TNPSC Thervupettagam

என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்

August 7 , 2020 1628 days 784 0
  • அடிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931-ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ராஜாஎன்றுதான் அழைத்தார்கள்.
  • ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை.
  • 1990-ல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. வெறும் 11 மாதக் காலத்திலேயே அவர் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார்.
  • இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம்.
  • சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர்.
  • தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார்.
  • பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இவ்வளவு பேசியவர் அடிப்படையில் தன்னை ஆதிக்கச் சாதியரில் ஒருவராக உணர்ந்து இந்தக் காரியங்களை தார்மீக எழுச்சியில் செய்தார் என்பது இங்கே முக்கியமானது.
  • பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் என்னவாகப் பார்த்தார் என்பதைக் கொஞ்ச காலத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி உணர்த்துகிறது.

உங்களுடைய பாதைக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதுபோல் தெரியவில்லையே?

  • அது உண்மையல்ல. 1989-ல் எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டபோது தேசியச் செயல்திட்டத்தில் நீதியை மறுபடியும் இடம்பெறச் செய்வோம்என்று தெளிவாகக் கூறியிருந்தோம்.
  • அரசியல் அறம், அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான கோட்பாடுதான் நீதி. அது பொருளாதார நீதியையும் சமூக நீதியையும் உள்ளடக்கியது. இதிலிருந்து நாங்கள் என்ன பெற்றோம்?’ என்பதல்ல நாம் கேட்க வேண்டிய கேள்வி; மாறாக, ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?’ என்பதைத்தான் கேட்க வேண்டும். எந்தக் கட்சியும் இதை அலட்சியப்படுத்த முடியாது. நாங்கள் அரசியல் சூழலையே மாற்றியமைத்திருக்கிறோம்.

உங்கள் கூட்டணியில் உள்ள நிறையக் கட்சிகள் காலத்துக்கு ஒவ்வாததாகவும் சிதைந்தும் போகுமா?

  • கூட்டணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலைபெற்றுவிடும். மதச்சார்பற்ற சமூக சக்திகளை அடையாளம் காண வேண்டுமே ஒழிய, மதச்சார்பற்ற கட்சிகளை அல்ல. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள் ஒரு சக்தி வாய்ந்த மதச்சார்பற்ற சக்தியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனும் சக்தியானது சிறுபான்மையினருடன் சேர்ந்து வகுப்புவாதத்துக்கு எதிரான வலுவான தூணாக இருக்க முடியும்.

ஆனால், நம் நாடு மதச்சார்பற்ற நாடுதானே?

  • அது வெறும் மேல்பூச்சுதான்.

அப்படியென்றால், காந்தி, நேரு கற்பனை செய்த மாதிரிகள் தோல்வியடைந்துவிட்டனவா?

  • இல்லை. காந்தி, நேரு எல்லோரும் சூழலை மேம்படுத்தவே முயன்றார்கள். ஏராளமான பொருளாதார, சமூக அடுக்குகளைத் தகர்த்தெறிய அவர்கள் முயன்றார்கள். ஆனால், மதமும் இந்த அமைப்புமே மேலோங்கின.
  • ஒரு அநீதியான சமூகக் கட்டமைப்பானது ஒரு அநீதியான அதிகாரக் கட்டமைப்பையே உற்பத்தி செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களையும் கட்சிகளையும் இதற்காகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது.
  • அரசியல், சமூக, பொருளாதார ஏகபோகங்கள் முடிவுகள் எடுப்பதிலிருந்து பெரும் அளவிலான மக்கள்திரளை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அதனால், அவை ஜனநாயகமற்றவையாக இருக்கின்றன.
  • இதுவரை ஆளும் மேல்தட்டினர்தான் விளையாடிவந்தனர், ஏனையோரோ பார்த்துக் கைதட்ட மட்டுமே அழைக்கப்பட்டனர். இப்போது பார்வையாளர்களோ, ‘நாங்களும் பந்தை உதைத்து கோல் வலைக்குள் தள்ள வேண்டும், எங்களுக்கென்று தனி அணி இருக்கிறதுஎன்று கூறுகிறார்கள்.

நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியா?

  • இல்லை, இல்லை. நான் வெறும் ஆய்வாளன்தான்.

அமைப்புடனும் ஊடகங்களுடனும் உங்கள் உறவு மோசமடைந்தது ஏன்?

  • இதற்கான பதிலை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களின் குழு எனக்கு அளித்தது.
  • ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளாலும், எங்களை ஆயிரம் ஆண்டுகளாக வசை பாடியவர்களாலும் நீங்கள் வசை பாடப்படுகிறீர்கள். நீங்கள் எங்கள் பக்கத்தில் நின்றால் வசையில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்என்று அவர்கள் கூறினார்கள்.
  • அதுவே எனக்கு வெளிச்சத்தையும் தெம்பையும் கொடுத்தது. இன்னும் இரண்டு அனுபவங்கள் எனது வைராக்கியத்தை உறுதிப்படுத்தின. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், “நாங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் இல்லையா? பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இந்த நாட்டின் நான்கில் மூன்று பங்கு என்ற அளவில் இருக்கிறோம். மண்டல் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு விஷயம் கொடுத்தீர்கள், ஒட்டுமொத்த நாடும் எங்கள் மீது பாய்ந்ததுஎன்று என்னிடம் கூறினார்கள்.
  • இது 27% அல்லது 10% என்பது பற்றிய கேள்வியல்ல; மாறாக, ‘ஆளும் மேல்தட்டினரின் இதயங்களில் எங்களுக்கு 1%-கூட இடம் இல்லையா?’ என்ற கேள்வி.
  • நாட்டின் நான்கில் மூன்று பங்கு இளைஞர்கள் இப்படி உணர ஆரம்பித்தார்கள் என்றால் நாடு என்னவாகும்? இன்னொரு முறை ஒரு பத்திரிகைக்காரர் வயதான ஒரு தலித் பெண்மணியிடம், “நீங்கள் வி.பி.சிங்கை ஏன் ஆதரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
  • அதற்கு அந்தப் பெண்மணி, “ஏனென்றால் அவர் எனது சாதியைச் சேர்ந்தவர்என்று பதில் கூறியிருக்கிறார். வி.பி.சிங் தலித் என்றா சொல்கிறீர்கள்?” என்று அந்தப் பத்திரிகையாளர் திரும்பக் கேட்டார். ஆமாம், ஏனெனில் அவர் எங்களுக்காகப் போராடுகிறார்என்று அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார்.
  • ஆக, கொஞ்சம் நம்பிக்கையாவது இருக்கிறது. அதை விட்டுவிடக் கூடாது. வாக்குகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அந்த நம்பிக்கைக்கு ஈடாக மாட்டார்கள்.

ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்துவிட்டதா?

  • நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல்தட்டினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று ஒரு முட்டுச்சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும்.
  • வி.பி.சிங்கைத் தூக்கில் தொங்கவிடுங்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிடும்!

நன்றி: தினமணி (07-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories