- அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் உயிரினம் எலி. அதன் கீச்... கீச்... ஒலி ஒரு முழுமையான சிம்பொனி என்று டோக்கியோ பல்கலைக் கழகத்தின் நரவோ திமுரா கூறினார். இந்தப் பூமியில் நடக்கும் பல உரையாடல்கள் நம் காதுகளை எட்டுவதில்லை. அது போலவேதான் இதுவும்.
- 2018ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வின்படி, எலிகள் மனிதர்கள் கேட்க முடியாத அல்ட்ராசோனிக் அதிர்வெண்களில் அதாவது (20 கிலோ ஹெர்ட்ஸுக்கு மேல்) தொடர்புகொள்கின்றன. இந்த ஒலிகள் 50 கிலோஹெர்ட்ஸ் வரை செல்லக்கூடும்.
- 22 கிலோஹெர்ட்ஸ் அளவில் உள்ள சத்தம் அச்சுறுத்தல் அல்லது அபாயத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு பூனை அல்லது பாம்பைக் கண்டால் அனைத்து எலிகளும் அதனைத் தெரிந்துகொள்ள இந்த அதிர்வெண்ணில் சத்தமிடுகின்றன. அதே 50 கிலோஹெர்ட்ஸ் என்றால் சந்தோஷம், ஆர்வம் அல்லது நல்ல உணவு கிடைத்திருப்பதைக் குறிக்கிறது. ஓர் எலி சுவையான உணவைக் கண்டறிந்தால், அது இந்த அதிர்வெண்ணில் ஒலி எழுப்பி மற்ற எலிகளை அழைக்கும்.
- 40 கிலோஹெர்ட்ஸ் ஒலி சமூகத் தொடர்புகளை ஏற்படுத்தப் பயன்படுகிறது. எலிகள் ஒன்றுக்கு மற்றொன்று அறிமுகமாகும்போது அல்லது சமூக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும்போது இந்த அதிர்வெண்ணில் உரையாடுகின்றன. காதுகளின் இயக்கம் மற்றும் முக பாவனைகள் மூலமும் அவை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதுகளை முன்னோக்கி நகர்த்தினால் ஆர்வமுடன் இருக்கின்றன என்று அர்த்தம். அதே பின்னோக்கி நகர்த்தினால் அச்சத்தைக் குறிக்கும்.
- மூக்கு மற்றும் உதடுகளின் அசைவுகள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட முகபாவனை மாற்றங்களை ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இவை ஒவ்வொன்றும் அவற்றின் உணர்வு நிலைகளைப் பிரதிபலிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஓர் எலி மகிழ்ச்சியாக இருக்கும்போது, மூக்கின் நுனிப் பகுதியில் துடிப்பு அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அச்சம் அல்லது கோபத்தின்போது கன்னங்கள் இறுக்கமாகும். அதாவது ஓர் எலி தனது மூக்கைச் சுருக்கி, உதடுகளை அசைத்து, காதுகளை முன்னும் பின்னும் அசைக்கும்போது, அது ஒரு நீண்ட வாக்கியத்தைச் சொல்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
- ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் நியூரோலாஜிகல் ரிசர்ச் நடத்திய ஆய்வின்படி, எலிகளின் வால் இயக்கங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஓர் எலி ஆபத்தை உணரும்போது, அதன் வால் இடவலமாக வேகத்துடன் அசைகிறது. புதிய இடத்தை ஆராயும்போது, அவை தங்கள் வாலை மெதுவாக, வளைவாக அசைக்கின்றன. எலிகள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, குறிப்பாக நல்ல உணவைப் பெறும்போது அவற்றின் வால் சுழலும்.
- "எலிகள் தங்கள் வாசனை குறிப்புகளைப் பயன்படுத்தி ஒரு முழுப் புத்தகத்தை எழுதுகின்றன" என்கிறார் ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக் கழகத்தின் லிசா அண்டர்சன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒரு கதை உள்ளது. உப்சாலா குழுவின் 2019 ஆம் ஆண்டு ஆய்வில், எலிகள் தங்கள் சிறுநீரில் குறைந்தது 50 வெவ்வேறு வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி தகவல் தொடர்புகொள்வதைக் கண்டறிந்தனர்.
- எலிகளின் மூக்கில் உள்ள வோமரோனாசல் பகுதி (VNO) வாசனைகளை உணர முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண் எலிகள் இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருக்கும்போது வெளியிடும் குறிப்பிட்ட வாசனைகள், ஆண் எலிகளை ஈர்க்கின்றன. ஒவ்வோர் எலிக்கும் ஒரு தனித்துவமான ’வாசனை கையொப்பம்’ உள்ளது. இது குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண உதவுகிறது. அச்சம், கோபம் அல்லது மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வாசனைகள் மூலம் வெளிப்படுத்துகின்றன. ஓர் எலி உணவைக் கண்டறிந்தால், அது வாசனைத் தடங்களை விட்டுச் செல்கிறது.
- இது மற்ற எலிகளுக்கு உணவு இருக்கும் இடத்தைக் காட்டுகிறது. ஆபத்து இருக்கும் இடங்களில் எலிகள் தங்கள் எச்சரிக்கையை வாசனை வழி விட்டுச் செல்கின்றன.
- ஓர் எலி உணவு கிடைக்கும் இடத்தைக் கண்டறிந்தால், அது மற்ற எலிகளுக்கு இரண்டு வழிகளில் தகவல் அளிக்கிறது. குறிப்பிட்ட ஒலி அழைப்புகள் மூலமும் உடல் அசைவுகள் மூலமும் உணவு இருக்கும் திசையைக் காட்டுகிறது. இரண்டாவதாக, உணவு இருக்கும் இடத்திற்கு வழிகாட்டும் வாசனைத் தடங்களை உருவாக்குகிறது. இது ஒரு வரைபடம் போலச் செயல்பட்டு, மற்ற எலிகளை நேராக உணவு இருக்கும் இடத்திற்கு வழிநடத்துகிறது.
- எலிகள் 70 நாள்கள் வரை தகவல்களை நினைவில் வைத்திருக்கும் திறன்கொண்டவை. இது அவற்றின் வாழ்நாளில் கணிசமான காலம். இந்த நினைவாற்றல் உணவு இருக்கும் இடங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் ஆபத்தான பகுதிகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.
- 2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி ஓர் எலி புதிய உணவை உண்பதை மற்றொன்று கவனித்தால், அதுவும் அந்த உணவை உண்பதற்கான வாய்ப்பு 85% அதிகரித்தது. இதன் மூலம் பிற எலிகளின் அனுபவங்களைக் கவனித்துப் புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ளும் திறன் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவை தங்கள் அனுபவங்களை ஒன்றுக்கு மற்றொன்று பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடையவை என்பதும் தெரியவந்துள்ளது.
- இந்தச் சமூகக் கற்றல்திறன் குறிப்பாக இளம் எலிகளுக்கு முக்கியமானது. இது உணவு தேடுதல், ஆபத்துகளைத் தவிர்த்தல், சமூக நடத்தைகளைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. வயதான எலிகள் இளம் எலிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆபத்தான உணவு வகைகளை அடையாளம் காணக் கற்பிக்கின்றன.
- பார்வைக்கு எளிமையானவை போல் தோன்றினாலும், எலிகள் உண்மையில் மிகவும் நுட்பமான மற்றும் பல அடுக்கு தகவல் தொடர்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒலி, வாசனை, உடல் அசைவுகள், கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி, இந்தச் சிறிய உயிரினங்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 03 – 2025)