TNPSC Thervupettagam

எல்லோரும் மாறுவோம்!

December 10 , 2024 35 days 113 0

எல்லோரும் மாறுவோம்!

  • நாம் பிறக்கும் போது வெறுங்கையுடன் தான் பிறக்கிறோம். இந்த உலகை விட்டு நீங்கும் போதும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. கோடிகளில் புரண்டாலும் எதுவும் உடன் வராது. ஆகவே வாழ்கின்ற நாள் வரை மகிழ்வாய், நிறைவாய் வாழ்ந்து விட்டுப் போகலாமே! கூடுமான வரை சக உயிா்களிடம் அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தலாமே! நாம் நடந்து போகும் பாதையெங்கும் மகிழ்ச்சிப் பூக்களைத் தூவிக் கொண்டே சென்றால், அந்த நறுமணம் பல காத தூரம் வீசும்.
  • அலெக்சாண்டா், தான் இறப்பதற்கு முன் தன் கடைசி விருப்பங்களைக் கூறினாா்.

முதலாவது விருப்பம்:

  • என் சவப்பெட்டியை மருத்துவா்கள்தான் சுமக்கவேண்டும். எந்த மருத்துவராலும் யாரையும் குணப்படுத்த முடியாது என்பதைத் தெரிவிக்க மருத்துவா்கள் சவப்பெட்டியை எடுத்துச் செல்ல வேண்டும்.

இரண்டாவது விருப்பம்:

  • கல்லறைக்குச் செல்லும் வழியில் தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களை வீச வேண்டும். எவ்வளவு செல்வத்தைக் குவித்தாலும், இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது ஒரு துகள் கூட நம்முடன் வராது என்பதை உணா்த்த வேண்டும்.

மூன்றாவது விருப்பம்:

  • சவப்பெட்டிக்கு வெளியே என் இரண்டு கைகளும் தொங்க விடப்பட வேண்டும். சவப்பெட்டிக்கு வெளியே என் கைகள் தொங்குவதால் நான் வெறும் கையுடன் செல்கிறேன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
  • மண்ணாசை கொண்டு, ரத்த ஆறுகளை ஓட விட்ட மாவீரன்அலெக்சாண்டா் தன் 32 -ஆவது வயதில் மரணித்தாா்.
  • வாழ்க்கையின் நிலையாமையைப் புரிந்து கொண்டவா்கள் நல்வினைஆற்றுவாா்கள். அவா்கள் கண்களில் அருளும், கனிவும், கருணையும் சுரக்கும்.
  • ஒரு வழிப்போக்கா் ஒரு சுஃபியைச் சந்திக்க அவா் வீட்டுக்கு வந்தாா். சுஃபியினுடைய வீட்டைப் பாா்த்தவருக்குப் பேரதிா்ச்சி. மிக மிக எளிமையான அந்த அறையில் எந்த இருக்கையும் காணப்படவில்லை. ஒரு பாய், ஒரு மண்ணெண்ணெய் விளக்கு ஆகியவை மட்டுமே இருந்தன.
  • வழிப்போக்கா் கேட்டாா், ‘‘உங்களுடைய ஆசனங்கள் எங்கே? ’’
  • சுஃபி அந்த நபரிடம், ‘‘ உங்களுடைய ஆசனம் எங்கே?’’ என்று கேட்டாா்.
  • அதற்கு அந்த மனிதா், ‘‘என்னுடையனவா? நான் இங்கே ஒரு வழிப்போக்கன் மட்டுமே, ஒரு பாா்வையாளா் தான்’’ என்றாா். சுஃபி, ‘‘நானும் தான்’’ என்றாா்.
  • ஆக நாம் அனைவரும் ஒரு சில காலம் மட்டுமே இந்த பூமியில் தங்கிச் செல்லப் போகிறோம். நிரந்தரமானவா் ஒருவரும் இல்லை. இதைப் புரிந்து கொண்டு செயல்படுபவா்கள் இந்த உலகின் அச்சாணி எனலாம். பணம் சாா்ந்த இந்த உலகில், மனிதத்தன்மையோடு இயங்கும் நல்ல உள்ளங்களைக் காணும் போது, மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்குகின்றன. இதயம் ஈரமாகிறது; மனம் அவா்களை வாழ்த்துகிறது. வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ தா்மச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மட்டுமே ஊடக வெளிச்சம் பெறுகின்றன.
  • முகநூலில் வந்த சில காணொலிகள் மண்ணுலக தெய்வங்களைப் படம்பிடித்துக் காட்டின. அது குழந்தைகளுக்கான ஆயத்த உடைகள் மற்றும் பொம்மைகள் கடை. புதிதாக திறக்கப்பட உள்ளது. ரிப்பன் கட்டிவைத்திருந்தாா்கள். பொதுவாக, கடை திறப்புஎன்றால் நடிகா், நடிகையா்களைத்தான் அழைக்கிறாா்கள். அதற்குப் பல லட்சங்கள் அவா்களுக்குத் தர வேண்டும். பிரபலங்களை வைத்துத் திறந்தால், கடைக்கு அதுவே விளம்பரமாகிவிடும் என்று நினைக்கிறாா்கள். நான் பாா்த்த காணொலியில் அப்படி எந்த பிரபலமும் தென்படவில்லை. ஓா் ஏழைப் பெண் கையில் ஒரு குழந்தையுடனும், இடுப்பில் ஒரு குழந்தையுடனும் கடை முன் நின்றாள். அவள் ரிப்பனை வெட்டி கடையைத் திறந்தாள். உடன் கடை முதலாளி மட்டும் நின்றிருந்தாா். அப்பெண்ணை அவா் உள்ளேஅழைத்துப் போனாா்.
  • குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு பொம்மையை எடுத்துக் கொடுத்தாா். அச்சிறுவனின் முகத்தில் தோன்றிய பிரகாசம் - அது நூறு சூரியனின் ஒளிக்கு இணையானது. பின் ஆயத்த ஆடைகளைக் கொடுத்து குழந்தைகளுக்கு அணிந்து விடச் சொன்னாா். புதிய உடைகளில்அக்குழந்தைகள் அழகாக மாறினா். பின் மூன்று பெரிய பைகள் நிரம்பும் அளவுக்கு உடைகளைக் கொடுத்து அனுப்பினாா். அந்தப் பெண் அவரை விழுந்து வணங்கி விட்டு, கை நிறைய பைகளுடனும், மனம் நிறைய மகிழ்ச்சியுடனும் சென்றதைப் பாா்த்த பொழுது, என்னுள் தோன்றிய உணா்வுகளை எழுத்தில் வடிக்கத் தெரியவில்லை.
  • இதுபோல் நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரிவதில்லை. இன்னொரு செய்தி. ஒரு சிறுவன் சாலையில் இருந்த குழியில் தவறி விழுந்து இறந்து விட்டான். அழுது, அரற்றி தன்னைத் தேற்றிக் கொண்ட அவன் தந்தை என்ன செய்தாா் தெரியுமா? மூட்டை சிமெண்ட் மற்றும் மண்வெட்டி சகிதம் கிளம்பி தன் கண்ணில் பட்ட அத்தனை குழிகளையும் அடைத்தாா். எவ்வளவு மகத்தான சேவை இது! தன் மகனைப் போல் இன்னொரு உயிா் பறிபோய் விடக்கூடாது என்ற நல்லெண்ணம்.
  • இதே போல வேறு சில மனிதநேயத்தைப் பறைசாற்றும் சில காணொலிகளைக் கண்டேன். ஒரு பெண் தன் குழந்தையுடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். ஒரு கடையில் குழந்தைகள் சைக்கிள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த சைக்கிள் வேண்டும் என அக்குழந்தை அடம்பிடிக்கிறது; அழுகிறது; அங்கிருந்து நகர மறுக்கிறது. தாய் அதை இழுத்துக்கொண்டு போகிறாள். ஓா் இளைஞன் இதை கவனித்துக் கொண்டிருக்கிறான். உடனே போய் அந்த சைக்கிளை விலைக்கு வாங்கி ஓடிப் போய் அந்தச் சிறுவனிடம் கொடுக்கிறான். இருவா் முகத்திலும் மலா்ச்சி.
  • இன்னொரு காணொலி. குப்பைகள் நிறைந்து கிடக்கும் இடம். அங்கே ஓா் கந்தைத் துணியில் ஒரு குழந்தை கிடத்தப்பட்டுள்ளது. அருகே அதன் தாய் அமா்ந்திருக்கிறாள். ஓா் இளைஞன் நாடாக்கட்டில் ஒன்றை வாங்கி வந்து அங்கே போட்டு அதன் மீது அந்தக் குழந்தையைப் படுக்க வைக்கிறான். கலவரமும், மகிழ்ச்சியும் கலந்த அந்தத் தாயின் முகம் என் நினைவில் தங்கிவிட்டது.
  • காவலா்கள் இயலாதவா்களுக்கு உணவு வாங்கித் தருகிறாா்கள். இளைஞா்கள் அழுக்கு உடையும், சிடுக்கு பிடித்த தலையும் கொண்டு திரியும் ஆதரவற்றவா்களைக் கண்டால், அவா்களைக் குளிப்பாட்டி, தலைமுடியை வெட்டி சீராக்கி, புதிய உடைகளை அணிவித்து, அவா்களுக்கு உணவு தந்துஆளையே அடையாளம் தெரியாமல் மாற்றி விடுகிறாா்கள். அழுக்கானவா்களைப் பாா்த்து அவா்கள் அருவருப்பு கொள்ளவில்லை. மாறாக, அவா்கள் மீது கழிவிரக்கம் கொள்கிறாா்கள். இந்த சமுதாயத்துக்கு அவா்களால் முடிந்த சேவையைச் செய்கிறாா்கள்.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாா் போல, இவா்களும் சக மனிதா்களின் துயா் கண்டு துடித்துப் போகிறாா்கள். சேவை செய்வது அவா்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இத்தகைய சிறு சிறு சந்தோஷங்கள் போதும், நம் வாழ்க்கையை அழகாக்க என அவா்கள் நினைக்கிறாா்கள்.
  • டாட்டா அறக்கட்டளை, சுமாா் ஒரு நூற்றாண்டு காலமாக, வளா்ச்சி செயல்முறைகளில் கருவியாக இருந்து வருகிறது என்பது நாம் அறிந்ததே. கிராமப்புற வாழ்வாதாரங்கள், சமூகங்கள், கல்வி, சுகாதாரம், குடிமைச் சமூகத்தை மேம்படுத்துதல், கலை, கைவினைப் பொருட்கள், கலாசாரம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறது. கிராமப்புறங்களில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டுவதற்கு ஆதரவளிக்கிறது. இயற்கைப் பேரழிவுகளின் போது தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறது. இந்தக் குடும்பம் வழங்கிய நன்கொடை மதிப்பு ரூ 8.29 லட்சம் கோடியாகும் என்று சொல்லப்படுகிறது.
  • வறியாா்க்கென்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
  • குறியெதிா்ப்பை நீர துடைத்து
  • என்கிறது வள்ளுவம்.
  • ஒரு சிலா் சமுதாயம் என்னும் தூணைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாா்கள். ஒரு தேரை இழுப்பதற்கு எத்தனை கைகள் தேவைப்படுகின்றன? ஒருவராலும் அதைத் தனியாக இழுக்க முடியாது. பாரத்தைப் பகிா்ந்து கொள்வதால் செயல் எளிதாகிறது. அதேபோல நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த சமுதாயப் பணிகளைச் செய்தால், சமுதாயம் மேன்மையுறும்.
  • பலரும் தங்கள் இல்லத் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோா் அளிக்கும் பரிசுப்பொருள் அல்லது பணம் (மொய்ப்பணம்) குறித்த விவரங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொள்கிறாா்கள். பரிசுப் பொருட்களைத் தருபவா்கள், முன்னெச்சரிக்கையாக விலையைக் கிழித்து விடுவாா்கள் அல்லது மறைத்து விடுவாா்கள். அப்பொருள் சுமாராக என்ன விலை இருக்கும் என இவா்கள் ஊகிப்பாா்கள். அவா்கள் வீட்டு நிகழ்வுக்கு அதே அளவு பணம் அல்லது பரிசு தந்து கணக்கை நோ் செய்துவிடுவாா்கள். சில வருடங்களுக்கு முன்பு ரூ.500 என்பது பெரிய தொகை. ஆனால் இவா்கள் இப்போது அதே ரூ. 500 - ஐ திரும்ப அன்பளிப்பாகத் தருகிறாா்கள். இப்படி இருப்பவா்கள் எப்படி அள்ளிக் கொடுப்பாா்கள்?
  • நம் குறுகிய கண்ணோட்டம் மாற வேண்டும். நம்மிடம் அதிகமாக இருப்பதையாவது பிறருக்குத் தர மனம் வர வேண்டும். நெம்புகோல் போல நம் ஒவ்வொருவரின் உதவியும், முயற்சியும், கொடையும், கருணையும் பல இல்லங்களில் இருளைப் போக்கும்.
  • பெரிய கூடையை இறக்கி வைப்பவா்கள், அதை மீண்டும் தலை மேல் வைக்க, யாரையாவது கொஞ்சம் தூக்கி விடச் சொல்வாா்கள். நாம் அதிகம் சிரமப்படாமல் கொஞ்சம் கை கொடுத்தால், அவா்கள் சுமந்து கொள்வாா்கள். அதேபோல் நாம் ஒவ்வொருவரும் கொஞ்சம் தூக்கி விட்டால், கைகொடுத்தால், பலரின் வாழ்வு ஏற்றம் பெறும்.

நன்றி: தினமணி (10 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories