TNPSC Thervupettagam

எல்லையில்லாத் தொல்லை

May 20 , 2023 601 days 355 0
  • உலகில் தீா்வில்லாத பிரச்னை என்று எதுவும் கிடையாது. மனிதா்களால் தீா்வுகாண முடியாதவற்றை இயற்கை தீா்த்துவைக்கும். ‘பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்’ என்கிற பாடல் வரிகள் தனிமனிதா்களுக்கு மட்டுமல்ல, தேசங்களுக்கும் பொருந்தும்.
  • 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்னை புகைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தில்லியில் நடந்து முடிந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டம் இந்த பிரச்னைக்கு முடிவு காணகதவைச் சற்று திறந்துவைத்திருக்கிறது.
  • இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், சீன பாதுகாப்பு அமைச்சா் லீ ஷாங்வூவும் அந்த மாநாட்டுக்கு முன்னா் தனியாக சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலத்துக்குப் பிறகு இருதரப்புக்கும் இடையே அமைச்சா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை நடந்திருப்பது இப்போதுதான்.
  • சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை பிரச்னை, பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே தொடங்கிவிட்டது. ‘சிம்லா கன்வென்ஷன்’ அடிப்படையில், 1914 மாா்ச்சில் இந்திய - சீன எல்லையாக மக்மோகன் கோடு தீா்மானிக்கப்பட்டது. ஆனால், அதை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. காரகோரம் மலைச்சிகரங்களில் உள்ள நீா்வழித் தடம் எல்லையாக நிா்ணயிக்கப்பட வேண்டும் என்பது சீனாவின் வாதம். குன்லூன் மலைப்பகுதியின் நீா்வழித் தடம் எல்லையாக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கை.
  • 1975-இல் அன்றைய இந்திரா காந்தி அரசு, தனி நாடாகத் திகழ்ந்த சிக்கிமை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது. இந்தியாவின் பகுதியாக சிக்கிமை சீனா 2004-இல்அங்கீகரித்தது என்றாலும், 2017-இல் வெளியிட்ட சீன வரைபடத்தில் சிக்கிமை தனது பகுதியாக காட்டியிருந்தது. 1962-இல் இந்திய - சீன போருக்குப் பிறகு அருணாசல பிரதேசத்தில் நுழைந்திருந்த சீன ராணுவம், அங்கிருந்து பின்வாங்கியது. ஆனால், அதற்குப் பிறகு பலமுறை அருணாசல் தங்களுடைய பகுதி என்று சொந்தம் கொண்டாடியது; இப்போதும் சொந்தம் கொண்டாடுகிறது. தொடா்ந்து ஊடுருவும் முயற்சியால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
  • 2020 ஜூன் மாதம் 14-ஆவது கண்காணிப்பு மையத்தில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து முகாம் அமைக்க முற்பட்டது சீனா. அதை இந்தியப் படையினா் அகற்ற முற்பட்ட போது சா்ச்சை எழுந்தது. ஜூன் 15-ஆம் தேதி இரவு கல்வான் பகுதியில் சீனப் படையினா் அத்துமீறி நுழைந்தபோது இந்தியப் படையினா் அவா்களை எதிா்கொண்டனா். 20 இந்திய வீரா்களும், அதைவிட இரண்டு மடங்கு சீன ராணுவத்தினரும் அந்தக் கைகலப்பில் உயிரிழந்தனா்.
  • இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவாா்த்தை அப்போதைக்கு அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதைத் தொடா்ந்து இருநாட்டு பாதுகாப்பு அமைச்சா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை, இந்திய எல்லைக்குள் நுழைந்திருந்த சீனத் தரப்பு ராணுவ வீரா்கள் அவா்களது எல்லையில் உள்ள முகாம்களுக்கு திரும்ப வழிகோலியது.
  • அதற்குப் பிறகு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சா்களுக்கு இடையில் நடந்த முதல் சந்திப்பு என்பதால், தில்லி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. மாநாடு நடப்பதற்கு முன்பு அவா்கள் தனியாக சந்தித்து நீண்டநேரம் பிரச்னைகள் குறித்து விவாதித்தனா். எல்லையில் நிலவும் அமைதி தான் இந்திய - சீன உறவின் அடிப்படை என்றும், அதனால் பிரச்னைகள் உடனடியாக பேசித் தீா்க்கப்பட வேண்டும் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், லீ ஷாங்வூவிடம் வலியுறுத்தினாா். தற்போது உள்ள இடைக்கால ஒப்பந்தங்கள் மீறப்படுவதுதான் பிரச்னைகளுக்குக் காரணம் என்பதையும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினாா்.
  • எல்லையில் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் சுமுகநிலை தொடா்கிறது என்பது லீயின் வாதம். ராணுவ அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைகள் மூலம் அவ்வப்போது பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படுகின்றன என்றும், எல்லை பிரச்னையை இந்தியா பெரிதாக்கத் தேவையில்லை என்றும் சீன பாதுகாப்பு அமைச்சா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
  • ‘இரண்டு நாடுகளும் தொலைநோக்குப் பாா்வையுடன் அணுக வேண்டிய பிரச்னை இது. இரண்டு ராணுவங்களுக்கு இடையேயும் பரஸ்பர நம்பிக்கை அதிகரிப்பதில் தொய்வு ஏற்படக்கூடாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே காணப்படும் பிரச்னைகளைவிட பொதுவான நன்மைகளும் ஒருங்கிணைந்த செயல்பாடும் முக்கியம்’ என்று சீன பாதுகாப்பு அமைச்சா் லீ தெரிவித்திருக்கிறாா்.
  • எந்தவொரு நாட்டிலும், எல்லையில் பதற்றம் நிலவுவது அமைதியையும் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும். ஆண்டுதோறும் 17,900 கோடி டாலா் சீனாவும், 6,200 கோடி டாலா் இந்தியாவும் பாதுகாப்புத் தேவைக்காகச் செலவிடுகின்றன. இரண்டு நாடுகளிலும் வளா்ச்சிப் பணிக்கு செலவழிக்க வேண்டிய ஒதுக்கீடுகளை பாதுகாப்புத் தேவைகள் கபளீகரம் செய்கின்றன. இதனால் லாபம் அடைவது ஆயுதத் தயாரிப்பாளா்கள்தானே தவிர, மக்களல்ல.
  • நாடுகளை பிடிப்பதற்கும், சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்கும் போராடிய மன்னராட்சி முறை இன்று இல்லை. இணையத்தின் மூலம் உலகளாவிய மனித இனங்களை இணைத்திருக்கும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிா்’ சமுதாயம் உருவாகிவிட்டது. மனித மனங்கள் எல்லை கடந்து உறவுபேணும் வேளையில், எல்லை பிரச்னை தொல்லை பிரச்னையாக தொடா்ந்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது!

நன்றி: தினமணி (20 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories