TNPSC Thervupettagam

எலத்தூர் குளத்திற்கு வருகை தரும் கூம்பலகன் பறவைகள்

February 15 , 2025 4 days 27 0

எலத்தூர் குளத்திற்கு வருகை தரும் கூம்பலகன் பறவைகள்

  • ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளம் தமிழ்நாட்டின் அதிக பல்லுயிர்கள் வாழும் சூழலியல் முக்கியம் பெற்ற இடங்களில் ஒன்றாகும். மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் நெடுந்தூரம் பயணித்து அரிதாக வலசை வரும் செந்தலைக் கூம்பலகன் (Red headed bunting) மற்றும் கருந்தலைக் கூம்பலகன் (Black headed bunting) பறவைகள் எலத்தூர் குளத்திற்கு வருகை தந்துள்ளன. இப்பறவைகளின் வருகை முதன்முறையாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
  • கூம்பைப் போன்ற அலகை கொண்டதால் இப்பறவைகள் தமிழில் கூம்பலகன் என அழைக்கப்படுகின்றன. உருவில் சிட்டுக்குருவி போன்று காணப்படும் இவற்றில் உலகளவில் 44 இனங்கள் உள்ளன. இவை பாடும் பறவைகள் வகையை சார்ந்தவை (Oscines). திறந்தவெளி புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், புதர்வெளிகள், காடுகளின் இணையும் பகுதிகளில் (ecotones) இவை பரவலாகக் காணப்படுகிறது. விதைகள், தானியங்கள் உண்டு வாழும் இப்பறவைகள், இனப்பெருக்க காலங்களில் புரதத் தேவைக்காக புழு பூச்சிகளையும் உணவாக கொள்கின்றன.
  • குளிர் நிறைந்த கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, வடமேற்கு ஆசியா நாடுகளில் இனப்பெருக்கம் செய்யும் இப்பறவைகளில் 21 இனங்கள் நமது நாட்டிற்கு செப்டம்பர் மாதம் முதல் குளிர்கால வலசை (Winter migration) வருகின்றன. இதில், 4 இனங்கள் தமிழ்நாட்டில் வலசை வந்து செல்வது இதுவரை பதிவாகியுள்ளது. 15-16 செமீ நீளம் கொண்ட செந்தலைக் கூம்பலகன் (Red headed bunting) பறவையின் வால், உடல் பகுதியை தாண்டி வெளியே சற்று நீண்டு இருக்கும். இனப்பெருக்க காலங்களில் (Breeding plumage) ஆண் பறவைகளின் தலையும் மார்புப் பகுதியும் செம்பழுப்பு நிறத்திலும், பிடரி மற்றும் உடலின் அடிப்பாகம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
  • இப்பறவைகள் வலசை காலத்தில் காடுகளின் வெளிப்புற பகுதிகள், ஆறுகள், தோப்புகள், தோட்டங்கள், உயர்ந்த புதர்களில் வாழும்.‌ செப்டம்பர் மாதம் முதல் வலசை வரத் தொடங்கும் இப்பறவைகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திரும்பி விடுகின்றன. கருந்தலைக் கூம்பலகன் (Black headed bunting) 15.5 – 17.5 செமீ அளவுடைய இனப்பெருக்க கால ஆண்கள் கருநிற தலை, மஞ்சள் உடல், பழுப்பு நிற சிறகுகளை உடையவை. வலசை காலம், வாழுமிடம், உணவுப்பழக்கம் கிட்டத்தட்ட செந்தலைக் கூம்பலகன் ஒத்தது. இவ்விரண்டு பறவைகளின் கலப்பினமும் (Hybrid) பதிவாகி உள்ளது.
  • எலத்தூர் குளம் அருகே செந்தலைக் கூம்பலகன் (Red headed bunting) மற்றும் கருந்தலைக் கூம்பலகன் (Black headed bunting) முதன்முறையாக பதிவாகி உள்ளன. இவ்விரண்டு பறவைகளையும் கோபியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மணி எலத்தூர் குளத்திலும், குளத்தின் மிகை நீர், நிரம்பி வெளியேறும் நீர் வழித்தடத்திலும் பதிவு செய்துள்ளார்.
  • இதுவரை 567 வகையான உயிரினங்கள் வாழ்வதாக அறியப்பட்டுள்ள எலத்தூர் குளத்தை அரசு சிறப்பு கவனம் செலுத்தி விரைவாக பாரம்பரிய பல்லுயிர் தளமாக நாகமலையுடன் இணைத்து அறிவிக்க வேண்டும் என சூழலியலாளர்களும், எலத்தூர் பல்லுயிர் மேலாண்மை குழுவும், ஊர் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories