TNPSC Thervupettagam

எல்லோருக்கும் இணையம்: வழிகாட்டுகிறது கேரளம்!

November 18 , 2019 1881 days 1052 0
  • இணையதளப் பயன்பாடு என்பது நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கம் ஆகிவிட்டது. அது ஏழை எளியோருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டியதைக் கடமையாக நினைத்திருக்கும் கேரள அரசு, அடுத்த ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இணையதள வசதி இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்திருக்கிறது. இந்தப் புரட்சிகரமான திட்டத்துக்கு கேரள மாநில அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்துவிட்டது.

கேரள கண்ணாடியிழை வலைதளத் திட்டம்

  • கேரள கண்ணாடியிழை வலைதளத் திட்டம் ரூ.1,548 கோடி செலவில் அமலாகவிருக்கிறது. இது நிறைவேறினால், 2020 டிசம்பருக்குள் கேரளத்தில் அனைவருமே இணையதள வசதியைப் பெற்றுவிடலாம். இணையதள வசதி என்பதை அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாக கேரளம் கருதுவதையே இந்த முன்னெடுப்பு நமக்கு உணர்த்துகிறது. இதுவரை வேறெந்த இந்திய மாநிலமும் இணையதள வசதி குறித்து இந்த அளவுக்குக் கவனம் செலுத்தியதில்லை. வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாகவே இணையதள இணைப்பை வழங்குவது கேரளத்தின் திட்டமாகும். மற்ற குடும்பங்களிடம் நியாயமான கட்டணமே வசூலிக்கப்படும். கேரள மாநில மின்சார வாரியமும் கேரள மாநில தகவல் தொழில்நுட்ப அடித்தளக் கட்டமைப்பு நிறுவனமும் இணைந்து இந்த இணையதள வசதியை அளிக்கவுள்ளன. கல்வி, பொது சுகாதாரத்தைப் பேணுவதில் முதன்மையாக இருப்பதால் மனிதவளக் குறியீட்டில் ஏற்கெனவே நாட்டில் முதலிடத்தில் இருக்கும் கேரளம், இதற்குப் பிறகு டிஜிட்டல் சேவை வழங்கலிலும் முதலிடம் பெற்றுவிடும்.
  • இணையதள வசதி அளிப்பதில் இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்திவருகிறது.
  • மிகவும் மலிவான தரவுத் திட்டங்கள் இதற்கு ஒரு காரணம். குறிப்பாக, ‘ரிலையன்ஸ் ஜியோ’வின் வருகை ஒரு பெரும் பாய்ச்சல்தான். நாட்டில் இப்போது 45.1 கோடி தீவிர இணையதளப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர் என்கிறது இந்திய இன்டர்நெட் - மொபைல் சங்கமும் நீல்சன் நிறுவனமும் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பு.

இடைவெளி

  • ஆனால், இந்தச் சேவையைப் பெறுவதில் நகரங்கள்-கிராமங்கள் இடையிலும், ஆடவர்-மகளிர் இடையிலும், பணக்காரர்கள்-வசதியற்றவர்கள் இடையிலும் உள்ள இடைவெளியை இந்தப் புள்ளிவிவரம் மறைக்கிறது.
  • டெல்லி தேசியத் தலைநகரப் பகுதியில் நாட்டிலேயே உச்சபட்சமாக 69% அளவுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தது, கேரளம் 54%. இந்தியாவில் இன்னமும் கோடிக்கணக்கானவர்கள் இணையதள சேவையைப் பெறாமல் இருப்பதால், உலக நிறுவனங்கள் இந்தியச் சந்தை மீது அக்கறை செலுத்துகின்றன. குறிப்பிட்ட சில இணையதளங்களை இந்தியர்கள் இலவசமாக அணுகுவதற்கு உதவுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் முன்வந்ததை, இந்திய அரசு நிராகரித்தது வரவேற்கத்தக்கதே. இணையதள சேவை கிடைப்பதில் மக்களுக்கு இடையேயிருக்கும் ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட வேண்டும். அதை கேரள அரசு பாணியில் மேற்கொள்ள முயன்றுபார்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (18-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories