TNPSC Thervupettagam

எம்எஸ்எஸ்: பெரிய தலைக்கட்டு

October 12 , 2023 281 days 208 0
  • சென்னை தரமணியில், பசுமையான பின்னணியில் அமைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், எம்.எஸ்.சுவாமிநாதனுடைய உடல் வைக்கப்பட்டிருந்த போது, அஞ்சலி செலுத்த வந்தவர்களில் விவசாயிகளின் மீதே என்னுடைய கவனம் பொதிந்திருந்தது.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் வந்திருந்தார்கள். துயரத்தை விடவும் நெகிழ்ச்சி அவர்களிடம் தென்பட்டது. அவர் பிறந்த தஞ்சாவூர் பிராந்தியத்திலிருந்து வந்திருந்த ஒரு விவசாயி உடலை வாஞ்சையாகப் பார்த்தபடி பெரிய தலைக்கட்டுஎன்றார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அறிவியலாளர்களிடமிருந்தும் வந்திருந்த இரங்கல் அறிக்கைகள், குடியரசுத் தலைவர் தொடங்கி முதல்வர் வரையிலான அஞ்சலிகள், தமிழ்நாடு அரசின் மரியாதை, எல்லாவற்றையும்விட சுவாமிநாதன் வாழ்வைத் துல்லியமாக அங்கீகரிக்கும் கௌரவமாக அந்தச் சொல்லாடல் தோன்றியது.
  • உலகெங்கும் உள்ள வேளாண் அறிஞர்கள் மத்தியில் மதிக்கப்படும் அறிவியலராக எம்.எஸ்.சுவாமிநாதன் இருந்தார். இந்தியாவில் அவர் அளவுக்கு மதிக்கப்பட்ட விஞ்ஞானியும் இல்லை; தூற்றப்பட்ட விஞ்ஞானியும் இல்லை. எதுவாயினும் இறுதிக் காலம் வரை அரசியல் வர்க்கம் அவருடைய சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அரை நூற்றாண்டுக்கு முன் இந்திய வேளாண் துறையில் அவர் முன்னெடுத்த மாற்றமே பசுமைப் புரட்சிஎன்று பிற்பாடு அழைக்கப்படலானது.
  • கும்பகோணத்தில் 1925இல் பிறந்த சுவாமிநாதனுக்குத் தனது தந்தை சாம்பசிவத்தைப் போல மருத்துவர் ஆவதே இளவயது கனவாக இருந்தது. பள்ளியில் உயிரியலில் விலங்கியல்தான் அவருடைய விருப்பத்துக்குரிய பாடமாகவும் இருந்தது. ஆனால், அவருடைய குடும்பப் பின்னணி வேளாண்மையோடு பிணைந்திருந்ததால், தாவரவியலிலும் சுவாமிநாதனுக்கு ஒரு விசேஷ கவனம் இருந்தது. விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் வேளாண் கல்வி நோக்கி அவர் இலக்கைத் திருப்பின.
  • கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த 1943 வங்கத்துப் பஞ்சமும் வகைதொகையற்ற பட்டினிச் சாவுச் செய்திகளும் தன்னை நிலைகுலைய வைத்ததாகப் பின்னாளில் சுவாமிநாதன் கூறினார். கோவை வேளாண் கல்லூரி, அடுத்து டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், மேடிசன் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் என்று பயணப்பட்டார் சுவாமிநாதன். எல்லாமுமாகச் சேர்ந்து வேளாண் ஆராய்ச்சியில், பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறையில் ஒரு மகத்தான அறிவியலரை நமக்குத் தந்தன.
  • மெக்ஸிகோவில் அமெரிக்க அறிவியலர் நார்மன் போர்லாக் முயற்சியில் குள்ள ரக கோதுமை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துவந்த காலகட்டம் அது. 1953 -1963 இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இதுகுறித்து அறிந்த சுவாமிநாதன் இந்தியாவில் அதிக மகசூலைத் தரும் புதிய ரக கோதுமை, நெல் வகைமைகளை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.
  • போர்லாக் சுவாமிநாதன் இருவரும் இணைந்து பணியாற்றும் காலமும் மிக விரைவில் வந்தது. அதிக மகசூல் தரும் மெக்சிகோ குட்டை ரக கோதுமை ரகங்களை இந்தியா ரகங்களுடன் இணைத்து, இருவரும் புதிய ரகங்களை உருவாக்கினார்கள். அடுத்து, படிப்படியாக அவை மேம்படுத்தப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, சுவாமிநாதன் தலைமையிலான  இந்திய ஆராய்ச்சியாளர் குழு பல புதிய ரகங்களை உருவாக்கியது. இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இந்தியாவின் கோதுமை, நெல் உற்பத்தியில் பெரும் பாய்ச்சல் நடக்கலானது.
  • சாதனையைச் சுருக்கமாக ஒரு வரியில் கூற வேண்டும் என்றால், 1947இல் சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் மக்கள்தொகை 33 கோடி; 75 ஆண்டுகளுக்குப் பின் 2023இல் 142 கோடி; நம்முடைய உணவு தானிய உற்பத்தி அன்றைக்கு 50 மில்லியன் டன்; இன்றைக்கு 330 மில்லியன் டன். அன்றைக்கு 6 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி இன்றைக்கு 112 மில்லியன் டன்னாக வளர்ந்திருக்கிறது; அன்றைக்கு 20 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி இன்றைக்கு 135 மில்லியன் டன்னாக வளர்ந்திருக்கிறது. சாகுபடிப் பரப்பை மிகப் பெரிய அளவில் விரிக்காமலேயே இந்த விளைச்சலைக் கொண்டுவந்திருக்கிறோம் என்பதும், இந்தியாவின் பெரும்பான்மை விளைச்சல் நிலம் நீர்ப் பாசனக் கட்டுமான வசதி அற்றது என்பதும் இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான செய்திகள்.
  • ஆசியா முழுவதுமே வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் சுவாமிநாதன் விளைவின் தாக்கங்கள் பிரதிபலித்தன என்று சொல்லலாம். எப்படியும் இந்தியா தற்சார்போடு எழுந்து நிற்க ஆணிவேர் போன்று அமைந்தது இது!
  • நேர்மறை மாற்றங்களைப் போல எதிர்மறை மாற்றங்களும் சூழ்ந்தன. பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக உருவான சூழலைத் தமக்கான சந்தையாக வடிவமைத்தன. மண்ணின் தன்மையையும், சுற்றுச்சூழலையும் வெகுவாக நாசமாக்கியது நவீன வேளாண் முறை. அதீதமான ரசாயன உரம் - பூச்சிகொல்லிப் பயன்பாடும் வரைமுறையற்ற ஆழ்குழாய்க்கிணறுகள் உருவாக்கமும் நிலத்தோடு சேர்த்து மக்களுடைய ஆரோக்கியத்தையும் சூறையாடின. இவ்வளவுக்கும் நடுவில், எவ்வளவு மூலதனத்தைக் கொட்டினாலும் லாபம் பார்க்க முடியாது எனும் சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள் பெரும்பான்மை விவசாயிகள். முற்பகுதியில் கொண்டாடப்பட்ட பசுமைப் புரட்சிபிற்பகுதியில் மிகத் தீவிரமான விமர்சனங்களை எதிர்கொண்டது.
  • சுவாமிநாதனிடம் வெளிப்பட்ட அரிய ஒரு குணம், இந்த விளைவுகள் அத்தனைக்குமே முகம் கொடுத்தார். சூழலோடு இயைந்த, நீடித்த வளர்ச்சிக்கான வேளாண்மைக்கு அவரும் அறைகூவல் விடுத்தார். அறிவியல் தளத்தில் கண்டுபிடிப்பாளராக மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல், சமூகத் தளத்தில் விவசாயிகளுக்கான உரத்த குரலாகவும் தன்னை விரித்துக்கொண்டார்.
  • சென்ற அரை நூற்றாண்டில் இந்திய அரசு வேளாண்மை சார்ந்தும் விவசாயிகள் நலன் சார்ந்து உருவாக்கிய முக்கியமான கொள்கை முடிவுகளில் அவருடைய முத்திரை இருந்தது. வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிக்க வேண்டும். அந்த விலையானது, உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50% சேர்த்து விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்என்று இன்றைக்கு நாடு முழுக்கவுள்ள விவசாயிகள் முழங்குவது சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையம் கொடுத்த முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று!
  • சென்ற அறுபதாண்டுகளில் நிகழ்ந்திருக்கிற மாற்றங்களை நாடு அந்தந்தக் காலகட்ட நெருக்கடிகளுக்குத் தீர்வு காண உண்டாக்கிக்கொண்டவையாகவே சுவாமிநாதன் பார்த்தார். உண்மையில் வேளாண் சீர்திருத்தங்கள் சார்ந்து அவருக்கு மிக விரிவான பார்வைகள் இருந்தன. மூன்று சந்தர்ப்பங்களில் அவரை விரிவாகப் பேட்டி கண்டிருக்கிறேன். இந்தியாவில் விவசாயம் தொடர்பான பொதுப் பார்வையே மாற வேண்டும் என்பதை அந்தச் சந்தர்ப்பங்களில் திரும்பத் திரும்ப அவர் கூறியிருக்கிறார்.
  • நாம் ஏதோ நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவை உற்பத்தி செய்ய கிராம மக்கள் செய்யக்கூடிய ஒரு தொழில் என்பதுபோலத்தான் விவசாயத்தைப் பார்க்கிறோம். விவசாயம் என்பது பெரும் தொகுப்பு. இன்றைக்கும் நாட்டின் பெருவாரி மக்களுக்கு வேலை அளிக்கக் கூடிய களம் இல்லையா அது? தனியார்மயம், தொழில்மயம் என்றெல்லாம் பேசக் கூடியவர்கள் இந்தியாவிலேயே பெரிய தனியார் தொழில் விவசாயம்தான் என்று எப்போதாவது அங்கீகரித்திருக்கிறார்களா? உருவாகிவருகிற புதிய தொழில்கள் ஒவ்வொன்றும் குறைந்த ஆட்களைக் கொண்டு நிறைய பணம் ஈட்டுவதை அமைப்பாகக் கொண்டிருக்கின்றன. நமக்குத் தேவை நிறைய ஆட்களுக்கு வேலை அளிக்கும் தொழில். விவசாயம் தவிர வேறு எந்தத் துறை அப்படி இருக்கிறது?”
  • சுவாமிநாதனைப் பொறுத்த அளவில் விவசாயம் என்பது விரிந்த சொல். வயல்களும் தோட்டங்களும் பயிர்களும் மட்டும் உங்கள் நினைவுக்கு வரக் கூடாது; வனங்கள், நீர்நிலைகள், விலங்குகள், மீன்கள், பறவைகள் எல்லாமுமே இந்தச் சொல்லோடு இணைந்தவை. அமுல் நிறுவனமும் ஒரு விவசாய நிறுவனம்தான். விவசாயிகளுக்கு நம்மிடம் ஆக வேண்டியது நிதியுதவிதான் என்று நினைக்கிறது நம்முடைய அதிகார வர்க்கம். உண்மையில் நம்முடைய விவசாயிகளுக்குப் பெரும் அறிவு வளத்தையும் தொழில்நுட்பத்தையும் நாம் வழங்க வேண்டியுள்ளது. நாம் அவர்களை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறோம்.
  • இந்தப் பார்வையே கண்ணியக் குறைவானது. இதுதான் பிரச்சினையின் மையம். ஒரு விவசாயி உணவை மட்டும் உற்பத்தி செய்யவில்லை; அவர் வேலைகளை உற்பத்தி செய்கிறார்; செல்வத்தை உற்பத்தி செய்கிறார்; நாட்டின் சுயமரியாதைக்கு அவர்தான் முதுகெலும்பு. இல்லையா? அடுத்த தலைமுறைக்கான பசுமைப் புரட்சி என்பது நீடித்த வளர்ச்சியை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்; அதில் சுற்றுச்சூழல் நலன்களின் மையத்தில் விவசாயிகள் நலன் இருக்க வேண்டும்!
  • நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும். நீடித்த பசுமைப் புரட்சிக்கான முன்னத்தி தலைக்கட்டுகளில்  ஒருவராகவும் மக்கள் நினைவில் சுவாமிநாதன் நிலைத்திருப்பார்!

நன்றி: அருஞ்சொல் (12 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories