TNPSC Thervupettagam

எல்லை விவகாரத்தில் தெளிந்த பேச்சு வேண்டும்

June 23 , 2020 1672 days 1257 0
  • உலகமே கொள்ளைநோயை எதிர்கொண்டுவரும் காலகட்டத்தில் நாட்டின் எல்லைப்புறத்தில் நடந்திருக்கும் அத்துமீறல்களும், மோதல்களும், இந்திய வீரர்களின் உயிரிழப்புகளும் மக்களைப் பெரும் ஆத்திரத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியிருக்கிற நிலையில், இந்திய அரசு தொடக்கம் முதலாக இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படுத்திவரும் தெளிவற்ற பேச்சு, மக்களின் மனநிலையை மேலும் மோசமாக்குகிறது.
  • அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதானது அரசியல் புயலை உருவாக்கியதும், சீன அரசுக்கும் ஊடகங்களுக்கும் மெல்லுவதற்கு நல்ல அவலாக அமைந்ததும் மோசமான ராஜதந்திர அணுகுமுறையாகும்.
  • இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவல்காரர்கள் யாரும் இல்லை என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி.
  • கல்வான் பள்ளத்தாக்கில் ‘நடைமுறையிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி’யில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது தொடர்பாக ஏற்பட்ட வன்முறையிலேயே ஜூன் 15 அன்று இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தார்கள்.
  • அது மட்டுமல்லாமல், பாங்காங் ஏரியின் வடக்குக் கரை உள்ளிட்ட இடங்களிலும் சீனத் துருப்புகள் நின்றிருந்தனர். இத்தகு சூழலில், பிரதமரின் கூற்று பெரும் குழப்பத்தை உண்டாக்கியதை எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்குள்ளாக்கினர்.
  • இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. நம் வீரர்களின் துணிவு காரணமாக கல்வான் பள்ளத்தாக்கில் சீன அத்துமீறல் முறியடிக்கப்பட்டதையே பிரதமர் அவ்வாறு சுட்டிக்காட்டியதாக அந்த விளக்கம் கூறியது.
  • ஆயினும், போதுமான சேதாரம் இதற்குள் நடந்து முடிந்திருந்தது.
  • சீனத் துருப்புகள் நடைமுறையிலுள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் அத்துமீறவில்லை என்பதற்குப் பிரதமர் மோடியின் கூற்றே ஆதாரம் என்று சீனாவின் ஊடகங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.
  • இதையடுத்து, நடைமுறையிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனா அத்துமீறியதும், எல்லையின் ஊடாகக் கட்டுமானப் பணிகளை அது மேற்கொண்டதும் உண்மைதான் என்று வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டது.
  • பிரதமரின் ஒரு கூற்றுக்கு இரண்டு விளக்கங்கள் தேவைப்படுகின்றன என்பதே இந்த விவகாரத்தில் மோசமான தகவல்தொடர்பை அரசு வெளிப்படுத்துகிறது என்பதற்கான உதாரணமாகச் சொல்லிவிடலாம்.
  • தொடக்கம் முதலாகவே இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத நிலையிலேயே பொதுமக்களை அரசு வைத்திருந்ததும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவந்ததோடும் பொருத்திப் பார்க்க வேண்டியது இது.
  • பாதுகாப்பு விஷயங்களில் எல்லாத் தகவல்களையும் பொதுவெளியில் பகிர்வது சாத்தியமில்லைதான். ஆயினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகிய அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான மேலோட்டமான பகிர்தலை அப்படிக் கருதிட முடியாது.
  • உள்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஓரணியாகத் திரண்டு நிற்கும்போது, அது அரசுக்குத் தரும் வலுவே தனி.
  • அனைத்துக் கட்சிகளும் இதில் அப்படியான ஆதரவை அரசுக்கு முன்கூட்டித் தந்தன. அரசு அதை ஆக்கபூர்வத் திசையில் கொண்டுசெல்ல வேண்டும்.

நன்றி: தி இந்து (23-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories