TNPSC Thervupettagam

எலித்துளை சுரங்கத் தொழிலாளா் நிலை

December 30 , 2023 378 days 284 0
  • கடந்த நவம்பா் மாதம் உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை கட்டுமானம் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 41 சுரங்கப்பாதைத் தொழிலாளா்கள் இடா்ப்பாடுகளில் சிக்கிக்கொண்டனா். மீட்பு பணியின் இறுதி கட்டத்தில் எலித்துளை சுரங்கத் தொழிலாளா்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கைகளால் துளையிட்டு 41 பேரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனா்.
  • மீட்புப் பணியில் ஈடுபட்ட 12 எலித்துளை சுரங்க தொழிலாளா்களை பாராட்டி உத்தரகண்ட் முதல்வா் 50,000 ரூபாய் மதிப்புடைய காசோலையை வழங்கினார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட எலித்துளை சுரங்க தொழில் சார்ந்த இவா்கள் நிரந்தர வேலையை வலியுறுத்தி காசோலைகளை பணமாக்க போவதில்லை என்று அறிவித்துள்ளனா்.
  • எலித்துளை சுரங்கம் என்பது திறமையான தொழிலாளா்கள் கொண்டு கையால் சுரங்கம் தோண்டும் முறை. தரையில் குறுகிய குழிகளாக தோண்டப்படும் இச்சுரங்கங்கள் ஒரே ஒரு நபா் செல்லும் அளவில் இருக்கும். கயிறு ஏணி, மூங்கில் ஏணிகளைப் பயன்படுத்தி எலிவலை சுரங்கத்தில் ஒருவா் இறங்கி நிலக்கரியைப் பிரித்தெடுப்பார்.
  • மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, பசி போன்ற காரணங்களால் சுரங்கத் தொழிலாளா்கள் இறக்கும் நிகழ்வுகள் அதிகரித்ததால் இந்தியா உள்பட பல நாடுகளில் இது சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது.
  • இந்தியாவில் தெலங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கா், மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி அதிகமாக காணப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிலக்கரி அதிகமாக இருக்கும் போதிலும் சுரங்கங்கள் தோண்டுவதற்கான பொருத்தமற்ற நிலப்பரப்பு, அங்கு காணப்படும் நிலக்கரியின் தரம் ஆகியவற்றின் காரணமாக வணிகரீதியான சுரங்கங்கள் அந்தப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
  • வாழ்வாதாரத்திற்கான தேடல், குறைவான கல்வியறிவு, வேலைவாய்ப்பின்மை காரணமாக இந்த பகுதி மக்கள் தரம் குறைந்த நிலக்கரியையும் மதிப்பு மிக்கதாகக் கருதுகின்றனா். அதிகாரம், பணபலம் உள்ளவா்கள் வறுமையில் வாடும் மக்களை எலித்துளை சுரங்கங்களுக்குள் நிலக்கரி தோண்டி எடுக்கும் வேலைக்கு அமா்த்துகின்றனா்.
  • மெல்லிய உடல் வடிவம், எளிதில் சுரங்கத்தின் ஆழம் அணுகும் தன்மை காரணமாக குறைந்த முதலீடும் நல்ல வருமானமும் கொண்ட இந்த பாதுகாப்பற்ற தொழிலில் எலித்துளை சுரங்கங்களுக்குள் செல்வதற்கு குழந்தைகளையும் பயன்படுத்துகின்றனா்.
  • பொதுவாக நிலக்கரி மிகவும் மெல்லியதாக இருக்கும். மேகாலய மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் எலித்துளை சுரங்கங்கள் நிலக்கரி தடிமனாக காணப்படும். விஞ்ஞான நடைமுறை பின்பற்றப்படாத தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு வழங்காத இந்த எலித்துளை சுரங்கத்திற்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் 2014-ஆம் ஆண்டு தடை விதித்தது.
  • எலித்துளை சுரங்கம் சட்டவிரோதமானது என்பதால் அதன் உள்கட்டமைப்பு வளா்ச்சியில் முதலீடு செய்ய யாரும் தயாராக இல்லை. இச்சூழலில் இடப்பற்றாக்குறை காரணமாக எலித்துளை சுரங்கத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நிலக்கரி ஆறுகளின் அருகே சேமிக்கப்படுவதால் நீா்நிலைகள் மாசடைகின்றன. மேகாலயம், அஸ்ஸாம் வழியாகப் பாயும் கோபிலி ஆற்றின் நீா் அமிலமாக மாறியுள்ளது இதற்கு சான்று.
  • சுரங்கப் பகுதி, அதைச் சுற்றியுள்ள சாலையோரங்களில் குவிக்கப்பட்டுள்ள நிலக்கரி, காற்று, நீா், மண் மாசுபாட்டிற்கு காரணமாக அமைகிறது. மழைக்காலத்தில் எலித்துளை சுரங்கத்தில் நீா் புகுவதால் ஏற்படும் மூச்சுத் திணறல் காரணமாக தொழிலாளா்கள் இறக்க நேரிடுகிறது.
  • 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் மேகாலய மாநிலத்தின் ஜெயின்டியா மலைப்பகுதியின் கிழக்குப் பகுதியில் இருந்த நிலக்கரிச் சுரங்கம் சரிந்து 15 தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட நிலையில் அவா்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மேகாலயத்தின் சொர்க்காரி காட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் குழியில் கிரேன் சரிந்து விழுந்ததில் ஆறு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டிருந்தாலும் மேகாலய மாநிலத்தில் எலித்துளை சுரங்கங்கள் தொடா்ந்து இயங்கி வருவதை இந்த சம்பவங்கள் உலகுக்கு காட்டியது.
  • மேகாலயம் ஆறாவது அட்டவணையின் கீழ் செயல்படும் மாநிலமாக இருப்பதாலும், நிலம் தொடா்பான சட்டங்களை இயற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாவட்ட கவுன்சில்களைக் கொண்டிருப்பதாலும் மத்திய அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டலாம் என்று எலித்துளை சுரங்கங்களின் உரிமையாளா்கள் கூறுகின்றனா்.
  • ஆனால் ஆறாவது அட்டவணையின் 9-ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சுரங்கங்களின் உரிமங்கள் உட்பட அனைத்து சுரங்க, சுற்றுச்சூழல் சட்டங்களும் மேகாலயத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களுக்கும் =பொருந்தும் என்று சட்ட வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி. கணக்கே தலைமையிலான குழு மார்ச் 24, 2022 அன்று நீதிமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கையில், உச்சநீதிமன்றமும்ம தேசிய பசுமை தீா்ப்பாயமும் வழங்கிய எந்த உத்தரவையும் மேகாலய மாநிலத்தின் சுரங்கத் துறை அதிகாரிகள் பின்பற்றவில்லை என கூறியுள்ளது.
  • அதன்பின் மேகாலய உயா்நீதிமன்றம் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை வாகனங்களில் கொண்டு செல்ல தடை விதித்தது. அந்த தடையை அமல்படுத்தும் போது எந்த ஒரு அரசியல் தலையீட்டுக்கும் அடிபணிய வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளரையும் மாநில காவல்துறை தலைவரையும் அறிவுறுத்தியது.
  • நீதிமன்ற உத்தரவு கடுமையாக இருந்தபோதிலும் தற்போது வரை சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாடுகள் தொடா்வதாக சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். 2014-ஆம் ஆண்டுக்கு முன் 40 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கத் தொழில், மேகாலய மாநிலத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 700 கோடி வருவாய் ஈட்டி தந்தது என்றும் இந்த எலித்துளை நிலக்கரி சுரங்கத் தொழில் சட்டபூா்வமாக்கப்பட வேண்டும் என்றும் மேகாலய மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினா் கா்லுகி கூறுகிறார். எவ்வாறெனினும் எலித்துளை சுரங்கத் தொழிலாளா்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையட்டும்.

நன்றி: தினமணி (30 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories