- எம்.எஸ்.கிருஷ்ணன், புவியியலாளர். நவீன இந்தியாவை வடிவமைத்த அறிவியலாளர்களில் ஒருவர். இந்தியப் புவியியல் துறையின் இயக்குநராகப் பதவியேற்ற முதல் இந்தியர். எம். எஸ். கிருஷ்ணன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மகாராஜபுரம் சீதாராமன் கிருஷ்ணன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் அருகில் மகாராஜபுரத்தில் 1898ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாளில் பிறந்தவர். உலகப் புவியியல் வரைபடத்தில் தமிழ் நாட்டுக்கு என ஒரு தனித்த இடத்தைத் தேடித் தந்தவர். 1940ஆம் ஆண்டில், பெரம்பலூரில் உள்ள சாத்தனூர் எனும் ஊரில் 18 மீட்டர் நீள முடைய கல்மரத்தைக் கண்டறிந்தவர். தற்போது அது தேசிய கல்மரப் பூங்காவாகத் திகழ்கிறது.
அரசு நிகழ்வாகக் கொண்டாடலாம்
- அக்காலத்தில் உலக அளவில் அறியப்பட்ட ஒரே இந்தியப் புவியியலாளராகப் போற்றப்பட்டவர். 2023ஆம் ஆண்டு இவருக்கு 125 ஆவது பிறந்த நாள். ஒவ்வோர் ஆண்டும் இவரது பிறந்தநாளை சாத்தனூர் கிராம மக்கள் உள்ளூர் அளவில் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்திய அரசும் இந்தியப் புவியியல் துறையும் தமிழ்நாடு அரசும் பல்வேறு ஆக்கபூர்வமான வழிகளில் அவரது பணிகளை அவரது பிறந்தநாளில் போற்றுகிற வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாக எண்ணத் தோன்றுகிறது. ஓர் உதாரணத்துக்கு எம்.எஸ். கிருஷ்ணனின் 65ஆவது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் அன்றைய புவியியல் அறிஞர்கள், ‘புவியியலிலும் புவி இயற்பியலிலும் முன்னேறும் எல்லைகள்’ என்கிற நூலை வெளியிட்டார்கள்.
- இது 500 பக்கங்கள் கொண்ட தொகுப்பு. இதில் உள்ள பல கட்டுரைகள் உலகப் புகழ்பெற்றவர்களால் எழுதப்பட்டவை. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் இந்த நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார். அத்தகைய பங்களிப்பை எம்.எஸ். கிருஷ்ணன் இந்த நாட்டுக்கு அளித்துள்ளார். அவரின் 125 ஆவது ஆண்டை இந்த நாடே கொண்டாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இன்றும் புவியியல் துறை பரவலாக அறியப்படாத துறையாகவே இருக்கிறது. குறிப்பாக ‘பாசில்ஸ்’ எனப்படும் தொல்லுயிர்ப் படிவங்கள் குறித்த முழுமையான புரிதல் அனைவரையும் சென்றடையவில்லை. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் ஒரு காலத்தில் கடலாக இருந்தன. தற்போதைய அரியலூர் மாவட்டத்தில்தான் டைனசோர் முட்டை கண்டறியப்பட்டது.
- மேலும், சுண்ணாம்புச் சுரங்கங்கள் மூலமாகத் தொடர்ந்து பல்வேறு ‘தொல்லுயிர்ப் படிமங்கள்’ அழிக்கப்பட்டு வருகின்றன. சுண்ணாம்புச் சுரங்கம் தோண்டும்போது கிடைக்கும் படிவங்கள்கூடப் பாதுகாக்கப்படுவதில்லை. இந்நிலையில் எம்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவரது பிறந்தநாளில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் ‘தொல்லுயிர்ப் படிவங்கள்’ குறித்த புரிதலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் இவரது பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிடலாம். ஒவ்வோர் ஆண்டும் அரசு நிகழ்வாகவும் மக்கள் நிகழ்வாகவும் அமைந்தால் சிறப்பாக அமையும்.
முதல் இந்திய இயக்குநர்
- எம். எஸ். கிருஷ்ணன், பள்ளி, கல்லூரிகளில் அறிவுக்கூர்மையுடன் விளங்கியவர். 1919ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியல் துறையில் பட்டம் பெற்றார். ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலாந்தில் உயர்கல்வி படிப்பதற்கான ‘அசோசியேட்ஷிப்’ பெற்றார். 1921ஆம் ஆண்டில் இம்பீரியல் அறிவியல் - தொழில் நுட்பக் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1924ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். 26 வயதில் முனைவர் தகுதியோடு புவியியலாளர் பதவிக்கு நேரடி நியமனம் பெற்ற முதல் இந்தியர் என்கிற சிறப்புக்கு உரியவர். இந்தியப் புவியியல் துறையின் இயக்குநராக 1951ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவர். 1955 வரை இயக்குநர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டார். புவியியல் பேராசிரியராக இந்திய அரசு சார்பில் பல்வேறு கல்லூரிகளிலும் பணிபுரிந்துள்ளார்.
- இந்தியத் துணைக்கண்டம் குறித்த முழுமையான ஆவணமாக ‘இந்தியா, பர்மா புவியியல் அமைவு ஓர் அறிமுகம்’ என்கிற நூலை 1943இல் வெளியிட்டார். அந்நூல் பல பதிப்புகளைக் கண்டது. மேலும், இது ரஷ்ய மொழியிலும் வெளியாகியிருக்கிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியப் புவியியல் துறையின் தென் மண்டல அலுவலகத்தைத் தொடங்கினார். 1956ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டின் பொது அமர்வுக்குத் தலைமை வகித்த சிறப்புக்குரியவர். ‘ஜிஎஸ்ஐ மெமோயர்’ எனப்படும் புவியியல் ஆய்வுகளை நூல்களாக 1937ஆம் ஆண்டில் 71ஆம் வெளியீட்டையும், 1952இல் 80 ஆம் வெளியீட்டையும் வெளியிட்டார். நிலக்கரிச் சுரங்கங்களைத் தேசியமயமாக்கப் பரிந்துரைத்தவர்.
- எம்.எஸ். கிருஷ்ணன் இயக்குநராக இருந்த காலத்தில்தான் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி, கர்நாடகத்தில் ஹட்டி என்கிற இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்டும் திட்டங்கள் முழுமை பெற்றன. நாட்டுக்கும் புவியியல் அறிவியலுக்கும் அவர் ஆற்றிய சிறப்புமிக்க சேவைகளைப் பாராட்டும் வகையில் டாக்டர் கிருஷ்ணனுக்கு 1970 ஜனவரியில் இந்திய அரசால் ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது உடல்நலமின்றி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் .1970 ஏப்ரல் 24 ஆம் தேதி தமது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். மாபெரும் அறிஞராக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த மனிதநேயமிக்க பண்பாளராகவும் திகழ்ந்தவர். பலருக்கும் பல வழிகளில் உதவியுள்ளார். உயர்ந்த பதவியில் இருந்தபோதும் தமது பதவிக்காலம் முடியும் முன்பே விருப்ப ஓய்வு பெற்று, தாம் விரும்பிய கற்பிக்கும் பணிக்குத் திரும்பியவர். அத்தகைய ஆசானை, அறிஞரை நினைவில் வைப்பது ஒரு நாட்டின் கடமை. நமது கடமையும் ஆகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2023)