TNPSC Thervupettagam

எல்.இளையபெருமாள்: பண்பாட்டு மூலதன மீட்பர்

June 26 , 2023 570 days 380 0
  • கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.06.1924 அன்று பிறந்த இளையபெருமாளின் நூற்றாண்டு, இன்று (ஜூன் 26) தொடங்குகிறது. சிறுவயது முதலே சுயமரியாதையும் சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல் மூன்று முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1980இல் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
  • 1945இலிருந்தே சமூகப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துப் போராடிவந்த இளையபெருமாள், 1952இல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். துணிச்சலும் அறிவாற்றலும் நிரம்பிய அவரது பேச்சு, ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.
  • அதனால், 1965இல் இந்திய அளவில் ஆதிதிராவிட மக்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தியா முழுவதும் பயணம் செய்து பட்டியல் சாதி மக்களின் நிலையை ஆராய்ந்து 431 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 1969இல் அவர் சமர்ப்பித்தார். மத்திய அரசு 1989இல் இயற்றிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டம் ஆகியவை இளையபெருமாள் குழு அறிக்கையின் பரிந்துரைகளால் விளைந்தவை.

முதன்மையான பங்களிப்பு:

  • தலித் மக்களின் பண்பாட்டு மூலதனத்தை மீட்பதற்காக இளையபெருமாள் நடத்திய போராட்டங்களை அவரது முதன்மையான அரசியல் பங்களிப்பு எனலாம். 1901ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின் முன்னுரையில், சென்னை மாகாணத்தில் வாழ்கிற பறையர் சமூகத்தினர் குறித்துப் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: ‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் பறையர் என்ற பெயர் எங்கும் இல்லை. எயினர் என்ற தொல்குடி பற்றிய விவரங்கள்தான் இருக்கின்றன. அவர்கள் பிற மக்களிடமிருந்து வேறுபட்டவர்களாக, கிராமங்களில் வாழாமல் தமக்கென்று கோட்டைகள் கட்டிக்கொண்டு அதில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப்படுகின்றனர்.
  • ஆம்பூர், வேலூர் முதலான இடங்களில் அத்தகைய கோட்டைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பறையர் சமூகத்தினரின் முன்னோர்களாக அவர்களே இருந்திருக்க வேண்டும். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்தச் சமூகம் பற்றிக் கூறப்பட்ட விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, இது உயர்ந்த நிலையிலிருந்த ஒரு சமூகமாக இருந்தது, தற்சார்பு கொண்ட சமூகமாக இருந்தது என்பது தெரிகிறது’. அவ்வாறு இருந்த சமூகம் எப்படி வீழ்த்தப்பட்டது என நாம் சிந்திக்க வேண்டும்.
  • பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்திய சாதி அமைப்பு, சமூகப் படிநிலையை மட்டுமின்றிப் பண்பாட்டுப் படிநிலையையும் உருவாக்கி வைத்துள்ளது. தலித் மக்கள் தங்க நகைகள் அணியக் கூடாது, நல்ல உடைகளை உடுத்தக் கூடாது, காரை வீடுகளைக் கட்டக் கூடாது எனத் தடைகள் விதிக்கப்பட்டன. சமூகத்தால் இழிவானவை எனக் கருத்தப்பட்ட தொழில்கள் அவர்கள்மீது வலிந்து திணிக்கப்பட்டன.
  • பறை அடித்தல், இறந்த விலங்குகளை அகற்றுதல், ஈமக் கடன்களைச் செய்தல் முதலான இழிதொழில்கள் அதனால்தான் அவர்கள்மீது சுமத்தப்பட்டன. பின்னர், அவையே அவர்களது கலாச்சாரம் எனத் திரிக்கப்பட்டது. இதை உணர்ந்ததால்தான் தலித் தலைவர்கள் இந்த இழிதொழில்களை எதிர்த்து தலித் மக்களின் பண்பாட்டு மூலதனத்தை மீட்பதற்காகப் போராடினர்.

இழிவிலிருந்து விடுதலை:

  • இளையபெருமாளின் முயற்சியால் பறை அடித்தல் உள்ளிட்ட இழிதொழில்கள் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் முற்றாக ஒழிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் பிரச்சாரம் செய்தது மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் அந்தப் பிரச்சினைகளை அவர் எழுப்பினார். ‘தென்னிந்தியாவில் தொழிலாளர்கள் பலர் அவர்களது விருப்பத்துக்கு மாறாக செத்தகால்நடைகளை அகற்றும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பறை அடிக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் குறைந்தபட்சக் கூலி சட்டத்துக்குள் வருமா?’ என்று அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
  • தலித் மக்கள் பறை அடிக்க மாட்டோம் என மறுத்தபோது, சாதியவாதிகள் வெளியூர்களிலிருந்து பறை அடிப்பதற்கு ஆள்களை அழைத்துவந்தனர். இளையபெருமாளின் ஊரான காட்டுமன்னார்கோயிலுக்கு அருகில் உள்ள குருங்குடி என்ற ஊரில், 1985 ஆகஸ்ட் 15 அன்று மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குப் பறை அடிப்பதற்காக வெளியூரிலிருந்து ஆள்கள் அழைத்துவரப்பட்டபோது, தலித்துகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
  • இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காகக் காவல் துறை தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் பாண்டியன் (23) என்ற பட்டதாரி தலித் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்; 12 தலித்துகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர் (‘தி இந்து’ 20.08.1985).
  • பறை அடிப்பதற்கு எதிரான போராட்டத்தை இளையபெருமாள் தொடர்ந்து முன்னெடுத்துவந்தார். 25.01.1991 அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற வன்னியர்-ஆதிதிராவிடர் ஒற்றுமைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களில், பறை அடிப்பதற்கு எதிரான தீர்மானமும் ஒன்றாகும்.
  • ‘பறை அடித்தல், செத்த மாட்டைப் புதைத்தல், பிணம் சுடுதல் இன்ன பிற இழிவான செயல்களைச் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது எனவும், அதை அந்தந்தச் சமுதாயங்களே செய்து கொள்வது என்றும் இக்கூட்டம் முடிவுசெய்கிறது’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதில் இளையபெருமாளும் பாமக நிறுவனர் ராமதாசும் கையெழுத்திட்டனர்.
  • இளையபெருமாளின் சமரசமற்ற போராட்டங்களால்தான் இன்றுவரையிலும் சிதம்பரம் பகுதி தலித் மக்கள் இழிதொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டுள்ளனர்.

தொடரும் தேவை:

  • 1980களின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ‘இந்திய மனித உரிமைக் கட்சி’யை இளைய பெருமாள் தொடங்கினார். 1989இல் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட தங்கராசு, காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றிபெற்றார்.
  • அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து, 1991 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இந்திய மனித உரிமைக் கட்சி, இரண்டு தொகுதிகளில் வென்றது. 1996இல் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்ட இளையபெருமாள், 37,159 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில், 1998இல் அவருக்கு ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் வழங்கப் பட்டது.
  • முதுமையின் காரணமாக உடல் நலிவுற்றிருந்த இளையபெருமாள், 08.09.2005 அன்று மறைந்தார். அவரது நூற்றாண்டின் நினைவாக சிதம்பரத்தில் நினைவரங்கம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • தலித் மக்களை இழிதொழில்களிலிருந்து விடுவித்து, அவர்களது பண்பாட்டு மூலதனத்தை மீட்க இளையபெருமாள் நடத்திய போராட்டம் இன்னும் முற்றுப் பெறாமலேயே உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளைப் போலதமிழ்நாடு முழுவதும் பறை அடிப்பது உள்ளிட்ட இழிதொழில்கள் ஒழிக்கப்படும் வரையிலும் இளையபெருமாளின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்.

நன்றி: தி இந்து (26  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories