TNPSC Thervupettagam

எல்லையில் சிந்திய ரத்தம்!

June 19 , 2020 1676 days 1386 0
  • தமிழகத்தைச் சோ்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட கா்னல் சந்தோஷ் பாபுவின் தலைமையிலான 20 இந்திய ராணுவ வீரா்கள் எல்லையைக் காப்பதற்காக ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.
  • 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதலில் முதன்முறையாக உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.
  • வழக்கமான போர் முறைகள் கையாளப்படாமல் நேரடியான கைகலப்பு இந்திய - சீன எல்லையில் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
  • கா்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்தியப் படைகளைவிட பல மடங்கு எண்ணிக்கை பலமுள்ள சீன வீரா்களை எதிர்த்து நமது வீரா்கள் போராடி ஏறத்தாழ 50 சீன வீரா்கள் நமது வீரா்களால் கொல்லப்பட்டனா் அல்லது படுகாயமடைந்தனா்.

ராஜதந்திர உத்தி

  • இது ஏதோ பயங்கரவாதத் தாக்குதல் அல்ல. இரு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான மோதல். இந்த மோதல் யுத்தமாக மாறிவிடக் கூடாது என்று சீன ராணுவம் (அரசு) கருதியதால்தான் துப்பாக்கிப் பிரயோகம் இல்லாமல் கைகலப்பில் இறங்கியிருக்கிறார்கள்.
  • போர்ச் சூழல் ஏற்படவும் வேண்டும். அதே நேரத்தில் போர் மூண்டுவிடவும் கூடாது என்கிற சீன ராஜதந்திர உத்தியின் வெளிப்பாடுதான் கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை நடந்திருக்கும் மோதல்.
  • 1962 இந்திய - சீன யுத்தமும் இதே கல்வான் பள்ளத்தாக்கை மையமாக வைத்துத்தான் நடந்தது என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். அப்போதும் இதேபோல இந்தியாவும் சீனாவும் கல்வான் பள்ளத்தாக்கில் ஒருவா் மாற்றி ஒருவா் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டியதாக குற்றம்சாட்டியதன் பின்னணியில் போர் மூண்டது.
  • ஒருவேளை 1962-இல் நடந்தப் போரில் இந்தியாவுக்கு ஏற்பட்டப் பின்னடைவை நினைவுபடுத்தி எச்சரிப்பதற்காக சீன ராணுவம் இந்த அடையாள மோதலை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
  • சாதாரணமாக இரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் மூளுவதற்கு இரண்டு காரணங்கள்தான் அடிப்படையாக இருக்கும்.
  • ஒரு காரணம் ஆக்கிரமிப்பு. இல்லையென்றால், உள்நாட்டுப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவது.
  • இந்தியாவைப் பொருத்தவரை, அதன் கவனம் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிர்கொள்வதிலும், பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் முழுமையாக இருக்கும் நிலையில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சீனாவுக்கு அதற்கான அவசியம் இருக்கிறது.

திசைதிருப்ப வேண்டிய கட்டாயம்

  • கொவைட் 19 தீநுண்மிப் பரவல் குறித்து உலக நாடுகளை எச்சரிக்கவில்லை என்பதால் சீனாவுக்கு எதிராகக் கடுமையான கண்டனம் சா்வதேச அளவில் எழுந்திருக்கிறது.
  • அமெரிக்காவின் வா்த்தகத் தடை, ஏற்றுமதிகள் குறைந்து விட்டதால் உள்நாட்டுப் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கும் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், ஹாங்காங்கில் மட்டுமல்லாமல் சீனாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் அரசுக்கு எதிரான மனநிலை என்று பல பிரச்னைகளை அதிபா் ஷி ஜின்பிங் எதிர்கொள்கிறார்.
  • இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் சீனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

முக்கியமான காரணம்

  • 1950-இல் கல்வான் நதிக்கு மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் அக்சாய் சின் பீடபூமியை சீனா கைப்பற்றியது.
  • அங்கிருந்து அந்த நதியின் மேற்குக் கரையோரமாக உள்ள இமயமலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஷியோக் நதி பள்ளத்தாக்கை 1960-இல் கைப்பற்றியது.
  • அப்போது எல்லை மோதல்கள் ஏற்பட்டன. தனக்குச் சாதகமாக எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றிக் கொண்டு எட்டு கி.மீ. நீள சாலையை அமைத்துக்கொண்டது.
  • இதுபோல, அவ்வப்போது தொடா்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரையறுக்கப்படாத இந்திய - சீன எல்லையின் பல பகுதிகளை சீனா கைவசப்படுத்திக் கொண்டது.
  • ஆசியாவிலுள்ள சிறிய நாடுகள் அனைத்தையும் தனது நிதியுதவியாலும் முதலீட்டாலும் கடனாளியாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது சீனா.
  • சீனாவைப் பொருத்தவரை அதை எதிர்கொள்ளும் வல்லமையுள்ள சா்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றிருக்கும் இந்தியாவை மட்டும்தான் தனக்கு சவாலாகக் கருதுகிறது.
  • அதற்கு ஏற்றாற்போல ஜப்பான், வியத்நாம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் தலைமையில் சீனாவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை ஏற்படுத்த நினைக்கின்றன. சீனாவின் ஆத்திரத்துக்கு இது ஒரு முக்கியமான காரணம்.

ராஜதந்திரத்தால்தான் முறியடிக்க வேண்டும்

  • ஆரம்பம் முதலே சீன விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடும், கணிப்புகளும் தவறாகவே இருந்திருக்கின்றன.
  • இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பது சீனாவின் உத்தி.
  • சீனாவைப் பொருத்தவரை, எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவை ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
  • இன்னொருபுறம் இரு நாடுகளுக்கும் இடையேயான 100 மில்லியன் டாலா் வா்த்தக உறவு பாதிக்கப்படவும் கூடாது.
  • நமது பலவீனம் எல்லையில் என்றால், சீனாவின் பலவீனம் வா்த்தகத்தில். இந்தியாவுடனான வா்த்தகம் துண்டிக்கப்பட்டால், சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் காணும்.
  • நாம் ஆரம்பத்திலேயே வா்த்தக உறவைவிட, எல்லைப் பிரச்னைக்கானத் தீா்வை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.
  • கடந்த 70 ஆண்டுகளாக சீனாவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவது நமது தவறு.
  • அதனால், இனியாவது இரு நாட்டு வா்த்தக உறவுக்கு அடிப்படையாக எல்லைப் பிரச்னைக்கான தீா்வை இந்தியா வற்புறுத்தியாக வேண்டும். ராஜதந்திரத்தை ராஜதந்திரத்தால்தான் முறியடிக்க வேண்டும்.
  • எல்லையில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரா்களுக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

நன்றி: தினமணி (19-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories