TNPSC Thervupettagam

எப்போது கனவு பலிக்கும்?

February 21 , 2025 2 days 10 0
  • ஐக்கிய நாடுகள் அவை எடுத்த முடிவின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னே ஒரு வரலாறு இருப்பதை மறுக்க முடியாது. அதேவேளையில், உலகின் பழமையான மொழியாகவும் செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழியாகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகின்ற மொழியாகவும் இருக்கின்ற தமிழ் மொழியைப் போற்றும் வகையில் ஒரு நாள் நமக்குத் தேவை. இதற்கு வலுவான காரணிகள் உண்டு.

மொழிப்போர் வரலாறு:

  • மேற்கு பாகிஸ்​தானுக்கும் கிழக்கு பாகிஸ்​தானுக்கும் உருது மொழியே ஆட்சி மொழி என்று பாகிஸ்தான் அரசு அறிவித்ததை அடுத்து கடும் முரண்பாடு தோன்றியது. 1952இல், அன்றைய கிழக்கு பாகிஸ்​தானில் (இன்றைய வங்கதேசம்), ‘எங்களுக்கு வங்க மொழியே ஆட்சி மொழி; பாகிஸ்தான் திணிக்கும் உருது மொழியை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது’ என்று அறிவித்து, வங்காளிகள் நடத்திய உருது மொழி எதிர்ப்புப் போராட்​டத்தில் உயிர்​நீத்த நான்கு மாணவர்​களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்கள் உயிர்​நீத்த நாளான பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்​கப்​பட்​டுள்ளது.
  • 1971இல் இந்தியாவின் உதவியுடன் இறையாண்மை உள்ள ஒரு தேசமாக மலர்ந்த வங்கதேசம், தாய்மொழியின் உரிமைக்​காகப் போராடி உயிர் நீத்த போராளி​களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1998இல் ஐக்கிய நாட்டு அவையில் கோரிக்கை வைத்தது; உலக நாடுகளையும் ஏற்பளிக்கச் செய்தது.
  • இதைவிடச் சிறந்த நினைவஞ்​சலியை எந்த நாடும் செய்துவிட முடியாது. அந்த ஏற்பளிப்பை வங்கதேசம் வெற்றிகர​மாகப் பெற்றுக்​கொண்டது. 1999இல் ஐக்கிய நாடுகள் அவையின் இசைவுக்குப் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21 ‘உலகத் தாய்மொழி நாள்’ என அனைவரும் கொண்டாடக்​கூடிய ஒரு சூழல் உருவாகி​யுள்ளது.
  • பிப்ரவரி 21 என்பது தமிழ்​நாட்டு மொழிப்போர் வரலாற்றிலும் மிக முக்கியமான நாளாகும். 1938இல் பள்ளி​களில் கட்டாய இந்தியை மதராஸ் (சென்னை) மாகாணத்தின் பிரதமர் ராஜகோ​பாலாச்​சா​ரியார் தலைமையிலான அரசு புகுத்​தி​ய​போது, அதை எதிர்த்து, மூன்று ஆண்டுகள் போராட்​டங்கள் நடைபெற்றன. இறுதி​யில், 1940 பிப்ரவரி 21ஆம் நாளில்தான் மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின் பள்ளி​களில் கட்டாயமாக இருந்த இந்தியை நீக்கி​னார். ஆக, தாய்மொழிக் காப்புக்காக நிகழ்ந்த மொழிப்​போரில் தமிழகத்​தைவிட வங்கதேசம் மூத்தது அல்ல.
  • நாட்டு விடுதலைக்கு முன்பாகவே, கட்டாய இந்தியை எதிர்த்து 1938 முதல் போராட்டம் நடந்தது. 1939இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்​டத்தில் 1,271 பேர் கைதானார்கள். (இவர்​களில் பெண்கள் 73, குழந்தைகள் 32). கடும் எதிர்ப்பைக் கண்ட சென்னை மாகாணப் பிரதமர் ராஜாஜி, 125 பள்ளி​களில் மட்டுமே கட்டாய இந்தி என்றும், அதுவும் 6 முதல் 8ஆம் வகுப்புவரை கற்பிக்​கப்​படும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்றும் அறிவித்​தார்.
  • ஆனால், கட்டாய இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது. 1939 ஜனவரி 15 அன்று இந்தி எதிர்ப்புப் போராட்​டத்தில் கைது செய்யப்​பட்டு சிறையிடப்​பட்​டிருந்த நடராசனும், மார்ச் 13ஆம் நாளில் தாளமுத்துவும் சிறையிலேயே உயிர்​நீத்​தனர். இவ்வாறாகத் தாய் மொழிக் காப்புக்கு முதல் களப்பலிகளை 1939இலேயே தமிழ்ச் சமூகம் அளித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • ‘இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்​பாட்டுக்கு வந்த பிறகு, 15 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு வரும்’ என்பது அரசமைப்புச் சட்ட அவையால் ஏற்கப்​பட்​டிருந்தது. அதன்படி, 1965 சனவரி 26ஆம் தேதி இந்தி அதிகாரபூர்வமான ஒரே ஆட்சி மொழி என்று நடைமுறைக்கு வர இருந்த சூழலில், தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரும் மொழிப்போர் மூண்டது.
  • இந்தித் திணிப்பை ஏற்க முடியாது என்று தொடர்ந்து போராடி வந்த தமிழர்​களின் குரல், அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவை சிந்திக்க வைத்தது. அதன் விளைவாகத் தமிழ்​நாட்டு மக்கள் விரும்​பும் வரை இந்தி மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட மாட்டாது என நாடாளு​மன்​றத்தில் அவர் உறுதி​யளித்​தார்.

மொழி காக்கும் நடவடிக்கைகள்:

  • மொழிகள் இல்லாமல் உலகில் அறிவுப் பரிமாற்றம் சாத்தி​யமில்லை. மொழிகள், மனிதர்​களுக்குக் கிடைத்த பெரும் சொத்து. அந்தச் சொத்து​களைக் காப்பாற்ற வேண்டியது மானுடச் சமூகத்தின் கடமை. உலகின் தொன்மையான மொழிகளை மக்கள் கொண்டாடி மகிழ்​வதோடு, அழிந்​து​போ​காமல் அடுத்த தலைமுறை​யிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை அந்தந்த தேசிய இன மக்கள் தொடர்ந்து செய்து​வரு​கிறார்கள். ஒவ்வோர் ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் முழு நிலவு நாள் உலக சம்ஸ்​ கிருத நாளாகக் கடைப்பிடிக்​கப்​பட்டு, அம்மொழியை அழிவில் இருந்து காக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த கருத்​தரங்​குகள், ஆய்வரங்​குகள், விழாக்கள் நடத்தப்​பட்டு வருகின்றன.
  • அதுபோலவே 1949 செப்டம்பர் 14ஆம் நாளன்று, இந்திய அரசமைப்பு நிர்ணய அவையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை ஏற்க முடிவு செய்யப்​பட்டது. இந்த நாளை நினைவு​கூரும் வகையில், ஆண்டு​தோறும் செப்டம்பர் 14ஆம் நாள் இந்தி மொழி நாளாக​வும், செப்டம்பர் 14-21 இந்தி மொழி வாரமாகவும் மத்திய அரசு சார்பில் கொண்டாடப்​பட்டு வருகிறது. அந்த நாளில் மத்திய அரசு அலுவல​கங்கள், பல்கலைக்​கழகங்கள், கல்லூரிகள், பள்ளி​களில் விழாக்கள், கருத்​தரங்​குகள், ஆய்வரங்​குகள் எனப் பல செயல்​பாடுகள் நடத்தப்​பெற்று, இந்தி மொழியை மேலும் வளர்த்​தெடுக்கும் பணிகள் முன்னெடுக்​கப்​படு​கின்றன.
  • ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளான அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, ஸ்பானிய மொழி ஆகிய மொழிகளைக் கொண்டாடு​வதற்​காகச் சிறப்பு நாள்கள் அறிவிக்​கப்​பட்​டு உள்ளன. ஆனால், உலகத் தமிழ் மொழி நாள் என ஒன்று இதுவரை தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, வேறு அமைப்பு​களால் அறிவிக்​கப்​பட​வில்லை. ஐ.நா. அவை அல்லது மத்திய அரசு இதுபோல் அறிவிக்​கா​விடினும் தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் நாள் என்கிற ஒன்றை அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை​விடுத்து​வரு​கின்றன.
  • வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்​களின் கூட்டமைப்பு, கொரியா, சிங்கப்​பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள், இந்தியாவின் பல்வேறு பகுதியில் இயங்கிவரும் தமிழ்ச் சங்கங்கள் சார்பிலும் தமிழ் மொழியுணர்வை முதன்மை நோக்க​மாகக் கொண்டு பாடிய புரட்சிக் கவிஞர் பாரதி​தாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாளை ‘உலகத் தமிழ் மொழி நாள்’ எனக் கொண்டாடி வருகின்​றனர். தமிழ் மொழியைக் காக்கக் குரல் கொடுக்கும் தமிழ்நாடு அரசு, இது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். தமிழ் மொழிக்கு உரிய மதிப்பை நிலைநாட்டும் வகையில் அந்த நடவடிக்கை அமைய வேண்டும்
  • பிப்ரவரி 21: உலகத் தாய்மொழி நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories