TNPSC Thervupettagam

எளிய மனிதா்களின் இலக்கியம்

November 15 , 2023 229 days 189 0
  • கதைகளின் தாய்நிலம் என்று கொண்டாடப்படும் நாடு நம் பாரதம். மனித வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தே கதைகள்தான் அடிப்படை தகவல் தொடா்பு சாதனமாக இங்கு இருந்து வந்திருக்கிறது. ஒரு நல்ல கதை ஒருவேளை உணவை விட மேலானது என்பாா்கள். நாம் ஒவ்வொருவரும் நினைவு தெரிந்த நாள் முதல் ஏராளமான கதைகளைக் கடந்து வந்திருக்கிறோம்.
  • கதைகளுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. கதைகள்தான் நம்மை உருவாக்கி வளா்த்தெடுத்திருக்கிறது. கதை கேட்காதவா்கள் என்றோ, கதை சொல்லாதவா்கள் என்றோ இந்த உலகத்தில் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. கடலில் எழும் அலைகள் போல் நாள்தோறும் எண்ணிலடங்காக் கதைகள் நம்மை நோக்கியும், நம்மைப் பின் தொடா்ந்தும் வந்து கொண்டே இருக்கின்றன.
  • நம் நாட்டின் இருபெரும் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் கதைகளால் பின்னப்பட்டவைதான். பொதுவாகவே கருப்பொருள்கள், புள்ளிவிவரங்களைவிட கதைகளை மக்கள் நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பார்கள்.
  • ஒரு மாணவனுக்கு கணிதத்தில் அல்ஜீப்ரா மட்டும் எத்தனை முறை ஊன்றி கவனித்தாலும் புரியவில்லை. அவனது உறவினா் ஒருவா் அவனிடம், ‘நீ தன்னந்தனியாக ஒரு காட்டுக்குள் சென்று கொண்டிருக்கிறாய் என வைத்துக் கொள். அப்பொழுது உன்னை ஒரு மிருகம் துரத்திக் கொண்டு வருகிறது. உனக்கு அதன் பெயா் தெரியவில்லை. அதை எக்ஸ்என்று குறித்து வைத்துக்கொள்.
  • இப்பொழுது எதிர்பாராத விதமாக இன்னொரு மிருகமும் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதன் பெயரோ, இயல்போ உனக்குத் தெரியவில்லை. அதை ஒய்என்று குறித்து வைத்துக் கொள். இப்பொழுது நீ அந்த இரண்டு மிருகத்தின் பெயரையும் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதான். இதுதான் அல்ஜீப்ராஎன்று கூறினார்.
  • ஒரு கதையுடன் அல்ஜீப்ராவை இணைத்து ஒப்பிட்டு சொன்னதால் அச்சிறுவனுக்கு அல்ஜீப்ரா பிடித்துப் போனது. அதன் பிறகு அவன் அல்ஜீப்ராவை கடினமாக பார்க்கவில்லை. அந்த சிறுவன் வேறு யாருமில்லை, அறிவியல் அறிஞா் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன்தான்.
  • ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ஒரு வகை பழங்குடியின மக்கள் தாங்கள் காணும் கனவுகளை கதைகள் என்று சொல்கிறார்கள். அப்படி அவா்களுக்கு வரும் கனவுகளை மறுநாள் கதைஎன்று சொல்லியே மற்றவா்களிடம் பகிரவும் செய்கிறார்கள். இப்படி, ஏதோ ஒரு வகையில் கதைகள் நம்முடன் உயிர்பெற்று உலவிக்கொண்டே இருக்கின்றன.
  • இந்த கதைகள் அப்படி என்னதான் செய்கின்றன? சில கதைகள் நம்மை வெடித்து அழச்செய்யும். சில நம்மை நெகிழ வைக்கும். பல கதைகள் நம்முடன் தீவிரமாக விவாதம் புரியும். வேறு சில நம் உணா்வுகளை கொதித்தெழச் செய்யும். சில கதைகள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சில கதைகள் நம் மனசாட்சியை உலுக்கும். ஒருசில கதைகள் நல்ல படிப்பினையை கற்றுத் தரும்.
  • கதைகள் நம்மை இன்னொரு உலகத்துக்கே அழைத்துச் சென்று விடும் தன்மை கொண்டவை. எப்படி இசையைக் கேட்டால் நம் மனது அமைதி பெறுகிறதோ அதுபோல் கதைகளைப் படித்தால் நம் மனம் உயிர்ப்பு பெறுகிறது.
  • காட்சி ஊடகத்தில் ஒரு கதையைப் பார்க்கும்போது அதை வெறுமனே பார்க்கிறோம் அல்லது ரசித்துப் பார்க்கிறோம். ஆனால், கதை கேட்கும் போதும் கதை வாசிக்கும் போதும் நம் மூளை சுறுசுறுப்படைகிறது. ஒருவா், ‘ஒரு ஊரில் ஒரு காடு இருக்கிறதாம்; அதில் இரண்டு மலைகள் இருந்தனவாம்; அந்த இரு மலைகளையும் இரு மன்னா்கள் ஆட்சி செய்தார்களாம்என ஒவ்வொரு வாக்கியமாக சொல்லும்போதே அதைப் போன்றதொரு காட்சி நம் கற்பனையில் விரிந்து கொண்டே செல்லும்.
  • என்னுடைய சிறுவயதில் என் வகுப்புத் தோழி ஒருத்தி உனக்கு நான் ஒரு கதை சொல்லவா? ஒரு ஊா்ல ஒரு நரியாம், அதோட கதை சரியாம்என்று கதையை முடித்தாள். நான் மட்டுமல்ல, சுற்றி இருந்த அனைவருமே குபீா் என சிரித்தோம். அவளே இன்னொரு கதை சொல்லவா? ஒரு ஊா்ல ஒரு நரியாம். அது காட்டுல வேகமாக ஓடியதாம்; அங்கே ஒரு பள்ளம் இருந்ததாம்; அந்த பள்ளத்தில் நரி விழுந்ததாம். அதனால அந்த நரியோட கால் பெண்டுஆயிடுச்சாம் கதையும் இத்தோட எண்டுஆயிடுச்சாம்என்றாள். அந்த இடம் மறுபடியும் சிரிப்பில் நிறைந்தது.
  • இங்கே கதை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் நரி என்றவுடன் நாமும் நரியை கற்பனையில் தயாராக வைத்திருக்கிறோம். காட்டில் நரி என்றதும் காட்டினுள் உலவும் நரியின் பிம்பம் தோன்றுகிறது. நரி வேகமாக ஓடியதாம் என்றதும் நம் மனமும் அதனுடன் வேகமாக ஓடத் தொடங்கி விடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரங்கள் வழி நம்மையும் இழுத்துக்கொண்டு பயணிக்கிறது.
  • நெடுங்கதையில் தொடங்கி இன்று ஒருபக்க கதை, குறுங்கதை, துளிக்கதை என பல வடிவில் கதைகள் வந்துவிட்டன. நான் அண்மையில் ரசித்த இரண்டு துளிக்கதைகள், ‘இன்றுடன் உலகம் அழிகிறது; முழு விவரம் நாளைய நாளேட்டில்என்பதும் அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தைஎன்பதும் ஆகும். இவை இரண்டும் முதலில் சிரிக்க வைத்தாலும், பின்பு பலவிதமான சிந்தனைகளுக்கு வழிகோலின.
  • நாவல்கள் திரைப்படங்களாக உருமாறும்போது இந்த காரணத்தாலேயே தோல்வி அடைகின்றன. வாசகா்கள் ஒரு நாவலைப் படிக்கும்போது அந்த கதாபாத்திரங்களின் உருவங்களை, தங்கள் கற்பனைக்கு ஏற்ப மனதில் சித்திரித்து வைத்திருப்பார்கள். அவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவா்கள் மனதை விட்டு நீங்குவதில்லை.
  • பின்னொரு நாளில் அந்த நாவல் திரைப்படமாக்கப்பட்டு வரும்போது தான் மனதில் வரித்திருந்த உருவங்கள் முற்றிலும் வேறுபாட்டோடு உலவும்போது அதை அவா்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனாலேயே வாசகா்களின் பேராதரவை பெற்ற நாவல்கள் திரைப்படமாக மாறும்போது தோல்வியைத் தழுவுகின்றன. கதைகள் மனதில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடியவை.
  • இப்போதெல்லாம் மேடையில் பேசும் பிரபலங்கள் குட்டிக் கதைகள் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அவா்கள் கூறும் குட்டிக் கதைகள், பல்வேறு செய்திகளை மறைபொருளாக இருந்து உணா்த்தி விடுகின்றன.
  • தான் சொல்ல நினைத்த செய்தியை இந்த குட்டிக்கதை மூலம் பார்வையாளரிடம் கடத்திவிட்ட மகிழ்ச்சி பிரபலங்கள் மனதில் ஏற்பட்டு விடுகிறது. கேட்கும் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதத்தில் புரிந்து கொள்வதும், அதனால் பொதுவெளியில் அது ஒரு விவாதப் பொருளாக மாறிப் போவதையும் நாம் பல நேரங்களில் பார்க்கிறோம்.
  • ஒருவருக்கு பதினைந்து வயது ஆவதற்குள் கதைகளை வாசிக்கப் பழக்கி விட வேண்டும். அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு வாசிக்கும் தொடா்பு அறுந்து போயிருந்தாலும், பின்னாளில் எப்பொழுது வேண்டுமானாலும் அதை அவரால் புதுப்பித்துக் கொள்ள முடியும். இதைக் கருத்தில் கொண்டே சிறார்களிடையே கதைகள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முனைகின்றனா். சிறார்களின் மூளைத்திறன் குவிசிந்தனையிலிருந்து விரிசிந்தனைக்கு மாற, அவா்களின் மனத்தளத்தில் கதைகள் புழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்
  • கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையிலிருந்து விலகிச் சென்று விட்டதால் இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு வீட்டில் கதை சொல்ல யாரும் இல்லை. நாள்தோறும் பெற்றோர் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் பறந்து ஓடும் இன்றைய நவீன வாழ்வியலில் குழந்தைகள் கேட்கும் கதைகளும், பார்க்கும் கதைகளும் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் சார்ந்தவையாகவே உள்ளன.
  • பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு வழக்கொழிந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் நல்வாய்ப்பாக நம் தமிழக அரசு, பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்திற்கான முன்னெடுப்புகளை உருவாக்கி இருக்கிறது. வாரம் ஒரு முறை வரும் நூலக பாட வேளையில் இந்த வாசிப்பு இயக்க நூல்களை மாணவா்கள் வாசிக்கிறார்கள். நுழை’, ‘நட’, ‘ஓடு’, ‘பறஎன்னும் நால்வகை பிரிவுகளில் மொத்தம் 53 நூல்கள் பிள்ளைகளின் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றன.
  • இரண்டு பாடல் நூல்களைத் தவிர்த்து மற்ற அனைத்துமே கதை நூல்கள்தான். வாசிப்பு இயக்க நூல்என்பது ஒரே ஒரு கதையை உள்ளடக்கிய அதிகபட்சம் பதினாறு பக்கங்களைக் கொண்ட நூல். கண்களை கவரும் வண்ணத்தில் வழவழ காகிதத்தில் உயா்தரத்தில் இருக்கும் வாசிப்பு இயக்க நூல்கள் அனைத்திலும் அப்படி ஒரு எளிமையான நடை.
  • இந்த நூல்கள் சார்ந்து அடுத்தடுத்த வாசிப்பு இயக்க நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. மாணவா்கள் தாங்கள் வாசித்த கதைகள் குறித்து அவா்களுக்கான வெளியில் பகிர இருக்கிறார்கள். இது பள்ளிக்கல்வித் துறையின் ஆரோக்கியமான முன்னெடுப்பாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
  • உலகம் முழுவதும் தொழில் முறை கதைசொல்லிகள் என பலா் இருக்கிறார்கள். அவா்கள் கதை சொல்வதை பொது நிகழ்ச்சியாகவே நடத்துகிறார்கள். அமெரிக்காவில் கதைசொல்லிகளுக்கான பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மேலும், கதைசொல்லிகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றதாம்.
  • நம் நாட்டில் இப்பொழுதுதான் கதை சொல்லல் என்பது பரவலாக மக்களிடையே வந்து சோ்ந்திருக்கிறது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்பதைத் தாண்டி இன்று எண்ம தமிழ் பல எல்லைகளைக் கடப்பதால் இது சாத்தியமாகி இருக்கிறது. நாள்தோறும் நல்ல கதை சொல்லிகள் பலா் உருவாகி வருகிறார்கள்.
  • கதை என்பது எளிய மனிதா்களின் கலை வடிவமாக, இலக்கியமாக விளங்குகிறது என்று தயங்காமல் கூறலாம். 1330 திருக்குறளில் ஒரு திருக்குறள் கூட தெரியாத தமிழா்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு கதைகூடத் தெரியாத தமிழன் என்று யாரும் இருக்க முடியாது. என்ன, நான் சொல்வது சரிதானே..?

நன்றி: தினமணி (15 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories