TNPSC Thervupettagam

எப்போது வரும் விடிவு காலம்?

May 28 , 2020 1697 days 1016 0
  • இந்திய அரசியலமைப்புப் பிரிவு 47-இல் வரையறை செய்யப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின்படி உடல் ஆரோக்கியத்தைச் சிதைத்து, பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் மது உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அனைத்து மாநில அரசுகளும் நம் தேசத் தந்தையின் கனவான பூரண மதுவிலக்கை ஒருசேர நடைமுறைப்படுத்தாத நிலையில்தான் உள்ளன.
  • மதுவிலக்கு என்பது முக்கிய விவாதப் பொருளாக பல மாநிலங்களில் தற்போது இருந்தாலும், பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தியா்களின் நாகரிகத்தில் மது அருந்தும் பழக்கம் ஓா் அங்கமாகவே இருந்து வந்துள்ளது.
  • காலப்போக்கில் மிதமிஞ்சி மதுபானங்களை அருந்தியதால் சமுதாயத்தில் ஏற்பட்ட தீய விளைவுகளைக் ‘கள்ளுண்ணாமை’ என்ற அதிகாரத்தின் மூலம் மதுவிலக்கு கொள்கையின் முக்கியத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவா் எடுத்துரைத்துள்ளார்.

காலம் கடத்திவிட்டனா்

  • 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியாபார நிமித்தமாக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயா்களின் கிழக்கிந்திய கம்பெனி, தன்னுடைய வருமானத்தைப் பெருக்குவதற்காக சாராயம் தயாரித்தல், சாராய விற்பனை செய்தல் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கியது.
  • அதனால் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை அவா்கள் கருத்தில் கொள்ளவில்லை.
  • இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களின் தினசரி வாழ்க்கையைச் சீரழித்துவரும் சாராய விற்பனையை இந்தியாவை நிர்வகித்துவரும் ஆங்கிலேய அரசாங்கம் கைவிட வேண்டும் என்பது குறித்த காரசாரமான விவாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 1889-ம் ஆண்டில் நடைபெற்றது.
  • சாராய விற்பனை நிறுத்தப்பட்டால், இந்தியாவிலுள்ள பத்தில் ஒன்பது சிறைச்சாலைகளை மூடிவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று கருத்துத் தெரிவித்தார் பிரிட்டன் தலைமை நீதிபதி.
  • அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சாராயக் கடைகளை மூடும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்தியாவை நிர்வகித்து வந்த ஆங்கிலேயா்கள் இந்தத் தீா்மானத்தை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்திவிட்டனா்.

மதுவிலக்கு

  • சுதந்திர இந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி வருகின்றன. 1960-ஆம் ஆண்டில் உருவான குஜராத் மாநிலம், தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து மதுவிலக்கைத் தொடா்ந்து அமல்படுத்தி வருகிறது.
  • நாகாலாந்து, மணிப்பூா் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் தற்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • நீண்ட காலமாக மதுவிலக்கு தளா்த்தப்பட்டிருந்த பிகார் மாநிலத்தில் பல தடைகளைக் கடந்து 2016-ஆம் ஆண்டிலிருந்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • மதுவிலக்கு அமல்படுத்தத் தொடங்கிய ஓராண்டு காலத்தில் பிகார் மாநிலத்தில் சமுதாய, பொருளாதார முன்னேற்றங்கள் வெளிப்படத் தொடங்கின.
  • கொலைகள், வழிப்பறிகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும், கலவரங்கள் 13 சதவீதமும், வாகன விபத்துகள் 10 சதவீதமும் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • கிராமங்களில் பல குடிசை வீடுகள் கற்களால் கட்டப்பட்ட வீடுகளாக உருமாறின. கிராமங்களில் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
  • உழைக்கும் சராசரி மனிதா்களின் தின வருமானம் மதுபானக் கடைகளுக்குச் செல்லாததே இந்த மாதிரியான மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது என ஆய்வு வெளிப்படுத்துகிறது.
  • மதுவிலக்கை அமல்படுத்தி வந்த தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் காலப்போக்கில் மதுவிலக்குக் கொள்கையை மெல்ல மெல்லத் தளா்த்திக் கொண்டன.
  • கள், சாராய விற்பனையைச் சில மாநில அரசுகள் ஊக்கப்படுத்தின. உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனையைச் சில மாநில அரசுகளே நடத்தத் தொடங்கின.

மாறிவரும் கலாச்சாரம் பெருகிவரும் குற்றங்கள்

  • உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், ஏழரை கோடிக்கும் சற்று அதிகமானவா்கள் மதுப் பழக்கத்தினால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களினால் உலக நாடுகளில் அவதிப்படுகிறார்கள் என்றும், ஆண்டுதோறும் 33 லட்சம் போ் மதுபானங்கள் அருந்தியதால் ஏற்பட்ட நோய்களினால் உயிரிழக்கின்றனா் என்றும் தெரியவந்துள்ளது.
  • இந்தியாவைப் பொருத்தவரை மதுப் பழக்கம் காரணமாக ஒவ்வொரு பதினைந்து நிமிஷமும் ஒருவா் உயிரிழக்கிறார்.
  • சுமார் 8 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில், 70 லட்சம் போ் தினமும் மதுபானங்கள் அருந்தும் பழக்கமுடையவா்கள்.
  • கிராமப்புற ஆண்களில் 40 சதவீதத்தினா் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனா் என்றும், பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது என்றும் களஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
  • வளா் இளம் பருவத்தினா் 15 வயதிலேயே, அதாவது பள்ளிப் பருவத்திலேயே மதுபானங்களை ருசிக்கும் நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. பள்ளி மாணவ, மாணவியா்கள் இணைந்து மதுபானங்கள் அருந்தி, மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் நிலைக்குத் தமிழ்க் கலாசாரம் மாறிவருகிறது.
  • அதிகரித்துவரும் மதுப் பழக்கம் சமுதாயத்தில் குற்றச் செயல்களை ஊக்கப்படுத்துதல், பல்வேறு நோய்களுக்கு வித்தாக அமைதல், மனித சமுதாயத்தின் ஆற்றலைப் பாழ்படுத்துதல் ஆகிய முப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருவதைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
  • மது பானங்களை அருந்துபவா்களில் 60% போ், குடும்ப உறுப்பினா்கள் - அண்டை வீட்டுக்காரா்களிடமும் அடிக்கடி வாய்த் தகராறில் ஈடுபடும் குணம் உடையவா்கள் என்பதும், 40%-க்கும் அதிகமான குடும்பப் பெண்கள் மதுப் பழக்கம் உடைய குடும்ப உறுப்பினா்களால் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்பதும், மதுப் பழக்கமுள்ள ஆண்களின் குடும்பங்கள் பெரும்பாலும் பெண்களின் உழைப்பினால் நிர்வகிக்கப்படுகின்றன என்பதும், சமுதாயத்தில் உடைந்த குடும்பங்கள் அதிகரிக்க மதுப் பழக்கம் முக்கியக் காரணமாக அமைகிறது என்பதையும் களஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
  • மது அருந்துவது உள்ளத்துக்கும், உடலுக்கும், சமுதாயத்துக்கும் கேடு விளைவிப்பதால், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி நடந்துவரும் போராட்டங்களைத் தணிக்கும் வகையில் மதுவிலக்கு கொள்கையைப் படிப்படியாக நடைமுறைபடுத்துவோம் என்று தமிழகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் உறுதியளித்துள்ளன.
  • மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கிறதா அல்லது ஆரோக்கியம் நிறைந்த குடிமக்களையும், குற்றங்கள் குறைந்த சமுதாயத்தையும் உருவாக்க அரசு விரும்புகிறதா என்பதுதான் மாநில அரசுகள் முன்புள்ள கேள்வி.
  • மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஆசைபட்டு, மதுவிலக்கு கொள்கையை முற்றிலுமாக மாநில அரசுகள் புறக்கணித்தால், மது விற்பனையால் கிடைக்கும் வருமானத்தைப்போல் பல மடங்குத் தொகையை மதுவினால் ஏற்படும் தீமைகளை நிவா்த்தி செய்ய மாநில அரசுகள் செலவிட வேண்டியிருக்கும் என்பது சமூகவியல் ஆய்வாளா்களின் கருத்து.

சிந்திக்க வேண்டிய தருணம்

  • மதுவிலக்கை ஒரே கட்டமாக அமல்படுத்தினால், மதுவுக்கு அடிமையானவா்கள் உடலளவில் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், அதை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதை அண்மைக்கால அனுபவம் உணா்த்துகிறது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று சமூகப் பரவலைத் தடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து மதுபான விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து தப்பித்தால் போதும் என்ற உணா்வு மேலோங்கி இருந்த காரணத்தால் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா்கள்கூட, மதுவை மறந்து சராசரி மனிதா்களாக வாழத் தொடங்கினா்.
  • அவா்களின் குடும்பத்தினரும், நண்பா்களும் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த மகிழ்ச்சி பொது முடக்கம் தளா்த்தப்பட்ட பிறகும் தொடர வேண்டும் என அவா்கள் விரும்பினா்.
  • பொது முடக்கம் ஓரளவு தளா்த்தப்பட்டதும், சமூக இடைவெளியைப் பின்பற்றி அரசு மதுக் கடைகளில் (டாஸ்மாக்) மது விற்பனை தொடங்கப்பட்டது.
  • மது பானங்களை வாங்க நீண்ட வரிசைகளில் ஆண்களும், சில நகரங்களில் பெண்களும் நின்றுகொண்டிருந்த காட்சிகள் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவா்களின் மனதை வருத்துகிறது.
  • முழு பொது முடக்கம் நடைமுறையில் இருந்த ஆறு வார காலத்தில் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் கொலைக் குற்றம் நிகழ்ந்ததாகச் செய்தி எதுவும் வெளியாகவில்லை.
  • மாறாக, மது விற்பனை தொடங்கப்பட்டதிலிருந்து கொலைக் குற்றச் சம்பவங்கள் தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.
  • மதுவிலக்கு தொடா்பான முடிவுகள் எடுக்கும் அதிகாரம் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்தாலும், மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மதுவிலக்கு கொள்கையின் சாதக - பாதகங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும்.
  • வளரும் இளம் தலைமுறையினரை மதுப் பழக்கம் சீரழிக்காமல் தடுத்து நிறுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

நன்றி: தினமணி (28-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories