TNPSC Thervupettagam

எளிய மக்களைக் கவனத்தில் கொள்க

August 11 , 2021 1179 days 608 0
  • வெள்ளை அறிக்கை தாக்கல்செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலையை அனைவரும் அறியச் செய்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
  • மாநில அரசின் கடன் மற்றும் செலவுகள் அதிகரித்து, வருவாய் குறைந்துள்ளதால் வரி உயர்வு மற்றும் பயன்பாட்டுக் கட்டண உயர்வுகள் தவிர்க்க முடியாதது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
  • பெருந்தொற்று நிவாரணம் ரூ.4,000 தேவைப்படாத வசதி படைத்தோருக்கும் சென்றடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது சிந்திக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
  • அரசுப் பேருந்துகளை ஒரு கிமீ இயக்கும்போது, அரசுக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்படுவதாகவும், மின்சார விநியோகத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.36 நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதன் மூலம், இந்த இரண்டு கட்டணங்களும் உயரப்போகின்றன என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளலாம்.
  • அதேபோன்று, குடிநீர் சுத்திகரிப்புக்கு ஆகும் செலவுக்கும், கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பிட்டுள்ளார்.
  • வாகனப் பதிவுக் கட்டணங்கள் 2008-க்குப் பின் உயர்த்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இந்தக் கட்டணங்கள் அனைத்தையும் உயர்த்தினால் மட்டுமே நிதி நிலையைச் சரிசெய்ய முடியும் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.
  • வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்துவது என்று முடிவாகிவிட்ட நிலையில், ஏழை, நடுத்தர, உயர்வருவாய்ப் பிரிவினர், வசதிபடைத்தோர் எனப் பலதரப்பட்டோர் வாழும் சமூகத்தில் அனைவருக்கும் ஒரே அளவுகோலில் வரிகளை உயர்த்துவது பொருத்தமாக இருக்காது என்பதே சாதாரண பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
  • ஒரே வீட்டில் குடியிருந்துகொண்டு, கடன் பெற்று மாதத் தவணை செலுத்துபவர்களுக்கும், பல வீடுகளை வாங்கிக் குவித்து வருவோருக்கும் ஒரே மாதிரியான வீட்டு வரி என்பது பொருத்தமற்றது.
  • ஒரு வீடு வைத்திருப்பவர்களுக்குக் குறைந்த அளவு வீட்டு வரியும், இரண்டாவது வீடு, மூன்றாவது வீடு அதற்கு மேல் வைத்திருப்போருக்கு இருமடங்கு, மும்மடங்கு வரிகளையும் விதிப்பதே பொருத்தமான நடைமுறையாக அமையும்.
  • அதேபோன்று, அன்றாடப் பயன்பாட்டுக்கு இருசக்கர வாகனம் வைத்திருப்போருக்குக் குறைந்த வாகன வரியும், இரண்டு, மூன்று, நான்கு கார்கள், வாகனங்கள் எனத் தேவைக்கு மிஞ்சிப் பகட்டுக்காக வைத்துள்ள வசதி படைத்தோருக்குக் கூடுதல் வரியும் விதிப்பதே நியாயமானதாக இருக்கும்.
  • மின்கட்டணத்தில் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்கக் கட்டண விகிதம் எப்படி மாறுபடுகிறதோ, அதேபோன்று தேவைக்கு அதிகமாகச் சொத்து வைத்திருப்போர், வாகனம் வைத்திருப்போர், குடிநீர் உபயோகிப்போருக்கும் கட்டண, வரி விகிதங்கள் மாறும் படியாக இருக்க வேண்டும்.
  • மிதமிஞ்சிய அளவில் சொத்து, வாகனம் வைத்திருப்போரிடம் வரிகளைக் கூடுதலாக வசூலித்து, நிதிநிலையைச் சரிசெய்ய வேண்டும்.
  • தன் தேவைக்கு மட்டுமே சொத்து, வாகனம் வைத்திருக்கும் ஏழை, எளியோரிடமும், குறைந்த அளவில் மின்சாரம், குடிநீர் பயன்படுத்துவோரிடமும் முடிந்தவரை குறைந்த கட்டணம் மற்றும் வரி வசூலிப்பதே நல்ல நிர்வாகத்துக்கு அழகாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories