- விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நடத்திவந்த செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலைப் பயிற்சி மையம் (Early Intervention Centre) சமீபத்தில் மூடப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம், ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:8 என்ற அளவில் இல்லை என்பது.
- பின்னர் ஒரு தனியார் பள்ளியில், ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் அந்த ஆரம்ப நிலைப் பயிற்சி மையம் நடத்தப்படுவதாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அப்பயிற்சி மையத்தில் வேலை பார்த்த வகையில் சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம் அரசுத் தரப்பிலிருந்து வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகள் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு பயிற்சி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளி நிர்வாகம் எழுத்துபூர்வமாகவே ஒப்புக்கொண்டுவிட்டது. தொண்டு நிறுவனத்தின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
பழைமைவாத நம்பிக்கை
- என் மகன் ஒரு சிறப்புக் குழந்தை. அதைக் குறிப்பிட்டு என் தோழி ஒருவர், “நீங்களும் நல்லவங்கதான். உங்க வீட்டுக்காரரும் நல்லவராத்தான் தெரியறாரு. ஆனாலும் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு குழந்தைனுதான் எனக்குப் புரியல” என்றார் வேதனையோடு. உண்மையில் என் மீதான பரிவில்தான் இவ்வார்த்தைகளை அவர் சொன்னார் என்றாலும், எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் நன்கு படித்து அரசின் உயர் பதவியில் இருப்பவர்.
- நன்கு பயின்று, வெளியுலக அனுபவம் மிக்க ஒருவரால் இன்னமும் இப்படித்தான் சிந்திக்க முடிகிறது என்பதேஎனக்கு வியப்பாகவும், வலி தருவதாகவும் இருந்தது. பெருந்தன்மையுடன் மாற்றுத்திறனாளிகளை ஏற்றுக்கொள்வது, அவர்களது சமூக உரிமைகளை உணர்வதுஎன்று ஆரம்பித்து மெல்ல மெல்ல இணைந்து பயணிப்பது (Allyship) வரை உலகின் சிந்தனையே இன்று மாறிவிட்டது. இன்னமும் மாற்றுத்திறன் குழந்தைகள் என்பது ஒரு பாவத்தின் விளைவு என்ற பண்டைக்கால நம்பிக்கையோடு படித்தவர்களே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தந்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல.
- இந்த மனநிலை இங்கு வேரோடியிருப்பதால்தான் மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர் போன்றவர்களின் மீது பெரும்பாலானோருக்குக் குறைந்தபட்ச பரிவுணர்வுகூட எழ மறுக்கிறது. “எல்லாம் நீ செஞ்ச பாவம்! நல்லா வேணும் உனக்கெல்லாம்” என்னும் சிந்தனை அவர்களின் உரிமை மறுப்பில் வந்து நிற்கிறது. எனவே இங்கு மாற்றுத்திறனாளிகளின் உரிமை பற்றி மட்டுமல்ல; ‘ஊனம் என்பது பாவத்தின் பலன்’ என்ற எண்ணத்தை மாற்றும் விழிப்புணர்வுச் சிந்தனைகளும் பரவலாக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
- தமிழர்கள் முற்போக்கானவர்கள். விண்வெளிக்கு ராக்கெட் விட்டவர்கள் என்கிற பெருமிதங்கள் மட்டும் போதாது. ஊடகங்கள், கலைப்படைப்புகளின் வழியே தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் பேசப்பட வேண்டும். இது போன்ற பரப்புரைகள் தவிர்த்து, மேலே சொன்ன சம்பவத்துக்கான உடனடித் தீர்வுகளும் நமக்குத் தேவை.
நடைமுறைப் பிரச்சினைகள்
- மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநில அளவில் 22 சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்திவருகிறது. அவற்றில் 10 பள்ளிகள் செவித்திறன் குறைபாடுள்ளோருக்காகவும், 10 பள்ளிகள் விழித்திறன் குறைபாடுள்ளோருக்காகவும், 1 பள்ளி கடுமையாகக் கை கால் பாதிக்கப்பட்டோருக்காகவும், 1 பள்ளி மனவளர்ச்சி குன்றியோருக்காகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளுக்கு ஆதரவு அளிப்பதும் உண்டு.
- இங்கே நேரடியாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை பல்வேறு சிறப்புப் பள்ளிகளை நடத்துகிறது. அதில் பலவற்றில் சிறப்புக் கல்வி ஆசிரியர் பற்றாக்குறை தொடங்கி, பல்வேறு கட்டமைப்புக் குறைபாடுகள் வரை உள்ளன.
- உதாரணமாக, புதுக்கோட்டையில் பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அது ஒரு உண்டு உறைவிடப் பள்ளி. அதில் பல ஆண்டுகளாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்; மாணவர்களோ 38 பேர். எண்ணிப் பாருங்கள், பார்வைத்திறன் சவால் கொண்ட இத்தனை மாணவர்களுக்கும் ஒரே ஆசிரியர். ஒருவரே வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் இத்தனை பேருக்கும் கற்பிப்பது என்பது சாத்தியமே இல்லாத செயல்.
- இதுபோல சில பார்வையற்றோர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பிரெய்லி முறைகூடத் தெரியாமல் காதால் கேட்டு, வாயால் திரும்பச் சொல்லி பாடம் படித்து வருகின்றனர். ஆங்காங்கு சில தன்னார்வலர்கள் உதவிவந்தாலும், தேவைக்கும் கிடைக்கும் சேவைக்கும் நடுவில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. இவை சில உதாரணங்கள் மட்டுமே… மாநிலம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளின் நிலை இதுதான். தனியார் தொண்டு நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் அது பெரும்பாலும் விழுப்புரம் ‘அன்பு ஜோதி’ இல்லசம்பவத்தைப் போலவே அமைகிறது.
- மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகள் இங்கே உண்டு. எனினும், அவர்கள் வளர்ந்த-வயதான மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த அமைப்புகள்கூட இப்படியான சிறப்புப்பள்ளிகள் குறித்து ஏதேனும் முன்னெடுப்புகளை எடுத்துள்ளதாகத் தெரியவில்லை.
என்னதான் தீர்வு
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உடனடியாக ஒரு குழுவை நியமித்து, அத்துறை மாநிலம் முழுவதிலும் நடத்துகின்ற பள்ளிகளில் ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். குறைகளைக் களைய ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிப்பின் தீவிரத்தன்மை குறைந்த மாற்றுத்திறன் மாணவர்கள் மட்டுமே பொதுப் பள்ளிகளில் பயில முடியும். குறைபாட்டின் தீவிரத்தன்மை கூடக்கூட, அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள்தான் சரியான தீர்வு. அதிலும் மனவளர்ச்சிக் குன்றிய சிறப்புக் குழந்தைகளுக்கு ஒரே ஒரு சிறப்புப் பள்ளி மட்டுமே இருப்பது எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? எனவே மாநிலம் முழுவதும் இருக்கும் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே நேரடியாக நடத்தும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகளை நடத்துவதற்குத் தேவையான நிர்வாக வசதிகளும் அனுபவமும் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் அனைத்து சிறப்புப் பள்ளிகளையும் கொண்டுவர வேண்டும்.
இருதரப்பு இணைப்பு
- தேவையான எண்ணிக்கையில் சிறப்புப் பள்ளிகளைத் புதிதாகத் தொடங்குவதோடு, ஏற்கெனவேஇருக்கும் பள்ளிகளிலும் தேவையான அளவுக்குச் சிறப்புக் கல்வி ஆசிரியர்களை நியமித்து, கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும். கல்வியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்று வெளிவரும் மாணவர்களிலும் பெரும்பாலானோர் சாதாரணப் பள்ளிகளிலேயே பணிக்குச் சேரும் சூழலும் இங்குள்ளது. தேவை உள்ள குழந்தைகள், பணியாற்றத் தகுதியுள்ள ஆசிரியர்கள் என இருதரப்பையும் இணைக்க அரசுதான் மனம் வைக்க வேண்டும். நிர்வாகத் திறன் கொண்ட பள்ளிக் கல்வித் துறையின் கைகளுக்குள் சிறப்புப் பள்ளிகளைக் கொண்டுவருவதன் மூலமே இது சாத்தியமாகும்.
- வழக்கமான அனைத்துப் பள்ளிகளிலும் தலா ஒரு சிறப்புக் கல்வி ஆசிரியராவது நியமிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் மனநலன் பேணும் வகையில் உளவியல் ஆற்றுப்படுத்துநர்களையும் அரசு நியமிக்க வேண்டும். மாணவர்களின் கல்வியோடு மனநலனையும் பேணுவது மிகவும் அவசியம். ஒவ்வொரு குழந்தையின் இயல்புக்கும், சக்திக்கும் ஏற்ற தரமான கல்வியை இம்மண்ணில் மலர்ந்துள்ள எல்லா மழலைகளுக்கும் உறுதியளித்தால்தானே நாளைய சமூகம் வளமானதாக அமையும்?
- டிசம்பர் 3: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 12 – 2023)