- நாட்டின் குடிமக்களுக்கு அறிவியல் பார்வை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்திய அரசமைப்பு. கூடவே, எதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அப்படியான ஒரு முன்னெடுப்புதான் தமிழ்நாடு அரசு மார்ச் 9 அன்று வெளியிட்ட ‘எம்-சாண்ட்’ கொள்கை அறிக்கை.
- கட்டுமானங்களின் முக்கிய இடுபொருள் மணல். எண்பதுகளுக்கு முன்பு வரை ஆறுகளில் புது வெள்ளம் கொண்டுவரும் வரத்து மணல்தான் கட்டுமானங்களில் பயன்படுத்தப்பட்டது. அதனால் சுற்றுச்சூழலுக்குக் கேடில்லை. தொண்ணூறுகளில் தாராளமயம் வந்தது. விளைவாகக் கட்டிடங்கள் பெருகின. வரத்து மணல் போதுமானதாக இல்லை. பொக்லைன் இயந்திரங்கள் உள்ளே நுழைந்தன.
- அவை ஆற்றின் அடி மடி வரை தம் நெடுங்கரங்களை நீட்டி, மணலை அள்ளிக் குவித்தன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றங்களை நாடினார்கள். தடை உத்தரவுகள் வந்தன. மணலுக்குக் கிராக்கி கூடியது. மணல் அள்ளும் தொழில், மாஃபியாக்களின் கைகளுக்குப் போனது. மணலின் விலை பன்மடங்கு உயர்ந்தது. மணல் கிடைப்பதும் அரிதானது. இந்தக் காலகட்டத்தில்தான் எம்-சாண்ட் மெல்ல மெல்ல சந்தைக்கு வந்தது. இப்போது அதன் பயன்பாடும் அதிகமாகிவிட்டது.
- என்றாலும் அது ஆற்று மணலுக்கு மாற்றாகுமா என்கிற ஐயம் பலருக்கும் இருக்கிறது. அதற்கான விடையாக அரசின் கொள்கை அறிக்கை அமைந்திருக்கிறது. தரமான எம்-சாண்டை எப்படி அறிந்துகொள்வது என்கிற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. அறிக்கை அதற்கும் பதிலளிக்கிறது.
அபத்தமான முடிவு:
- கட்டுமானங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு கலவைகள் கான்கிரீட்டும் சாந்தும். இதில் கான்கிரீட் பிரதானமாக மூன்று இடுபொருள்களால் உருவாகிறது. அவை: சிமென்ட், பருண் சேர்மானம் (coarse aggregate), நுண் சேர்மானம் (fine aggregate). கருங்கல் ஜல்லி பருண் சேர்மானமாகப் பயன்படுகிறது. பன்னெடுங்காலமாக ஆற்று மணல்தான் நுண் சேர்மானமாகப் பயன்பட்டுவந்தது.
- அதே போல சிமென்ட், நுண் சேர்மானம் ஆகிய இரண்டு இடுபொருள்களால் உருவாகும் சாந்திலும் மணல்தான் நுண் சேர்மானமாகப் பயன்பட்டுவந்தது. ஆனால், மணல் மட்டுமே நுண் சேர்மானமில்லை. அது பின்வரும் நான்கு வகைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்கின்றன பன்னாட்டு விதிநூல்கள்: பொடிக்கப்பட்ட கருங்கல் தூள், பொடிக்கப்பட்ட சரளைக்கல் தூள், ஆற்று மணல், தாதுப் பொருள்களைக் கலந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தூள்.
- மேற்குறிப்பிட்ட நான்காவது நுண் பொருளைத்தான் எம்-சாண்ட் (Manufactured sand) என்றழைக்கின்றன பன்னாட்டு விதிநூல்கள். ஆனால், பட்டியலில் முதலில் இருக்கும் நுண் பொருள்தான் இந்தியாவில் எம்-சாண்ட் என்றழைக்கப்படுகிறது. நமது கல்விப்புலமும் தொழில் துறையும் அறிவியல் பார்வையோடு செயல்பட்டிருந்தால் இந்த அபத்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது காலம் கடந்துவிட்டது. ஆகவே, அரசின் கொள்கை அறிக்கை கருங்கல் தூளுக்கு எம்-சாண்ட் எனும் பதத்தையே பயன்படுத்துகிறது. மேலதிகமாக இந்தத் தூளைக் குறிக்கும் எல்லா இடங்களிலும் எம்-சாண்ட் / பொடிக்கப்பட்ட மணல் என்று குறிக்கிறது.
தயாராகும் விதம்:
- மலைப் பிஞ்சுகள் சிறு பாறைகளாகவும், அடுத்து இவை 40 மி.மீ. (1-1/2 அங்குலம்) ஜல்லிகளாகவும், தொடர்ந்து 20 மி.மீ. (3/4") ஜல்லிகளாகவும் உடைக்கப்படும். இந்த ஜல்லிகள் நிமிர் சுழல்தண்டு (vertical shaft impactor-VSI) எனும் இயந்திரத்தில் பொடியாக்கப்படும். கான்கிரீட்டில் பயன்படுத்தப்படும் எம்-சாண்டின் அளவு 4.75 மி.மீ.ஐவிடக் குறைவாகவும் 150 மைக்ரானைவிட அதிகமாகவும் இருக்க வேண்டும் (பத்தி 5). ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகம் ஒரு மில்லிமீட்டர். ஒரு மி.மீ.இல் ஆயிரத்தில் ஒரு பாகம் ஒரு மைக்ரோ மீட்டர் அல்லது மைக்ரான். மேற்குறிப்பிட்ட அளவுகளில் எம்-சாண்ட் இருப்பதைத் தானியங்கிச் சலிக்கிகள் (sieves) உறுதிசெய்யும். இவை நன்னீரால் கழுவப்பட்டு மீண்டும் ஒரு முறை சலிக்கப்படும்.
தர நிர்ணயம்:
- எம்-சாண்ட் தரமானதுதானா என்று அறிவது எப்படி? இதில் நிமிளை (iron pyrite), நிலக்கரி, காரத் தாது, காக்காய்ப் பொன் (mica), கந்தகம், களிக்கல் (shale) போன்றவை இருக்கக் கூடாது (பத்தி 3.2). குவாரியின் இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலேயே இவற்றைத் தவிர்க்க முடியும். உயிர்ப்பொருள் மாசு முதலானவற்றைத் தயாரிப்பு முறையில் சுத்திகரிக்க முடியும். பொடிக்கப்பட்ட மணலின் பல்வேறு படிநிலைக் கூறுகளின் அளவை, அதன் வலிமை முதலியவற்றை இந்தியத் தரக்கட்டுப்பாட்டு மையம் நிர்ணயித்திருக்கிறது.
- எம்-சாண்டின் பயன்பாடு மூன்று வகைப்படும். அவை: கான்கிரீட் கலவை, சுவர்களைக் கட்டுவதற்கான சாந்துக் கலவை, பூச்சு வேலைக்கான சாந்துக் கலவை. இந்த மூன்று பயன்பாடுகளுக்கான எம்-சாண்டின் பண்புகளில் சிறிய வேற்றுமைகள் இருக்கும். அந்தப் பண்புகளையும் அவற்றுக்கான பரிசோதனைகளையும் முறையே ‘IS-383’, ‘IS-2116’, ‘IS-1542’ ஆகிய விதிநூல்களில் காணலாம்.
- எம்-சாண்ட் தயாரிக்கும் குவாரிகள் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். அவற்றில் விதிநூல்கள் குறிக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளத்தக்க ஆய்வகங்கள் இருக்க வேண்டும் (பத்தி 6.3c). இந்தக் குவாரிகளும் ஆய்வகங்களும் அரசின் நிலவியல்-சுரங்கத் துறையாலும் பொதுப்பணித் துறையாலும் பரிசோதிக்கப்படும். தவிர, அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்துச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் (பத்தி 6.3d)
அங்கீகாரம்:
- அரசின் அனுமதியின்றி இயங்கிவரும் குவாரிகள் VSI உள்ளிட்ட முறையான கட்டமைப்புகளை அமைத்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் (பத்தி 4.2). மேலும், சிறப்பாகச் செயல்படும் குவாரிகள் ஊக்குவிக்கப்படும். குவாரிகளின் செயல்பாடு பின்வரும் அம்சங்களால் கணிக்கப்படும்: சுற்றுச்சூழல் மேம்பாடு, நீர்ப் பாதுகாப்பு, தொழிலாளர் நலன், குத்தகை விதிகளையும் பொறியியல் விதிகளையும் கடைப்பிடித்தல், அரசுத் துறைப் படிவங்களைச் சமர்ப்பித்தல் முதலியன. இந்த அடிப்படையில் குவாரிகளுக்கு ஒன்று முதல் ஐந்து வரையிலான நட்சத்திரக் குறியீடுகள் வழங்கப்படும் (பத்தி 12).
- அரசு செய்ய வேண்டியவை: அங்கீகரிக்கப்பட்ட குவாரிகளிலிருந்து மட்டும் இடுபொருள்களை வாங்குவதற்குப் பயனர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நாளடைவில் அதிக நட்சத்திரக் குறியீடுகள் பெற்ற குவாரிகளிலிருந்து மக்கள் வாங்கத் தொடங்குவார்கள்.
- குவாரிகள் அவை உருவாக்கும் பொருள்களின் அளவுக்கு ஏற்பப் போதிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் குறைந்தபட்ச எண்ணிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். ஜல்லிகளையும் எம்-சாண்டையும் சுமந்து செல்லும் லாரிகளில், அவற்றுக்கான ரசீதுகளுடன் பொருள்களுக்கான தரக் கட்டுப்பாட்டு அறிக்கைகளும் இருக்க வேண்டும்.
- நிதிநிலை அறிக்கையின் பொருளாதாரக் கூறுகளைத் தமிழில் விளக்கி ஒரு கையேட்டை சமீபத்தில் அரசு வெளியிட்டது. அதைப் போலவே இந்த அறிக்கையின் பொறியியல் கூறுகளையும் எளிய தமிழில் வெளியிட வேண்டும். கடைசியாக, இந்த அறிக்கையை மேம்படுத்தி சட்டமன்றத்தின் ஒப்புதலோடு இதன் கூறுகளை விதியாக்க வேண்டும்.
- தமிழ்நாடு பல அம்சங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. எம்-சாண்ட் தொடர்பான சட்டமும் அந்தப் பட்டியலில் சேரட்டும். அது நம் மாநிலம் அறிவியல் பார்வையுடன் விளங்குகிறது என்பதைத் துலக்கமாக்கும்.
நன்றி: தி இந்து (06 – 04 – 2023)