் உணர்வற்ற, மரத்துப்போன தன்மை குறித்து இன்னும் அதிர்ச்சிகரமான விஷயங்களைப் புரியவைக்கிறது. மனிதரை மனிதர் அடித்துக் கொல்லும் பப்ஜிபோன்ற கேம்களை இந்தத் தலைமுறையினர் நாள்தோறும் விளையாடுகிறார்கள். இப்படி விளையாடும் பழக்கமுள்ள ஓர் இளைஞர், அப்பா-அம்மாவுடன் விபத்தில் சிக்கிவிட்டார். நல்ல வேளையாக யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் இல்லை.
  • ஆனால், அந்த இளைஞர் விபத்தின் காரணமாக எந்த அதிர்ச்சியையும் அடையவில்லை. மேலும், அப்பாவும் அம்மாவும் காயமடைந்ததைப் பார்த்து, ‘அவ்வளவுதானா, இதைவிடப் பெரிய காயம் ஏதும் இல்லையா?’ எனக் கேட்டுள்ளார். அதன் பிறகு, அந்த இளைஞர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.
  • சமீப ஆண்டுகளில் முன்னணி நடிகர்கள் நடித்து, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்கி, தமிழ்நாடே கொண்டாடிய திரைப்படங்கள் வன்முறையை அடிப்படை மூலப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. திரையில் வன்முறையைக் கொண்டாடும் இந்த நோய்க்கூறு டீசர், டிரெய்லர், சுவரொட்டி, இணையச் சுவரொட்டிகள் வரை அதிவேகமாகப் பரவிவருகிறது.
  • மற்றொருபுறம் வாசனின் விபத்துக்குப் பின்னர் சமூக ஊடகங்களில் அவரை ஆதரிக்கும் இளைஞர்களின் வாதங்கள், இன்னொரு விபத்தில் மேற்கண்ட இளைஞர் வெளிப்படுத்திய எதிர்வினை, திரைப்படங்களில் பதற வைக்கும் வன்முறையை மக்கள் சிரித்துக் கொண்டாடுவது போன்ற அம்சங்கள் எல்லாம் உணர்த்துபவை ஒன்றைத்தான். நாம் மனித குணங்களை, சுரணையை அதிவேகமாக இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அது.

இயல்பைத் தொலைத்த பெண்கள்

  • வன்முறை, அதிவேகம், அதிர்ச்சி மதிப்பீடு போன்றவற்றை டிரெண்ட் ஆக்கவும், அவற்றை எப்படி விற்கலாம், அவற்றின் மூலம் எப்படி லாபம் பார்க்கலாம் என்பதே இக்கால இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் தங்கள் துறைகளில் எந்தப் புதுமையையும், சாதனையையும், முன்னகர்வையும் செய்யவில்லை.
  • சமூக ஊடகங்களில் இயல்புக்கு மாறாக எதையாவது சலம்பிக்கொண்டு திரிந்தாலே போதும். லட்சம் லட்சமாகப் பின்தொடர்பவர்கள் இவர்களுக்கு உருவாகிவிடுகிறார்கள். பொதுவாகவே, பிரச்சினைகளைக் கண்டறிந்து கையாளத் தெரிந்த, புதியனவற்றைப் படைக்கக்கூடிய, யாரையும் தொந்தரவுக்கு உள்ளாக்கக் கூடாது என்கிற உணர்வை இயல்பிலேயே பெற்ற பெண்கள்கூட, இது போன்ற நபர்களை அங்கீகரித்து ஆராதிக்கிறார்கள்.
  • வாசன் மட்டுமில்லாமல், பொதுவாகவே வேகமாக பைக் ஓட்டும் இளைஞர்களின் அம்மாக்கள், பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்லும் தங்கைகள், தோழிகள் இந்த இளைஞர்களை உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார்கள் அல்லது தாங்களே அந்த சாதனைகளைச் செய்துவிட்டதுபோன்ற போலிப் பெருமிதமும் கொள்கிறார்கள்.
  • இதெல்லாம் முட்டாள்தனமானது, சட்டத்துக்குப் புறம்பானது, இதனால் எத்தனை பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையெல்லாம் இந்த ஜென் இசட்இளைஞர்களும் இளம்பெண்களும் சட்டை செய்வதில்லை. அவர்களுடைய பெற்றோர்கள், ரத்த உறவுகள், இணையர்கள் கேள்வி கேட்பதோ, தடுப்பதோ இல்லை. ஒருவர் கொலை செய்யாவிட்டாலும், அதற்கு உடந்தையாக இருப்பது எந்த அளவுக்குக் குற்றமோ, அதேபோன்றதுதான் இந்த இளைஞர்களின் செயல்பாடுகளைத் தட்டிக்கேட்காமல் அமைதியாகக் கடந்து செல்வதும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories