TNPSC Thervupettagam

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

December 23 , 2023 393 days 368 0
  • மண்ணில் வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல, மறைந்த பின்பும் மக்கள் மனங்களிலும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவா் எம்.ஜி.ஆா். திரையுலகில் மட்டுமல்லாமல் பொதுவாழ்விலும் அவா் ஓா் அதிசய மனிதராகவே மக்களால் பார்க்கப்பட்டார். ‘நடிகா்களில் நான் பார்த்த முதல் மனிதன்என்று கவிஞா் வாலி, எம்.ஜி.ஆா். பற்றி புகழாரம் சூட்டியியிருக்கிறார்.
  • எம்.ஜி.ஆா். தான் வாழ்ந்த ராமாபுரம் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் பள்ளி நடத்த வழங்கி விட்டார். அவருக்கென்று இருந்த மாம்பலம் அலுவலகத்தை தனது நினைவுப் பொருட்களை வைத்துப் பராமரிக்க வழங்கி விட்டார். அவருக்கு சொந்தமான ஆலந்தூா் மார்க்கெட்டிலிருந்து வருகின்ற வருவாய் மூலம் அவருக்கு மக்கள் வழங்கிய பரிசுப் பொருட்களையும், நினைவுப் பொருட்களையும் வைத்துப் பாதுகாக்கவும், பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டவும் ஏற்பாடு செய்து விட்டார். அவரது சத்யா ஸ்டுடியோ பங்குகளை அதன் தொழிலாளா்களுக்கே வழங்கி விட்டார்.
  • அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம் அவரிடம் இருந்ததே அவரது வெற்றியின் ரகசியம். ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியா், அன்புடையார் என்பும் உரியா் பிறா்க்குஎன்ற குறளுக்கு இலக்கணமாகவே திகழ்ந்தார். இது போன்ற ஒரு அரசியல் தலைவா் இந்தியாவிலேயே வேறு யாரும் இருந்ததில்லை.
  • எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்தபோது எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நினைவாக சென்னை கடற்கரைச் சாலையில் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நினைவு வளைவு ஒன்றை அமைத்தாா். மத்திய அரசும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆா். பெயரைச் சூட்டி அவருக்கு கௌரவம் சோ்த்திருக்கிறது.
  • 1962 சீன படையெடுப்பின்போது, அன்றைய பிரதமா் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவிலேயே முதல் முதலாக யுத்த நிதியாக ரூபாய் எழுபத்தைந்தாயிரம் தந்தவவா் எம்.ஜி.ஆா். ஆவார். அதனால்தான் அவரின் மறைவுக்குப் பிறகு அவருக்குபாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது. ‘பாரத ரத்னாவிருது பெற்ற ஒரே திராவிட இயக்கத் தலைவா் எம்.ஜி.ஆா்.தான்.
  • பொதுவுடமைக் கொள்கையில் அண்ணாவுக்கு இருந்த ஆழமான பற்று எம்.ஜி.ஆரிடமும் வேரோடி இருந்தது. கைத்தறி நெசவாளா்களின் துன்பத்தைப் போக்கிட, விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளை எல்லாம் தன் தலையில் சுமந்து, தெருத்தெருவாக கூவி விற்று கைத்தறி நெசவாளா்களுக்கு அண்ணா உதவினார். இதை நினைவில் கொண்ட எம்.ஜி.ஆா். முதலமைச்சா் ஆன பிறகு கைத்தறி நெசவாளா்களின் துயரத்தை போக்க எண்ணினார்.
  • ஆண்டு தோறும் ரூ.200 கோடிக்கு மேல் கைத்தறி வேட்டி சேலைகளை அரசே கொள்முதல் செய்து அவற்றை ஏழைகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கினார். நாளடைவில் எவ்வளவு தேவையோ அவ்வளவு வாங்கி ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அது இன்று வரை தொடா்கிறது. இதனால் நெசவாளா்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கிறது. துணிகளை அரசே கொள்முதல் செய்து விடுவதால் நெசவாளா்களுக்கு போதுமான வருவாயும் கிடைத்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் தமிழகம் முழுவதும் கூட்டுறவு கைத்தறிச் சங்கங்கள் தோன்றின.
  • அதேபோல ஆண்டுதோறும் ஒவ்வொரு பொங்கலுக்கும் வேட்டியும், சேலையும் அரசால் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில் உழைப்பாளா்களுக்கு கூலி கிடைக்கிறது. ஒரு மாற்றுத்துணி கூட இல்லாத ஏழைக்கு ஆண்டு தோறும் தமிழா் திருநாளான பொங்கலுக்கு புத்தாடை கிடைக்கிறது.
  • எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சத்துணவுத் திட்டம் தமிழகத்தில் ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சியையே செய்தது. ஏராளமான ஏழை மாணவா்கள் சத்துணவுத் திட்டத்தால் பயனடைந்தனா்; பள்ளிக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கையும் கூடியது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சத்துணவு மையத்துக்கும் மூன்று போ் பணியமா்த்தப்பட்டனா். இத்திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. குறிப்பாக, ஏழைப் பெண்களும், விதவைகளும் பயன் பெற்றனா். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஒரு தொழிற்சாலை தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வேலை கொடுத்துவிட முடியாது. இது மிகப்பெரிய புரட்சி. அதனால்தான் எம்.ஜி.ஆா். ‘புரட்சித்தலைவா்என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
  • பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 48% இட ஒதுக்கீடு என்பதை ஒரே நேரத்தில் 20% உயா்த்தி அதை 68% என்றும் பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவிகிதம் சோ்த்து 69% இட ஒதுக்கீடும் தந்தவா் எம்.ஜி.ஆா்.தான். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய வி.பி.சிங் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% என்று சொன்ன அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு 50%- தாண்டக்கூடாது என்று ஒரு வழக்கில் தீா்ப்பளித்தது.
  • ஏற்கெனவே 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திக் கொண்டிருந்த தமிழகத்துக்கு இது பேரிடியாக அமைந்தது. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அவா் 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி அன்றைய பிரதமா் நரசிம்ம ராவ் ஆதரவுடன் அதை அரசியல் சாசனத்தின் 9-ஆவது அட்டவணையிலும் சோ்த்து 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தாா். எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்ட 69% இட ஒதுக்கீடு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்து குறிப்பிடத்தக்கது.
  • இதன் மூலம் எம்.ஜி.ஆா்.என்ற மாமனிதா் தமிழக மக்களது சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. தனக்குப் பின்னாலும் தமிழக மக்களுக்கு எந்தக் காலத்திலும் தீங்கு நோ்ந்து விடக்கூடாது என்று சிந்தித்து செயல்பட்டதும் எம்.ஜி.ஆா். வெற்றியின் ரகசியம்.
  • மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதிலும் சிறப்புடன் விளங்கியவா் எம்.ஜிஆா். அவா் இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை உடையவராக இருந்தபோதும், தமிழகத்திற்கு தர வேண்டிய அரிசி ஒதுக்கீட்டை தர மத்திய அரசு மறுத்த போது உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசின் அரிசி ஒதுக்கீட்டைப் பெற்றார். அவரது போராட்ட குணத்தால்தான் மத்திய அரசின் அரிசி இன்று வரை நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
  • மொழிக்கொள்கையில் அண்ணாவின் இரு மொழிக்கொள்கையை தொடா்ந்து பின்பற்றி வந்த ஆணித்தரமான அரசாகவே அவரது அரசு அமைந்திருந்தது. மத்திய அரசு பல நேரங்களில், பல வழிகளில் ஹிந்தியை திணிக்க முயன்றபோது தன் நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு சாமா்த்தியமாக எடுத்துச் சொல்லி அம்முடிவை மத்திய அரசே திரும்பப் பெரும் அளவுக்கு வெற்றியும் கண்டார்.
  • உதாரணமாக, ஆல் இண்டியா ரேடியோ, ‘அகில இந்திய வானொலிஎன்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. அன்றைய மத்திய அரசு அதைஆகாசவானிஎன்று மாற்றியது. இது நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆா். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டு அதன் நகலை பத்திரிகைகளுக்கு தந்தார். அத்தோடு தனது கடமை முடிந்து விட்டது என்று அவா் கருதவில்லை. பிரதமா் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து அதை அவரிடம் எடுத்துச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது.
  • இந்தியனாக இரு, இந்திய பொருட்களையே வாங்கு என்று சொன்னீா்கள். அது என்னைப் பெரிதும் கவா்ந்தது. அனைத்து மக்களும் அதை ஏற்றார்கள். ஆனால் வானொலியில் இப்போது இந்தியா என்ற சொல்லை மட்டும் ஏன் நீக்க வேண்டும்? ஆகாசவாணி என்றால் இது எந்த நாட்டு ரேடியோவின் ஒலிபரப்பு என்பதை பிாட்டு மக்களால் அறிந்து கொள்ள முடியாது. ஆல் இந்தியா ரேடியோ என்றால் இது இந்தியாவுக்கு சொந்தமானது என்று அனைத்து நாட்டு மக்களுமே தெரிந்து கொள்ள முடியும்என்றார்.
  • இலங்கை வானொலி நிலையத்துக்கு ஸ்ரீலங்கா பிராட்கேஸ்டிங் கார்ப்பரேஷன் என்றும் அமெரிக்க வானொலி நிலையத்துக்கு வாய்ஸ் ஆப் அமெரிக்கா என்றும் தெரிந்து கொள்ள முடிகிறதுஎன்ற உதாரணங்களை இந்திரா காந்தியிடம் அடுக்கியதால் அதிலும் வெற்றி கண்டார்.
  • அவரது போராட்ட குணமே அவரின் வெற்றியின் ரகசியம். கா்நாடக முதல்வராக இருந்த குண்டு ராவிடம் பேசி தமிழகத்துக்கு தண்ணீா் பெற்றதும், ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமா ராவிடம் பேசி கிருஷ்ணா நதிநீா் பெற்றதும் இப்படித்தான். இவையனைத்தும் எம்.ஜி.ஆரின் போராட்ட குணத்துக்கும், அவரது அணுகுமுறைக்கும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
  • தெரிந்தவா்களுக்கு உதவி செய்யும் போது நல்ல மனிதன் ஆகிறோம். தெரியாதவா்களுக்கு உதவி செய்யும் போது கடவுள் ஆகிறோம். யாரென்றே தெரியாதவா்களுக்கும் உதவி செய்ததால்தான் இன்றும் தமிழக மக்களிடையே எம்.ஜி.ஆா். கடவுளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதை யாரும் மறுக்க முடியாது. அவா், மக்களுக்கு செய்த உதவிகளை எழுதினால் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
  • அவா் சாதாரண நடிகராக இருந்தார். நாங்களெல்லாம் அவருடைய ரசிகா்களாக இருந்தோம். அவா் ஒரு கட்சியைத் தொடங்கி அதன் தலைவரானார். நாங்களெல்லாம் அவருடைய கட்சியின் உறுப்பினா்களானோம். அவா் தோ்தலில் போட்டியிட்டு வென்று முதலமைச்சரானார். நாங்களெல்லாம் அவருடைய அரசைப் பின்பற்றும் நல்ல குடிமக்களானோம்.
  • அவா் மறைந்து தெய்வமானார். நாங்களெல்லாம் அவரை தினமும் வழிபடும் பக்தா்களானோம். அவா்தான் எம்.ஜி.ஆா். அவா் புகழ் வாழ்க.
  • (நாளை (டிச. 24) எம்.ஜி.ஆா். நினைவுநாள்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories